தினகரன் பத்திரிகையால் சுடப்பட்ட எனது பதிவு!


போன வாரம் எனது தளத்தில் "உலகத்தரத்தில் தமிழர்கள் - NetBall வீராங்கனை தர்ஜினியுடன் நேர்காணல்" எனும் தலைப்பில் பிரசுரித்த பதிவொன்று (பேட்டியொன்று) அப்படியே அச்சொட்டாக களவாடப்பட்டு, ஒரு அறிவறுத்தலும் எனக்கு தரப்படாது நேற்று 2011 Augus 11ல் ”தினகரன்” பத்திரிகையில் ஒரு பகுதி பிரசுரிக்கப்பட்டிருந்தது.  (அடுத்த பகுதி எப்போதோ தெரியவில்லை. தொடரும் என்று போடப்படிருந்தது). உண்மையில் அந்த பதிவை, தர்ஜினி என்னும் திறமை மிக்க தமிழ் வீராங்கனையை அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பதிந்திருந்தேன். உண்மையில் அதை மீள தினகரன் பத்திரிகையில் பிரசுரித்தமை நல்ல ஒரு விடயம்தான்.

தினகரன் பத்திரிகையில் மீள் பிரசுரமாக்கப்பட்ட எனது பதிவு! படத்தின்  இடதுகை கீழ் மூலையில் ”View Full Image” பகுதியை கிளிக்கி பெரிதாக்கி பாருங்கள். புதிதாக தோன்றும் சிறிய Windowஐ வலது மேல் மூலையில் "X" கிளிக்கியோ இல்லது scroll செய்து எனது தளத்தை மெதுவாக press செய்தோ பழைய viewற்கு வாருங்கள்.


எனினும் அந்த பதிவை கஸ்டப்பட்டு இட்ட உரிமையாளரான எனக்கு ஒரு அறிவித்தல் கூட தராமல், நன்றி என்று கூட போடாமல் தாங்களே எடுத்தது போல் போடுவது ஊடகதர்மத்திற்கு உகந்ததோ என்று எனக்கு தெரியவில்லை. உண்மையில் பல பதிவுகளை பதிவர்களாகிய நாங்கள் கஸ்டப்பட்டு போடும்போது, அவர்களிற்குரிய உரிய கௌரவம் தராது அப்படியே கொப்பி செய்து போடுவது எம்மை வருத்தத்திற்குள்ளாகும் செயல். நாங்கள் இதற்காக பொருளா பண்டமா கேட்கிறோம்? ஒரு மூலையிலாவது நன்றி என்றாவது எங்கள் பெயரையும் போடலாம்தானே! சரி அவ்வாறு கூட வேண்டாம் போட முதல் ஒரு வார்த்தையாவது e-mail மூலமாக சொல்லலாம்தானே! பத்திரிகை நண்பர்களே இனியாவது இதை கொஞ்சம் கவனியுங்கள்.
எனது அசல் ஆக்கம்  
http://vidivu-carthi.blogspot.com/2011/08/netball.html

தினகரன் பத்திரிகையால் சுடப்பட்டு வந்தது

பிற்சேர்க்கை: நேற்று இந்த தகவல் அறிந்ததும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு அவர்களின் பிழையை தெரிவித்திருந்தேன்.  அதற்கு அவர்களின் பதில் வரவில்லை. ஆனால் இன்றைய பதிப்பில் (http://www.thinakaran.lk/jaffna/?id=06&tday=2011/08/16) மீதி பேட்டி வந்திருந்தது. அதில் நன்றி பொட்டலம் வலைப்பூ எனப்போடப்பட்டிருந்தது! இறுதியிலாவது அதன் மூலத்தை போட்டமை பராட்டுதற்குரியது. நன்றிகள்பயனுள்ள கற்கைநெறி - Transport & Logistics Management

டிஸ்கி: இந்த கட்டுரை மாதாமாதம் வெளிவரவிருந்த ஒரு சஞ்சிகைக்காக ”மாதமொரு பயனுள்ள கற்கைநெறி” என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கற்கைநெறியாக இளம் மாணவர்களுக்கு அறிவுறுத்த சிலவற்றை தெளிவுபடுத்த எழுதப்பட்டதாகும். ஆயினும் இறுதிநேரத்தில் ஏற்பட்ட தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் அந்த சஞ்சிகையும் இந்த கட்டுரையும் வெளிவராமல் போனது. என்றாலும் எனது இந்த கட்டுரைக்கான உழைப்பை வீணாக்காது எந்தவொரு மாற்றமும் செய்யாமல் இங்கே பதிகின்றேன். இதனால் ஒருவர் பயன்பெற்றாலும் நல்லதுதானே!

நன்றி: இந்த கட்டுரைக்கு தேவையான விளக்கங்கள் உதவிகள் வழங்கிய இந்த கற்கை நெறி கற்று வெளியேறிய நண்பன் நோபேர்ட்டுக்கு நன்றிகள்.
-----------------------------------------------------------------------
அந்தக்காலத்திலிருந்தே தமிழர்கள் நாங்கள் சில வகுக்கப்பட்ட வரையறை விதிமுறைக்குள் இருந்து கொண்டு அதைவிடுத்து சற்று வெளியே வருவதை, முன்னோக்கி சிந்திப்பதை, செயல்படுவதை குறைத்து, தவிர்த்து வந்துள்ளோம். ஆனைத்து விடயங்களிலும் பெரியவர்கள் சொல்வதுதான் சரி என்று எடுத்து அதன்படி சொந்தமாக யோசிக்காமல் நடப்போமானால் ஏற்படும் விளைவுகள் எல்லா நேரங்களிலும் எமக்கு சாதகமாக இருக்காது!

அந்தக்காலத்திலும் ஏன் இந்தக்காலத்திலும் கூட உயர்தர மாணவர்களுக்கு கல்வி புகட்டும் ஆசிரியர்கள் பலர் உயர்தரத்தில் உள்ள துறைகளில் உயர்வான கற்கைநெறிகளை மட்டும் மேற்கோள் காட்டி 'அந்த துறைகளுக்குதான் நீங்கள் நல்லா படிச்சு போகவேண்டும். இல்லாட்டி கஸ்டம்' என்று தொடர்ச்சியாக கூறி வருவதை நீங்கள் கண்கூடாக கண்டிருப்பீர்கள். உதாரணமாக கணிததுறை எனின் பொறியியல்(Engineering) விஞ்ஞான துறை எனின் மருத்துவம்(Medicine) வர்த்தகதுறை எனின் முகாமைத்துவம்(Management) போன்றன மட்டும்தான் அந்தந்த துறைகளில் சிறந்தது என்பது போலவும்  அதைதான் படிக்கவேண்டும் மாற்று கற்கைநெறிகள் இல்லை என்பது போலவும் ஒரு பிரமையை மாணவர்கள் மத்தியில் இவ்வாறான ஆசிரியர்களின் செயற்பாடுகள் விதைத்து விடுவதுண்டு. சிலவேளைகளில் ஆசிரியர்கள் இவ்வாறு கூறுவதன்மூலம், அனைவரையும் ஒழுங்காக படிக்க செய்து நல்ல துறைகளுக்கு அனுப்பிவிடலாம் என்ற நப்பாசையும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் அந்த காலகட்டத்தில் பக்குவப்படாத வயதில் இருக்கும் மாணவர்களுக்கு இவ்வாறான கருத்துக்கள் சில பிழையான மன எண்ண ஓட்டத்தை  ஏற்படுத்திவிடுகிறது. அதாவது மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்த இயலாத மாணவன் ஒருவன் இவ்வாறான கருத்துக்களால் தன்னால் என்னதான் படித்தும் இப்படியான நல்ல துறைக்கு போக முடியாது எனவே பேசாம சும்மா சாட்டுக்கு படிச்சிட்டு இருந்திடலாம் என நினைத்து படிப்பில் ஒழுங்காக கரிசனை செலுத்த முடியாமல் போய்விடக்கூடிய சாத்திய கூறுகள் நிறையவே இருக்கின்றது
எனவே மாதா மாதம் வரவுள்ள இத்தொடர் கட்டுரையானது உயர்தரத்தில் உள்ள  வேறுபல பிரயோசமான கற்கைநெறிகளையும், அதை கற்க தேவையான அடிப்படை தகுதிகளையும், படிப்பிக்கப்படும் பாடப்பரப்புக்களையும், அதன் எதிர்கால வேலைவாய்ப்புக்களை பற்றியும் சற்று மேலோட்டமாக அலச முற்படுகிறது.

அந்தவகையில் உயாதரத்தில் கணிதபிரிவில் பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கற்ககூடிய Transport & Logistics Management கற்கைநெறி பற்றி இந்த மாதம் பார்க்கலாம். உயர்தரத்தில் உள்ள மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது கணிததுறையானது பல்லைக்கழகத்திற்கு செல்லக்கூடிய பல கற்கைநெறிகளை கொண்டுள்ளது. இதிலும் முக்கியமாக வேலைவாய்ப்புக்களை இலகுவில் பெற்றுதரக்கூடிய கற்கைநெறிகளை கொண்டிருத்தல் கணிததுறையின் இன்னோர் சிறப்பம்சமாகும்.

Transport & Logistics Management


இந்தமாதம் பார்க்கும் இந்த கற்கை நெறியை போக்குவரத்தும் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம் என்று தூய தமிழிலும் Transport & Logistics Management என்றும், சுருக்கமாக TLM என்றும் ஆங்கிலத்தில் கூறுவார்கள். உயர்தரத்திலிருந்து இந்த கற்கை நெறிக்கு செல்ல அடிப்படையாக கணிததுறையில் உள்ள முக்கிய மூன்று பாடங்களிலேயும் (இணைந்த கணிதம் பௌதீகவியல் இரசாயனவியல்) குறைந்த பட்சம் சாதாரண சித்தி(S) அடைந்திருக்க வேண்டும். அதாவது சுருங்க கூறின் மூன்று பாடங்களிலும் சித்திபெற்ற ஒருவரால்தான் இந்ததுறைக்கு விண்ணப்பிக்க முடியும்..

பின்னர் அந்தந்த மாவட்டங்களுக்கான Z வெட்டுப்புள்ளியின் அடிப்படையிலேயே அவர்களின் தெரிவு உறுதிப்படுத்தபடும். 2006லேயே முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கற்கைநெறிக்காக வருடாவருடம் 50பேரளவில் நாடு பூராகவும் இருந்து தேர்வு செய்யப்பட்டு, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகின்றனர். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் ஒரு பிரிவாகவே இந்த கற்கைநெறி இருப்பதால் இந்த பாடநெறிக்கான வரவேற்பு மாணவர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. நான்கு வருடங்கள் நீடிக்கும் இந்த கற்கைநெறியின் முடிவில் B.Sc.(TLM) Hons பட்டம் கிடக்கபெறும்.

இந்த Transport & Logistics Management பாடநெறியானது 2006ம் ஆண்டிலேயே மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது 2005ல் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு முதன்முதலில் இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. எமது நாட்டில் உள்ள பயணிகள் போக்குவரத்து மற்றும் பொருட்கள் பண்டங்களின் விநியோகம் போன்ற விடயங்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் முறைப்படி பயிற்றப்பட்ட துறைசார் வல்லுனர்களின் அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்தமையின் விளைவே இதற்கான தனியான ஒரு துறை ஆரம்பிக்க ஏதுவாயமைந்தது.

தற்போது இந்த பாடநெறியின் துறை தலைவராக (Head of the Department) மதிப்பிற்குரிய கலாநிதி T.சிவகுமார் இருப்பது தமிழர்களாகிய எமக்கும் பெருமை. இவர் எம்மாணவர்களின் கல்வியில் மட்டுமல்லாது தமிழ் மாணவர்கள் ஒழுங்கு செய்யும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்துபவர்.
Dr. T. Sivakumar
B.Sc. Eng (Peradeniya), MEng (AIT)PhD (Japan), AMIE (SL)
இந்த பாடநெறியை கல்வி பயில்வதன் மூலம் ஆரம்பத்தில் முகாமைத்துவம் சம்பந்தமான நிறைவேற்று அதிகாரிகளாக பல இடங்களில்; வேலைவாயப்பை பெறும் வாய்ப்புக்கள் உள்ளது. ஆத்தகைய இடங்களாக பயணவர்த்தகதுறைகள், விமானநிலையங்கள், துறைமுகங்கள், பொருட்கள் சரக்குகள் விநியோக கம்பனிகள், கப்பல்போக்குவரத்து கம்பனிகள், பொதுபோக்குவரத்து துறைகள், பொருட்கள் உற்பத்தசெய்யும் கம்பனிகள், ஆராய்ச்சி ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், திட்டமிடல் செயற்பாட்டு நிறுவனங்கள், உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்கள், களஞ்சியப்படுத்தல், பொருட்கள் விநியோக நிறுவனங்கள் போன்றன அமைகின்றது.

பின்னர் அனுபவத்தையும் திறமையையும் பொறுத்து இன்னும் உயர்ந்த பதவிகளுக்கு செல்லும் வாய்ப்பு காத்திருக்கிறது. நான் ஏலவே குறிப்பிட்டவாறு தொழில்துறையில் நிலவிய கேள்வியின் அடிப்படையிலேயே இக்கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டமையாலும் மிகவும் அண்மையிலேயே தொடங்கப்பட்ட புதிய பாடதுறையாகவும் இது இருப்பதால், வேலைவாய்ப்பை தற்போது இலகுவாக பெறக்கூடிய துறையாக காணப்படுகிறது. மேலும் Transport & Logistics Managementற்கான மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தின் உத்தியோகபுர்வ தளத்தில், “இந்த போக்குவரத்து விநியோகம் தொடர்பான துறையில் அனைத்து மட்டங்களில் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரு மில்லியன் அளவில் மக்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்” என்று கூறுகின்றனர். இவற்றில் 2000 வரையிலான முறையாக பயிற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த கற்கைநெறியானது சற்றே பரந்து பட்ட பாடப்பரப்புக்களை உள்ளடக்குகிறது. போக்குவரத்து(Transport) பிரிவில் வீதிப்போக்குவரத்து விமானபோக்குவரத்து கடல்போக்குவரத்து போன்ற அனைத்து பொதுப்போக்குவரத்து முறைகளும் அலசப்படுகிறது. விநியோகமுகாமைத்துவ பிரிவில் (Logistics Management) சரக்குகள் போக்குவரத்து கப்பல் துறைமுக செயற்பாடுகள் போன்றன படிப்பிக்கப்படுகின்றன. முக்கியமாக Supply Chain Managementல் ஒரு பொருளை உற்பத்தி செய்வதிலிருந்து அது இறுதி பயன்பாட்டாளருக்கு செல்லும் வரை நடைபெறும் அனைத்து செயற்பாடுகளும் விரிவாக ஆராயப்படுகிறது.

ஆத்துடன் இந்த துறைக்கு அவசியமான சந்தைப்படுத்தல்(Marketing) நிதிக்கணக்கீடு(Financial Accounting) போன்றன பற்றியும் மேலோட்டமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இறுதி ஆண்டில் ஒருவர் Aviation, Shipping, Road போன்ற துறைகளில் குறிப்பிட்ட ஒரு துறையை தேர்ந்தெடுத்து சிறப்பு தேர்ச்சியடைய விரும்பினால் அந்ததுறை சார்ந்த பாடங்களை தமது தெரிவிப்பாடங்களாக எடுத்து மேலதிக அறிவை பெற்றுக்ககொள்ளகூடிய வாய்ப்பு இருக்கிறது. இல்லாவிடில் எல்லாதுறைகளிலும் ஒருவர் பரந்த அறிவை பெறவிரும்பின் ஒரு குறிப்பிட்ட துறையை மட்டும் கருத்தில்கொண்டு பாடங்களை தெரியாது பொதுவான பாடங்களை தெரிவுசெய்து பரந்துபட்ட அறிவை பெறமுடியும். ஆனைத்தும் உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.

மேலும் இந்த போக்குவரத்தும் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம் (Transport & Logistics Management)  கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டு இந்தவருடத்தோடு 5வருடங்கள் பூர்த்தியாகிவிட்டமையால் மிகவிரைவில் மொறட்டுவ பல்கலைக்கழகத்திலேயே இத்துறைக்கு விஞ்ஞான முதுமானி M.Sc தொடங்கப்படுவதற்கான ஆயத்தங்களும் நடைபெறுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு
மொறட்டுவைபபல்கலைக்கழக Transport &Logistics Management ற்கான உத்தியோக இணையத்தளம்: http://www.tlm.mrt.ac.lk
இக்கற்கைநெறிகற்று வெளியேறிய பட்டதாரி: ர.நோபேர்ட் 0772385784
--------------------------------------------------------
நண்பர்களே எம்மவருக்கு உதவி தேவைப்படுகிறது! தயவு செய்து நண்பர் மதி.சுதாவின் தளத்திற்கு கீழுள்ள இணைப்பின் மூலம் சென்று பாருங்கள்

மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1)

உலகத்தரத்தில் தமிழர்கள் - NetBall வீராங்கனை தர்ஜினியுடன் நேர்காணல்

நன்றி : இந்த பதிவு வருவதற்கு முதற்காரணியாக இருந்து நான் கேட்டவுடன் தர்ஜினி அக்காவுடன் தொடர்புகொண்டு, எனது கேள்விகளுக்கு பதில்களை பெற்று தட்டச்சி தந்த மதுரா அக்காவிற்கு எனது கோடான கோடி நன்றிகள். மதுரா அக்காவின் உதவியால் நான் நேரடியாக தொடர்பு கொண்டு மிகுதி கேள்விகளை கேட்ட போது சலிக்காமல் விளக்கமாக பதிலளித்தமைக்கும் வேண்டிய தகவல்களை தந்தமைக்கும் பதிவின் நாயகி தர்ஜினி அக்காவிற்கும் நன்றிகள்.

டிஸ்கி1: கீழே தரப்பட்ட பேட்டி தர்ஜினி அவர்கள் சொன்ன தகவல்களை அடிப்படையாக கொண்டே பதிவேற்றப்படுகிறது. பிழையான மேலதிக சேர்க்கைகள் இல்லை. இந்த பதிவிற்கு உதவி செய்த மதுரா அக்காவும் ஒரு சிறந்த வலைப்பந்து வீராங்கனை. தேசிய சாம்பியனாக வந்த, இலங்கை பல்கலைக்கழக தெரிவு அணியில் இடம்பெற்றிருந்த திறமைசாலி.

டிஸ்கி2: இந்த பேட்டியின் தெளிவான சில பகுதிகள் ஒலிவடிவத்தில் இன்னுமோர் பதிவில் வெளிவரும்.
----------------------------------------------------------------------------

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற அபரிமிதமான திறமையுடைய சிறந்த வலைப்பந்தாட்ட (NetBall) வீராங்கனையான, அழுத்தமாக சொல்லப்போனால் தமிழ் வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் அவர்களை பற்றி நாங்கள் அறிய வேண்டிய பல முக்கிய தகவல்களை, விடயங்களை சிறு கேள்வி பதில் பதிவின் மூலம் பொட்டலம் வலைத்தளம் தரமுயல்கிறது. இந்த பேட்டிக்கு செல்ல முன் அவர் தொடர்பான சில விபரங்களை பார்த்துவிடலாம். 

திறமையுள்ள ஆனால் ஆர்ப்பாட்டமேயில்லாத இந்த வீராங்கனையை நீங்கள் வெள்ளவத்தையின் தெருக்கள் பலவற்றில் கண்டிருக்ககூடும். 2.06m உயரமான யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்போது கொழும்பில் வசிக்கும் இந்த வலைப்பந்து வீராங்கனை கடந்த மாதம் 3ம் திகதியிலிருந்து 10ம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்ற 13வது உலககிண்ண போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரிலும் உயரமானவராக விளங்கியதோடு மட்டுமல்லாது, பலம்பொருந்திய பெரிய அணிகளுக்கெல்லாம் பலத்த சவால் நிறைந்த Shooterஆக விளங்கினார். பல அணிகள் இவரின் shoot செய்யும் பலத்தை கட்டுப்படுத்த பல வித்தியாசமான முறைகளையெல்லாம் கையாள வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சிங்கப்பூர் அணி, றக்பி போட்டிகளில் கையாளப்படும் Lion Dance நுட்பத்தை (ஒரு வீரர் இன்னோர் வீரரை உயர்த்தி தூக்கி பிடிப்பத்தல்) ஒத்த ஒரு முறையை கையாண்டும் இறுதியில் தோல்வியை தழுவிருந்தது.

இவர் இந்த உலககிண்ண போட்டிகளில் இலங்கை விளையாடிய 6 போட்டிகளிலும் கலந்து கொண்டு, தான் முயற்சித்த(attempt) 297 pointsகளில் 7ஐ மட்டும் தவறவிட்டு 290pointsகளை (98%) பெற்றுக்கொடுத்திருந்தார். இந்த உலக கிண்ண போட்டிகளில் பங்குபெறுவதற்கான தகுதிகாண் போட்டியாக 2009ல் இடம்பெற்ற ஆசியகிண்ண போட்டி இருந்தது. இதில் இலங்கை கிண்ணத்தை கைப்பற்ற இவரது பங்குதான் முதன்மையாக இருந்திருந்தது. அந்த போட்டிதொடரில் மொத்தமாக 380pointsகளை பெற்று இப்போட்டிகளில் அனைத்து அணிகளிலும் கூடிய புள்ளிகளை பெற்றுக்கொடுத்தவரில் முதல் இடத்தை பெற்றார். 2வது இடத்தை பெற்ற மலேசிய வீராங்கனை பெற்றது வெறும் 152புள்ளிகளே.

தமிழரான எங்களுக்கெல்லாம் பெருமை சேர்த்து கொண்டிருக்கும் சர்வதேச வலைப்பந்தாட்ட வீராங்கனையான உங்களை இணையத்தின் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

Q: உங்களது குடும்பம் ஊர் பற்றி சிறு அறிமுகத்தை தாருங்கள்?
நான் தர்சினி சிவலிங்கம் புன்னாலைக்கட்டுவன் ஈவினை என்பது எனது ஊர். அப்பாவின் தொழில் விவசாயம். அம்மா வீட்டுத்தலைவி. குடும்பத்தில் 6சகோதரர்கள் நாங்கள். 3 அண்ணாக்கள் ஒரு அக்கா ஒரு தம்பி.

Q: பாடசாலைக்கல்வியை எங்கே கற்றீர்கள்?
வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில்.

Q: வலைப்பந்தாட்டம் மீதான உங்களின் ஆர்வம் எப்போது உருவானது?
பாடசாலை காலத்தில் போட்டிகளில் விளையாடும் போது.


Q: நீங்கள் விளையாடிய காலத்தில் உங்கள் பாடசாலை அணி எந்தளவு தூரம்வரை சிறந்த வெற்றிகளை பெற்றிருந்தது?
எங்கள் அணி கோட்ட மட்டம் வரை சென்றிருந்தது. ஆனால் வெல்ல முடியவில்லை.

Q: பாடசாலை அணிக்கு தலைவியாக இருந்தீர்களா?
இல்லை. சாதாரண வீரராகவே விளையாடினேன். அப்போது கூடியளவு போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. அந்தக் காலம் பிரச்சனையான போர்ச்சூழல் நிறைந்த பாதைகள் பூட்டப்பட்ட காலப்பகுதியாக இருந்தமையால் எனது திறமைகள் மழுங்கடிக்கப்பட்டிருந்தன.

Q: பாடசாலைக்காலத்தில் ஒழுங்காக பயிற்சிகள் வழங்கப்படிருந்தனவா?
பெரிதாக இருக்கவில்லை.

Q: உங்களது பாடசாலைக்காலத்தில் யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட அணி இருந்ததா? அதில் பங்கு பற்றியிருந்தீர்களா?
30 வருடங்களாக யாழ் மாவட்ட அணி இருக்கின்றது. ஆனால் அவர்களால் கூட என்னை கண்டுபிடிக்க முடியவில்லை.

Q: பாடசாலைக்காலத்தில் நீங்கள் விளையாடும் போது எதிர்காலத்தில் இப்படி ஒரு பெரிய வீராங்கனையாக வருவீர்கள் என்று உங்கள் பெறுபேறுகளை கொண்டு எதிர்பார்த்தீர்களா?
நிச்சயமாக இல்லாவிடினும், என்னால் மற்றவர்களை விட இலகுவாக சில இலக்குகளை எட்ட முடிவதுண்டு உதாரணமாக உயரம் பாய்தல், ஆனாலும் தகுந்த பயிற்சி, பாதுகாப்பு இல்லாமல் துணிந்து விளையாட்டுகளில் நான் ஈடுபடவில்லை. காரணம் நான் அப்போது தான் விரைவாக வளர்ந்து கொண்டிருந்தேன், என் எலும்புகளுக்கு பலமான பாதுகாப்பு தேவைப்பட்டது.

Q: உங்களை இவ்வாறு உருவாக்கியதில் முதன்மையானவர்கள் யார் யார்?
பெற்றார், சகோதரர்களை தவிர உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் என்னை முதன்மைப்படுத்தி ஊக்குவித்ததுண்டு. தேசியஅணியில் இடம்பெற்ற காலத்தில், எனது வேலை தளத்தில் இருந்த பயிற்றுனர் விசேடமாக. மற்றும் அவ்வப்போது தேசிய அணியின் பயிற்றுனர்களாக இருந்த அனைவரையும் என்னால் நினைவு படுத்த முடியும். முக்கியமாக என்னை பல்கலைக்கழக அணியிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அணிக்கு அழைத்து சென்ற பத்திமா பிரான்சிஸ் என்பவாவும் முக்கியமானவா.

Q: நீங்கள் உங்கள் பட்டபடிப்பை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்றதாக அறிகிறேன். பல்கலைக்கழக வாழ்க்கை இந்த விளையாட்டு தொடர்பாக உங்களை பட்டை தீட்ட உதவியதா? எவ்வாறான வகையில் உங்களை வளர்த்துக்கொண்டீர்கள்?
நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றதுமே அங்கிருந்தவர்கள் நான் நிச்சயம் தேசிய அணிக்கு போவேன் என்று எதிர்பார்த்தார்கள். அத்துடன் பல்கலைக்கழக அணியிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அணிக்கு விளையாட பாத்திமா பிரான்சிஸ் அவர்களால் சந்தர்ப்பமும் கிடைத்தது பல்கலைக்கழக வாழ்க்கையில்தான். இந்தக்காலப்பகுதியில்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4வருடங்களாக விளையாடியிருந்தேன். அத்துடன் பல்கலைக்கழக அணிக்கு தலமைதாங்கியுள்ளேன். பல்கலைக்கழகங்களிற்கிடையிலான போட்டியில் முதலாவது முறையாக தமிழ் அணி (எமது அணி) இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. அதன்பின் இலங்கை பல்கலைக்கழக அணிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தேன் அதில் 2005ல் Vice-Captainஆகவும் 2006ல் Captain ஆகவும் இருந்திருக்கின்றேன்.

பல்கலைக்கழகத்திலிருந்து இருந்து தேசிய அணிக்கு நான் தெரிவாகி 2005ல் ஆசிய கிண்ண போட்டியில் Best Shooter விருது பெற்றமைக்கு பல்கலைக்கழக உப வேந்தர் எனக்கு தங்க பதக்கம் அளித்து கௌரவப் படுத்தியமை, பரீட்சை காலங்களில் நண்பர்களில் உதவி முதலானவை முக்கியமாக நினைவு கூரப்படவேண்டியவை. தேசியஅணியில் விளையாடிக்கொண்டு எனது பட்டப்படிப்பை சீராக தொடர பல்கலைக்கழகம் போதிய உதவியும் வழங்கியிருந்தது. 
National Champions - All Universities Team -2007கீழே இருப்பவர்களில் இடமிருந்து வலம் 2வது மதுரா அக்கா பின்வரியில் உயரமாக பதிவின் நாயகி

Q: உங்களுக்கு இலங்கை தேசிய அணியில் வாய்ப்பு எப்போது கிடைத்தது? எவ்வாறு கிடைத்தது?
2004ல். நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம் மட்டக்களப்பு மாவட்ட அணிக்காக விளையாடியபோதுதான் தேசிய அணிக்காக தெரிவுசெய்யப்பட்டேன். எனது பெறுபேற்றையும் உயரத்தையும் அடிப்படையாக வைத்தே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

Q: முதன் முதலாக சர்வதேச போட்டியில் விளையாடிய போது அனுபவம் எப்பிடி இருந்தது?
2005ல் ஆசிய கோப்பைக்காக விளையாடினேன், இறுதி போட்டியில் எங்களால் வெல்ல முடியாமை அடுத்து வரும் போட்டிகளுக்கு என்னை நன்றாக தயார் படுத்த வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கியது.

Q: 6ஆண்டு காலமாக சர்வதேச போட்டிகளில் விளையாடிவரும் நீங்கள் விளையாடிய முக்கிய சர்வதேச போட்டிகள் பற்றி சொல்ல முடியுமா? உங்கள் அணி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் பற்றியும் கூறுங்கள்.
ஆசிய கோப்பை வெற்றியாளர்கள் 2009. அவ்வப்போது பிற நாடுகளால் ஒழுங்கு படுத்தப்படும் 5 தேசங்களுக்கிடையிலான, 4 தேசங்களுக்கிடையிலான, சுற்றுப்போட்டிகளும் பிற நாடுகளுடனான சுற்று பயணங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.

Q: இதுவரை எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள்?
ஏறத்தாழ 35 வரையிலானவை சர்வதேச போட்டிகளில் அடங்கும்.

Q: தற்போது Co-Captain ஆக அணியில் இருப்பதாக தெரிகிறது. Co-Captain என்றால் இன்னொரு வீரருடன் இணைந்து தலைவராக பணியாற்றுவதுதானே?
ஆம்.

Q: July மாதம் சிங்கப்புரில் இடம் பெற்ற உலககிண்ண போட்டி உங்களின் முதல் உலககிண்ண போட்டியென நினைக்கிறேன் அப்பிடிதானே? அதன் அனுபவம் பற்றி கூறுங்களேன்.
ஆம். இலங்கை அணி உலக கோப்பைக்கு தகுதி பெற ஆசிய கோப்பையை வெல்வதோடு, உலக தர பட்டியலில் முன்னிடம் வகிக்க வேண்டும். இந்த உலக கோப்பையின் பின்னர் எங்கள் அணி பதின் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகின் மிக சிறந்த அணிகளுடன் விளையாடி அதிக கோல் போடுவது எனக்கு மிக சவாலாக இருந்தாலும், நான் ஒவ்வொரு போட்டியிலும் மகிழ்ச்சியுடன் பங்கு பற்றினேன்.

Q: இந்த உலக கிண்ண போட்டிகளில் சிறப்பாக ஆடிய உங்களுக்கு சிறப்பு பரிசு எதாவது கிடைத்ததா?
Best Shooter விருது கிடைத்தது.

Q: போட்டி தொடரின் சிறப்பாட்டக்காரர் விருது யாருக்கு கிடைத்தது?
தென்னாபிரிக்க வீராங்கனை ஒரு வருக்கு கிடைத்தது.

Q: மற்றைய விளையாட்டுக்களின் தேசிய வீரர்களுக்கு கிடைக்கும் வரவேற்புபோல் அபரிமிதமான திறமை இருந்தும் உங்களுக்கு கிடைப்பதில்லை என்று உணர்ந்திருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு உள்ளுரில் ஆதரவு எப்பிடி இருக்கிறது? ஊடகங்கள் உங்கள் போன்ற திறமையுடைய தமிழ் வீரர்களை சரியாக ஊக்குவிக்கவில்லை என்று சிந்தித்ததுண்டா? எப்படியான பங்களிப்பை அவர்கள் வழங்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?
தோற்கும் அணியில் இருந்து என்னால், அதிக கோல் சிதறாமல் போடா முடிகிறது எனில், எங்கள் அணி கட்டயாம் வெற்றி பெறும் பகுதியில் இருந்திருக்க வேண்டும். எங்கள் தயார் படுத்தலுக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. ஊக்குவிப்பு எங்கள் மனதில் தான் உருவாகவேண்டும். நாம் நினைக்கிற இலக்கை ஒரு போதும் தாழ்த்தகூடாது. ஊடகங்கள் இன்னும் கூடுதலான ஊக்குவிப்பை தரலாம்.


Q: உங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்குவிப்பவர்கள் யார்?
பலர்.

Q:வேலைத்தளத்தில் சிறந்த விளையாட்டு வீரராக உங்களுக்கு மதிப்பு எவ்வாறு இருக்கிறது?
மிகவும் நன்று. அவர்களின் ஆதரவு எல்லை அற்றது.

Q: ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஆதரவுக்கு நன்றி.

பிற்குறிப்பு: இப்படியான பல திறமையான தமிழ்பேசும் வீரர்கள் அனைவரையும் நாம் ஊக்குவித்தோமா? என்றால் விடை பெரும்பாலும் இல்லை என்றே வரும். அற்பனுக்கு பவிசு வந்து அர்த்தராத்திரியிலும் குடை பிடிக்கும் இந்தக்காலத்தில் இப்படியான உலகதரம் வாய்ந்தவர்கள் எம்மிடையே இருக்கும்போது நாம் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கௌரவத்தை கொடுக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்ல உற்சாகத்தை வழங்கி மேலும் சிறப்பாக விளையாட இன்னும் வழி அமைக்கும்.

பல திறமையுள்ள இளையவர்களை ஊக்குவிக்கும் தமிழ் ஊடகங்களே இந்த வீராங்கனைக்கு கொடுக்கவேண்டிய கௌரவம் வழங்கப்படாது இருப்பின் உடனடியாக அதை நிவர்த்தி செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்