SLPLன் வளர்ச்சி எதிர்காலம்

டிஸ்கி: யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கேடயம் சஞ்சிகையில் எழுதின பதிவு இங்கே.

இந்தியாவில் 2008ல் ஆரம்பிக்கப்பட்ட Indian Premier Leagueன் பாரிய வெற்றி பல நாடுகளிடையே இதே பாணியில் போட்டிகளை நடாத்தும் ஆசைக்கு வழி கோலியது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் உள்ளுர் போட்டிகள் நடைபெற்று Champions Leagueற்கு அணிகள் தெரிவாகின்ற வழமை இருந்த வருகின்ற போதிலும் IPLஐப் போலவே பெரும் எடுப்பில் வெளிநாட்டு வீரர்களையும் சோ்த்து ஒரு Cricket Carnival போல அந்த உள்ளுர் போட்டிகளை நடாத்தி பல விதங்களிலும் நன்மையை பெறவேண்டும் என்ற மனப்பாங்கு IPL வெற்றியின் பின்புதான் பல கிரிக்கெட் சபைகளிலும் உருவானதென்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின்பே 2011-2012ல் அவுஸ்திரேலியாவில் Big Bash Leagueம், 2012ல் Bangladesh Premier Leagueம் 2012ல் Sri Lanka Premier Leagueம் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் முதல் SLPL, 2011ல் July19-August4 வரை நடாத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியா உட்பட பல நாடுகளின் கிரிக்கெட்சபைகள் SLPLக்கு தங்களது நாட்டு வீரர்களை அனுப்புவதற்கு சம்மதித்தும் இருந்தார்கள். ஆனால் இந்தியா திடீரென முடிவை மாற்றி தங்கள் வீரர்களை SLPLல் விளையாட அனுமதிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். ஏற்கனவே சம்மதித்து விட்டு இந்திய கிரிக்கெட் சபை கடைசி நேரத்தில் காலை வாரியது பெரும் ஏமாற்றத்தையும் கவலையும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு இந்திய கிரிக்கெட்சபை முதலில் கூறிய காரணம், SLPL போட்டிகளை வர்த்தகப்படுத்தும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் சபையால் அங்கிகரிக்கப்பட்டு சிங்கப்பூரை தளமாக கொண்டு இயங்கும் Somerert Entertainment Ventures (SEV) நிறுவனத்திற்கு 5 வருடங்களிற்கு வழங்கப்பட்டிருந்தது. இவர்களினுாடாகவே SLPLல் விளையாடும் வீரர்களின் ஒப்பந்தமும் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த வீரர்களின் ஒப்பந்தம் இலங்கை கிரிக்கெட்சபையால் வழங்காது போட்டியை நடாத்தும் நிறுவனத்தால் வழங்கப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்று இந்திய கிரிக்கெட்சபை கூறியிருந்தனர். மேலும் IPL போட்டிகளில் வீரர்களின் ஒப்பந்தங்கள் BCCIயாலே வழங்கப்பட்டது என்றும் இவ்வாறு போட்டியை நடாத்தும் SEV நிறுவனம் இதை கையாள்வதால் வீரர்களின் பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஒரு முறைகேடுகள் நடைபெறலாம் எனவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்திய வீரர்களை அனுமதிக்கவில்லையென்றும் இந்திய கிரிக்கெட் சபை முகத்திலடித்தது போல கூறிவிட்டது. 

எனினும் SLC அவர்களை சமாதானப்படுத்தி இந்திய வீரர்களை உள்ளே எடுப்பதில் கடும்பிரயத்தனம் செய்திருந்தது. வீரர்களுக்கான ஒப்பந்தங்களில் குளறுபடி நடக்காது எனவும் SLC அதற்கு தாங்கள் பொறுப்பென்று உறுதிமொழி கொடுத்தும் கூட BCCI தங்கள் முடிவில் மாறாது இருந்தது. இந்திய கிரிக்கெட்சபை வீரர்களின் சம்பள விடயத்தில் பயந்தமைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. இந்தியாவில் இந்த போட்டிகளை ஒளிபரப்புவதற்கு அப்போது SLC ஒரு TV Channelஇடமும் உரிமையை விற்றிருக்கவில்லை. இலாபம் கொழிக்கும் இந்திய சந்தையில் இவர்களால் SLPLஐ வியாபாரப்படுத்த முடியாவிட்டால் SLCயால் இந்த போட்டி தொடரால் இலாபத்தை பெற்று வீரர்களுக்கு வழங்க முடியாமல் போகுமென்று இந்தியா கிரிக்கெட்சபை பயந்தது என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் உண்மையில் இந்தியா வீரர்களை அனுப்பாமைக்கான இன்னொரு காரணமும இருந்ததது. SLPLஐ பின் நின்று நடத்துபவர் பழைய IPLன் பொறுப்பாளரும் பின்னர் BCCIயுடன் முரண்பட்டு குற்றம் சாட்டப்பட்டவருமான லலித் மோடிதான் என இந்தியா சந்தேகித்தது. லலித் மோடிக்கும் போட்டித்தொடரை நடாத்தும்  Somerert Entertainment Ventures(SEV)க்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக BCCI குற்றம் சாட்டியது. அதற்கு SLCயும் SEVம் உடனேயே மறுப்புத்தெரிவித்திருந்தது. மேலும் SEV, லலித்மோடி பங்குதாரராகவோ இணைப்பாளராகவோ தற்போதோ கடந்த காலத்திலேயோ  தங்கள் நிறுவனத்துடன் இருக்கவில்லை என்று கூறியிருந்தது. அதோடு SLCயுடன் தங்கள் நிறுவனம் சேர்ந்து நடாத்தும் எந்த போட்டிகளிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ லலித்மோடிக்கு சம்பந்தம் இல்லை என்று உறுதிபட தெரிவித்திருந்தது. ஆனாலும் அதன்பின்பும் இந்தியாவின் முடிவில் மாற்றம் இருக்கவில்லை.

இப்படியாக பல பிரச்சனைகளை எதிர்கொண்ட SLC முதலாவது SLPLஐ 2011 Julyல் நடாத்தும் முடிவை கைவிட்டு 2012 Augustல் நடாத்துவதாக முடிவெடுத்தது. ஒளிபரப்பும் உரிமையை ESPN STAR Sports 2012 July அளவில் பெற்றுக்கொண்டது. Bangladesh, Bhutan, Cambodia, Hong Kong, Indonesia, Korea, Nepal, Macau, Malaysia, Maldives, Pakistan, Papua New Guinea, Philippines, Singapore, Sri Lanka மற்றும் Thailand போன்ற நாடுகளில் ஒளிபரப்பும் உரிமையை இவர்கள் வைத்திருக்கிறார்கள்.  ஒரு பெரிய்ய விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனத்திடம் SLPLன் உரிமை சென்றது பணவிடயத்திலும் SLPLன் பிரபலப்படுத்தலிலும் ஆரோக்கியமான விடயம் என்றே சொல்லலாம். பல குத்தல்கள் குடையல்களுடன் தொடங்கப்பட்டாலும் ஒரு மாதிரி 2012ல் இலங்கை கிரிக்கெற் இந்த போட்டி தொடரை நடாத்தி முடித்துவிட்டது. 

நடந்து முடிந்த முதலாவது SLPLல் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே நடைபெற்று முடிந்தது. தொடங்கும்போது பல தரப்பிலும் காணப்பட்ட குறைந்தமட்டத்திலான எதிர்பார்ப்பு இந்த முதலாவது SLPLஐ ஒருவாறு கரையேற்றிவிட்டது. வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்சபைக்கும் வருவாயை ஈட்டுக்கொடுத்தாலும் அணிகளின் உரிமையாளர்களுக்கு நட்டத்தையே விட்டுச்சென்றிருக்கிறது. போட்டியை நேரே சென்று பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்த போட்டிக்கான எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. கண்டியில் நடைபெற்ற போட்டிகளையும் கொழும்பில் நடைபெற்ற போட்டிகள் ஒன்ரிரண்டையும் தவிர மிகுதி அனைத்து போட்டிகளிலும் பார்வையாளர்கள் இல்லை என்று கூறுமளவுக்கு வெகு சொற்பமான அளவு ரசிகர்களே வந்திருந்தனர். பல போட்டிகளுக்கு இலவச ரிக்கெட்கள் வழங்கப்பட்டபோதும் ரசிகர்களை சராசரி அளவில் கூட மைதானத்திற்கு கொண்டுவர இந்தப்போட்டிகளால் முடியவில்லை. இலங்கையில் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தோர்கூட வெகு சொற்பமே.

மொத்தமாக 7அணிகள் கலந்து கொண்டு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. இதில் வட மாகாணத்தை UTHURA RUDRASம் கிழக்கு மாகாணத்தை NAGENNAHIRA NAGASம் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. தமிழ் வீரர்களுக்கு இலங்கை அணயில் வாய்ப்பளிக்கப்படும் என்று ஆங்காங்கே கூறிவரும் அமைச்சர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை சேர்ந்தவர்கள் இந்த SLPL போட்டிகளில் வடக்கு கிழக்கிலிருந்து ஒரு உள்ளுர் தமிழ் வீரரையும் சேர்க்கவில்லை. இந்த போட்டிகளில் விளையாடிய பல வீரர்கள் ஒழுங்காக பிடிகளை கூட எடுக்காமல் சொதப்பியதோடு ஒப்பிடும்போது என்ன அடிப்படையில் ஒரு வடக்கு கிழக்கு வீரர் கூட இவர்களின் கண்களுக்கு படவில்லை. வடக்கு கிழக்கில் பல கிரிக்கெட் கழகங்கள் இப்படியான T20 போட்டிகளில் உள்ளுரில் விளையாடிவரும் நிலையில் பல திறமையான வீரர்கள் இருக்கின்ற நிலையில் இவர்களுக்கான வாய்ப்பு இப்படியான ஒரு முதல் தர கிரிக்கெற் போட்டிகளிலேயே வழங்கப்படாது விட்டது, இலங்கை அணியில் வடக்கு கிழக்கு வீரர்கள் எதிர்காலத்தில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பை முற்றிலும் கேள்விக்குரியதாக்கியுள்ளது. 

எனினும் இந்த போட்டி தொடரினூடாக எதிர்கால இலங்கை அணிக்கு வரக்கூடிய பல திறமைகள் கண்டறியப்பட்டுள்ளமை இந்தப்போட்டித்தொடரின் வெற்றியும் வீரர்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமும் ஆகும். முதற்கட்டமாகவே இந்த SLPLலிலிருந்து இரு வீரர்கள் உலககிண்ண T20 இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். துடுப்பாட்ட வீரர் டில்சான் முனவீரவும் பந்துவீச்சாளர் அகில தனன்சயவுமே அவர்கள்.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்