தமிழ்திரையில் பிறமொழி பாடகர்-அட்னன் சாமி(Adnan Sami)

தமிழ்திரையில் அவ்வளவாக பிரபலமாகாத திறமையான வேற்று மொழி பாடகர்களை பற்றி சில தகவல்களை அறியத்தருதல் இப்பதிவின் நோக்கம். இன்று நாங்கள் பார்க்கப்போவது மொழு மொழு என்று குண்டு பூசணிக்காய் போன்று இருந்த ஒரு சிறந்த திறமையான பாடகர் அட்னன் சாமியை பற்றி.

அட்னன் சாமி யின் பழைய தோற்றம்

தமிழ்திரையுலகை பொறுத்தவரை இவரை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் தமிழில் இவர் பாடியது மொத்தம் 6 பாடல்கள்தான். ஆனால் ஹிந்தியிலோ இவரது அல்பங்களுக்கு மிகவும் கிராக்கி.

அட்னன் சாமி யின் புதிய தோற்றம்

இங்கிலாந்தில் 1973 ஆகஸட் 15 பிறந்த இவர் பொலிவூட்டின் பிரபல பாடகரும் இசையமைப்பாளரும் ஆவார். Sargam(1995) படத்தில் தன்னை நடிகராக வெளிக்காட்டினார். இவரது அப்பா பாகிஸ்தானியர் அம்மா இந்தியர்.

மிகவும் பருத்த தோற்றத்தை கொண்டிருந்த இவர் முன்பு அதாவது 2006 அளவில் 200kg ற்கும் மேற்பட்ட நிறையை கொண்டிருந்தார். பின்பு டாக்டர்கள் கொடுத்த கடுமையான எச்சரிக்கையின் பின்(உயிரோடு இன்னும் 6 மாதம்தான் இருக்க முடியும் என), ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 117kg அளவில் எடையை குறைத்து அழகான திடகாத்திரமிக்க ஒருவராக மாறினார் இவர். பருத்த உடலை கொண்டு நடக்ககூட முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாய் அமைந்தது. ”முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை“.இவர் நீண்டகாமாக பொலிவூட்டின் கனவுகன்னியான அமீஷா பட்டேலுடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அந்த வதந்திக்கு ஒரு முடிவுகட்டப்பட்டது. தன்னை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி இவரது மனைவி சபா கலதாரி தாக்கல் செய்த வழக்கால் அட்னன் சாமி முன்பு பரபரப்பாக பேசப்பட்டார். இவர்கள் இருவருக்குமான விவாகரத்திற்கான வழக்கு 2009ல் இன்னும் தீர்ப்பு கொடுபடாமல் குடும்ப நீதிமன்றத்தில் இருந்தது. நாங்கள் இப்ப கதைச்சுக்கொண்டிருக்கிறது இவரது 2வது மனைவியை பற்றி. இவரது முதலாவது மனைவி ஷிபா பாக்தியரை ஏற்கனவே 1997ல் விவாகரத்து செய்திருந்தார்.

மனைவி சபாவுடன் அட்னன் சாமி

Indian Classical Musicஐ Electric Pianoல் முதன்முதலில் இசைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் தமிழ் பாடிய பாடல்கள் மிகவும் சொற்பமாக இருந்ததனாலேயோ என்னவோ இவரால் தமிழில் பிரபலமாக முடியவில்லை. ஆனால் இவரின் குரலில் ஒரு காந்தத்தன்மையை இவரின் பாடலை கேட்பதன் முலம் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். இவர் தமிழில் பாடும்போது தமிழை கொலை செய்துபாடுவது போல உணரப்பட்டாலும் (பெரிசுகளுக்கு நிச்சயம் பிடிக்காது) இவரது உச்சரிப்பில் ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கிறது.


தமிழிற்கு பாடகராக இவரை A.R.Rahman, BOYS படம் மூலம் கூட்டிவந்தார். பின்னர் ஆயுத எழுத்து படத்தில் இன்னோர் பாடலுக்கு வாய்பு கொடுத்தார். பின்னர் வித்தியாசாகர் Sullan படத்தில் ஒரு பாடலுக்காக இவரை பயன்படுத்தினார். இவர்களை தொடர்ந்து யுவன்சங்கர் ராஜா சத்தம் போடாதே, சிவா மனசுல சக்தி படங்களில் சந்தர்ப்பம் வழங்கினார். அண்மையில் Colonial Cousins (லெஸ்லி லூயிஸ் + ஹரிகரன்)ன் இசையமைப்பில் சிக்குபுக்குவில் ஒரு மெலடி பாடல் பாடினார்.

அட்னன் சாமி தொடர்ச்சியாக பொலிவூட்டின் பிரபலங்களை கொண்டு அல்பங்களை சிறப்பாக தயாரித்து வருகிறார்.

தமிழில் இவர் பாடிய பாடல்கள்
A.R.Rahman ன் இசையில்
ஆயுத எழுத்து திரையில் ”நெஞ்சம் எல்லாம் ..” சுஜாதாவுடன்
Boys ல் ”பூம் பூம் BooM BooM " சாதனா சர்கத்துடன்

வித்தியாசாகரின் இசையில் 
சுள்ளான் திரையில் ”கிளுகிளுப்பான காதலியே” பிரேம்ஜி அமரன் மற்றும் சாலினி சிங்குடன்

யுவன்சங்கர் ராஜா இசையில்
சத்தம் போடாதேயில் ”ஓஇந்த காதல் எனும் பூதம்” யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியிருந்தார்
சிவா மனசுல சக்தியில் “ஒரு கல் ஒரு கண்ணாடி..”
இந்த கடைசி பாடலில் இரு Versionகள் இசைதட்டுகளில் வெளியாகியது. ஒன்று அட்னன் சாமி பாடியது மற்றது யுவன்சங்கர் ராஜா பாடியது. பாவம் திரைப்படத்தில் வெளியாகியது என்னவோ யுவன்சங்கர் ராஜா பாடியதுதான். ஆனால் இரண்டும் ஒரே பாடல் என்ற போதும் எனக்கு பிடித்திருந்தது அட்னன் சாமி பாடியதுதான்.

Colonial Cousins (லெஸ்லி லூயிஸ் + ஹரிகரன்)ன் இசையமைப்பில்
சிக்குபுக்கு திரையில் "விழிஒரு பாதி"பாடல் சுஜாதாவுடன்


இதோ கீழே உங்களுக்காக இவர் பாடி தோன்றிய ஹிந்தி பாடல் ஒன்றின் Video


கசப்பான அந்த நாள்-II

இதற்கு முந்தைய பதிவை தவறவிட்டோர் இணைப்பை கிளிக் செய்யவும். அதன் தொடர்ச்சி கீழே பதியப்பட்டுள்ளது.
Link (click here)

இதன் முழுமையான பாகங்களுக்கு இங்கே கிளிக்குக 1  2   3   4

நேரமும் மதியம் கடந்து 3மணியை தாண்டி கொண்டிருந்தது. எனினும் இத்தனைக்கும் எங்களுக்கு உதவியாக சில பெரும்பான்மை இன நண்பர்கள் கூடவே இருந்தனர். நிலமையை அவதானித்தபோது அன்று எமது பழைய இருப்பிடங்களில் தங்குவது உசிதமாகாது என்று தெட்டதெளிவாக விளங்கியது. ஏனெனில் பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே, தமிழ் மாணவர்களை‌ தேடி, எங்கள் இருப்பிடங்களிலும் வீதிகளிலும் காடையர் குழுக்கள் ஓடுப்பட்டு திரிவதாக தகவல்கள் கிடைத்திருந்தன.


மொறட்டுவ பல்கலைகழக Library


கொழும்பிலுள்ள எங்களது உறவினர்களின் வீடுகளிலேயே தங்கவேண்டிய நிலை அதற்கு ஒருத்தரிடமும் பொலிஸ் பதிவு இல்லை(Police Report). சிலருக்கு இருப்பதற்கு உறவினர்கள் கொழும்பில் இல்லை. அவ்வாறான நிலையில் நண்பர் ஒருவர் ”பேசாம இண்டைக்கு இரவு கம்பஸிலேயே எங்கயாவது ஒளிச்சிருந்துட்டு பிறகு பாப்பம்” என்றான் பரிதாபமாக. வேறு இடங்களில் தங்க தற்காலிக பொலிஸ் அனுமதியை பெற்றுதர எங்களுடன் நின்ற சிங்கள நண்பர்களின் உதவியால் ஒரு Lecturer உடன் கதைத்து பெயர்கள் பெறப்பட்டபோதும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனிடையே முக்கிய ஆவணங்களை தங்குமிடங்களில் விட்டுவந்த சிலர் அவற்றை எடுக்க RISK எடுத்து (அந்த தருணத்தில் கம்பஸை விட்டு வெளியே  செல்வது உயிருக்கு உலை வைப்பதற்கு ஒப்பானது). வெளியே செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர். எங்கள் அறைத்தொகுதியில் இருந்த இருவர் அவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

எத்தனை இடப்பெயர்வுகளை சந்தித்த நாங்கள் மீண்டும் ஒரு இடப்பெயர்விற்கு தயாராகின்றோம் என உணர்ந்து கொண்டோம். இடம்தான் வித்தியாசம் இப்போது மொறட்டுவ கட்டுபெத்தயில்.

தாக்குதலுக்கு இலக்கான 255 பஸ்

சுற்றுபுறசூழலில் காணப்பட்ட நிலமையை கருத்தில் கொண்டு தமிழ் மாணவர்கள் பத்திரமாக Campusஐ விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு செல்ல Campus நிர்வாகம் பஸ் வசதியை ஒழுங்கு செய்வதாக அறிந்து கொண்டோம். அதற்காக பெயர்களை பதிவதற்காக Officeற்கு செல்லவேண்டும். கம்பஸிலிருந்த பொலீஸின் கண்ணில் படாமல் செல்லவேண்டும். அம்பிட்டால் கைதுதான் மறுபேச்சில்லை.

நாங்கள் இருந்த வகுப்பிலிருந்து Officeற்கான தூரம் சற்று அதிகம். தமிழர்கள் எண்டு தெரிந்தால் கைது நிச்சயம். ஏனினும் நாங்கள் பொலீஸின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தயங்கி தயங்கி சேரவேண்டிய இடத்திற்கு வந்திருந்தோம். எல்லோரும் பேயடிச்சதுபோல நன்றாக குழம்பியிருந்தனர்.

இதற்கிடையில் Hostelலிலிருந்த இருந்த பெரும்பாலான சிரேஷ்ட மாணவர்கள் ஏற்கனவே கொஞ்ச கொஞ்சமாக பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்திருந்தனர். எனது சகோதரரும் Hostelலேயே இருந்தார். அவரும் தகவல் அறிந்து Campusனுள் வருவதற்காக தேவையான சில பொருட்களை எடுத்து கொண்டு வரமுயன்றபோது பின்வாசல் வழியாகவும் முன்வாசல் வழியாகவும் உள்ளே வருதல் தடை செய்யப்பட்டிருந்தது.


நான் உள்ளே, அண்ணா உயிருக்கு உத்தரவாதம் இல்லாது வெளியே. உள்ளே வர கடும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தபோது, வெளியே இருந்து வந்த பல வதந்திகள் மிகவும் குழம்பியிருந்த எனக்கு மேலும் பயத்தை கொடுத்தது. அழுகை அழுகையாக வந்தது. படிக்க என்று வந்து இப்படி மாட்டிக்கொண்டோமே என நினைத்துக்கொண்டேன். கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு போனில் அண்ணாவுக்கு தொடர்பை ஏற்படுத்த முயன்றேன். வெளியே உள்ள பதட்ட சூழ்நிலை காரணமாக அவரால் அழைப்பை ஏற்க முடியவில்லை. எனக்கே இதயதுடிப்பு எகிறி கொண்டிருந்தது.

இந்த பஸ்ஸை தவறவிட்டால் அதேகதிதான். வேறு வகையால் செல்வது அந்த நேரத்தில் சாத்தியம் இல்லை.

இன்னும் கொஞ்சம் இருக்கு அது பின்பு வரும்........ இங்கே

இதை மாதிரி இன்னும் எத்தனையோ???

இதற்கு முதல் எழுதினதையே இன்னும் முடிக்கவில்லை. எனினும் காலத்தின் தேவை கருதி அதற்கு முன் இந்த அஞ்சலியை பதிவுசெய்கிறேன்.


இன்று மதியம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எனது வீட்டிலிருந்து வந்த தகவல் என்னை நிலைகுலைய செய்துவிட்டது. ”கு‌பேரன் அண்ணா May10 செத்துட்டாராம்” என்பதுதான் அது. இன்று June11. ஒரு மாதத்திற்கு பின்பு தகவல் கிடைத்துள்ளது.


எனக்கு சின்னனிலிருந்தே அவரை எனக்கு தெரியும். என்னைவிட 5 வயது மூத்தவா். எங்கள் வீட்டிற்கு மிகவும் அருகில்தான் அவா்களின் வீடும் இருந்தது. துடிப்பான திறமையான இளைஞன் அவா். Cricket, Carom, Cards விளையாட்டுக்களை நான் அறிந்ததே அவரிடமிருந்துதான். யாழ்ப்பாணம் Stanely College ன் Cricket, Football அணியில் இடம்பிடித்த வீரா். அந்தக்காலத்திலேயே அவருக்கு TV, Radio படங்கள் போன்றவற்றில்‌ அதீத ஈடுபாடு இருந்தது. வீட்டில் எதாவது படம் போடப்போகின்றோம் என்றாலோ, TV Radio ல் எதாவது பிழை என்றாலோ கூட அவரைக்கேட்டுதான் எதாவது செய்வோம்.

A/L ல் வா்த்தகதுறையில் கற்ற இவா் சிறப்பாக பரீட்சையில் சித்திஅடைந்து கிளிநொச்சியில் வேலைகிடைத்து சமாதான காலத்தில் அங்கே சென்றார். அவரது மூத்த அண்ணா அங்கேயே திருமணம் முடித்து இருந்தார்.

அவரை பற்றிய தகவல்கள் யுத்தம் மூர்க்கமான பின் அறிய முடியாமல் இருந்தது. இன்றுதான் வந்தது அந்த கொடிய செய்தியுடன். ஒரு நேர கஞ்சிக்காக lineல் அவர் நின்றபோது வீழ்ந்து வெடித்த ஷெல்லினால் அவரது உயிர் காவுகொள்ளப்பட்டதாம். இன்னும் அவரின் அண்ணனை பற்றிய சரியான தகவல்கள் இல்லை.


அவரும் நாங்களும் சோ்ந்து வீட்டின் முன் உள்ள வீதியில் விளையாடிய அந்த கணங்கள், இன்னும் கண் முன்னே!!!!
என்ன செய்வது கத்தி அழத்தான் உங்களுக்காக எங்களால் செய்ய முடியும் அண்ணா. உங்கள் அத்மா சாந்தியடையட்டும்.

இதை ஒத்த 20 000 ற்கு மேற்பட்ட சோகசுமைகளுடன் இருக்கிறது வன்னி மண். மக்களே அற்ப சொற்ப சுகங்களுடன் தயவுசெய்து பழசை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

கசப்பான அந்த நாள்-I

இந்தப்பதிவு நாங்கள் (மொறட்டுவ பல்கலைகழக தமிழ் மாணவர்கள்) அனுபவித்த சில பல கஷ்டங்களையும் உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக மட்டுமே பதியப்படுகிறது. வேறு எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் அல்ல.

இதன் முழுமையான பாகங்களுக்கு இங்கே கிளிக்குக 1  2   3   4

சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் இன்று. 2008 ஜுன் 06 ம் திகதி இதே நாளில்; கம்பஸில் 8மணி Lectureற்கு போவதற்காக 7.40 அளவில் குளித்துக்கொண்டிருந்தேன். திடீரென "தொம்" என்று பலத்த அதிர்வுச்சத்தம அண்மையில் கேட்டது. சத்தத்தை கேட்டதும் விசயம் விபரீதம் என உணர்ந்து கொண்டேன்.  (அந்தக்காலத்தில் இத்தகைய சத்தங்களின் காரணம் என்னவாக இருக்குமென ஊகிப்பது நாளைக்கு சூரியன் உதிக்குமா என்று சொல்வதை போன்றது!). நானும் உடனே குளித்த பாதி குளியாத பாதியாக வெளியே வந்து என்ன நடக்கிறது அறிய முற்பட்டேன். சில கண‌நேரத்தில் வீதியால் மக்கள் குழப்பத்துடன் ஓடுப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

மொறட்டுவ பல்கலைகழக முகப்பு தோற்றம்


மொறட்டுவ பல்கலைகழகத்திற்கு முன்பாக ஏறத்தாழ 300மீட்டர் தொலைவில்தான் அமைந்திருந்தது நானும் எனது நண்பர்களும் தங்கியிருந்த அறைதொகுதி. மொத்தம் 5 அறைகளில் 11 பேர்வரை தங்கிஇருந்திருந்தோம். கொட்டம் அடித்திருந்தோம் முழுவதும் தமிழர்கள்.

குண்டு வெடிப்பொன்று மிக அருகில் நடந்தவிட்டதை எங்களால் உறுதிப்படுத்த ஒரு சிலகணங்களே பிடித்தது. அயலில் உள்ள பொது மக்களும் அதையே சொன்னார்கள். ஓடிச்சென்று வானொலிபெட்டியை முறுக்கிவிட்டு Breaking News ற்காக காத்திருந்தோம். ”கொட்டாவவிலிருந்து கல்கிஸை நோக்கி சென்று கொண்டிருந்த 255 busல் , கட்டுப்பெத்த சந்திக்கு அருகாமையில், குண்டு வெடித்துள்ளது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது” என்று செய்தி கூறியது. செய்தியை கேட்டு முடித்தவுடன் கையில் அகப்பட்ட கொப்பி ஒன்றுடன் கம்பஸிற்கு நடக்க ஆரம்பித்தேன். வீதியின் இருமருங்கிலும் மக்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர். அங்கு சென்று ”கொட Canteen”ல் TV Newsஐ பார்த்து பல (28) அப்பாவி சிங்கள ‌ பொதுமக்கள் கொல்லப்பட்டதை அறிந்து கொண்டேன்.
குண்டுதாக்குதலுக்குள்ளான பஸ்வண்டி

சம்பவம் இடம் பெற்ற இடம் மொறட்டுவ பல்கலைகழகத்திலிருந்து 2 Bus halt தூரத்திலேயே இருந்தது. ஏறத்தாழ 500 மீட்டர் தூரம்.

இச்சம்பவம் ஒரு கலவரமாக மாற கூடிய நிலமை காணப்பட்டதால் கம்பஸிற்கு வராமல் அறைகளில் தங்கியிருந்த தமிழ் மாணவர்களை நாங்கள்  (அந்தவேளையில் கம்பஸில் இருந்தோர்) கம்பஸிற்கு அழைத்தோம். Hostleல் இருந்த Seniorமாணவர்கள் பாதுகாப்பு கருதி அங்கேயே இருந்தனர்.

கம்பஸ் வளாகத்தில் ஒன்று சேர்ந்த நாங்கள் வீண்சிக்கலை தவிர்க்கும் பொருட்டு தமிழில் கதைப்பதை தவிர்த்து கொண்டோம். எனினும் வழமைபோல ஒன்றாகவே சேர்ந்து நின்றுகொண்டிருந்தோம். கம்பஸிற்கு வெளியே மிகவும் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதாக அறி்யகிடைத்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்தின் பின்னர் தேடுதலுக்கு நியமிக்கப்பட்ட பொலீஸார் அந்த Area முழுவதையும் சோதனை செய்தபடி பல்கலைகழக வளாகத்திற்கும் வந்தனர். நாங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு Classல் போய் சத்தம் போடாது இருந்து கொண்டோம். அவர்கள் ஒவ்வொருவராக NIC, Campus IC கேட்டு ‌சோதனை இட்டவாறே எங்களிடமும் வந்து விசாரித்துவிட்டு சென்றனர். எனினும் அந்ததருணத்தில் கம்பஸைவிட்டு மாணவர்கள் வெளியேறுவது தடைசெய்யப்பட்டுருந்தது.

நானும் நண்பர்களும் இருந்த classஐ கொண்ட Civil department Building

இவ்வளவுதான் பிரச்சனை இல்லை எல்லாம் அமைதியாக முடிந்துவிடும் என நினைத்தபடி இருந்தோம். நேரமும் மதியத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. நானும் இன்னும் சிலரும் மதிய சாப்பாட்டை L-Canteenல் சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது தமிழ் மாணவர்கள் சிலர் பொலீஸாரால் பிடிக்கப்பட்டு விசாரிப்பதற்காக மொறட்டுவ காவல்நிலயத்திற்கு கொண்டு செல்லப்படுவதை அறிந்தோம். அதேபோல் சிறுசிறு குழுக்களாக கம்பஸ் வளாகத்தில் திக்கு திக்காக நின்ற ,பொலீஸாரின் கண்களில் பட்ட தமிழ்மாணவர்கள் ஒவ்வொருவராக காரணம் எதுவுமின்றி கைது செய்யப்பட்டு பொலிஸ்நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.

எனவே நாங்கள் அனைவரும் வெளியே நடமாட முடியாதபடி அதே Classற்குள் முடக்கப்பட்டோம். இந்த நேரத்தில் கம்பஸ் வழாகத்தில் என்ன நடக்குது என பாக்க சென்றோரும் , அவசரத்திற்கு(1) சென்றோருமென பலர் பிடிபட்டு, எங்களோடு கூட அந்த வகுப்பறையில் இருந்த தமிழ் நண்பர்களின் தொகை அப்போது பாதியாக குறைந்திருந்தது.

மிகுதி அடுத்ததில் வரும்.......... இங்கே

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்