A.R.Rahman, Slumdog Millionaire, Oscar


22 ம் திகதி பெப்ரவரி அமெரிக்காவின் Los Angeles, Californiaல் நடைபெற்ற 81வது ஒஸ்கார் விருதுவழங்கும் வைபவம் பற்றிதான் தற்போது சூடான பேச்சுக்கள். அதற்கெல்லாம் முழு காரணம் A.R.Rahman(Mozart of Madras) எனப்படும் இசைப்புயல்தான். ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் தனது இசை அலையால் கட்டிபோட்ட இவர் இப்போது தனது தனித்திறமையால் உலக அளவிலும் வளர்ந்து பலரையும் தனது இசைக்கு அடிமையாக்கியுள்ளார். அது சரி Oscar விருதை வெண்ட முதல் தமிழர் என்ற ரீதியிலும் அவரது இசைக்கு தீவிர ரசிகர்கள் என்ற வகையிலும் பலருக்கும் தாங்களே விருதை வென்றதைபோல் ஒரு மகிழ்ச்சி.

ரோஜா என்ற தனது முதலாவது தமிழ் படத்தில் 1992 ல் தொடங்கிய பயணம் 1995ல் முதலாவது ஹிந்தி படமான ரங்கீலா ஊடாக தொடர்ந்து 2003ல் Warriors of Heaven and Earth என்ற ஜப்பான் மொழிபடமூடாக (முதலாவது வேற்று நாட்டு படம்) உலகரீதியில் பயணிக்க ஆரம்பித்து இன்று பல மொழிகளிலும் வெற்றி நடைபோட ஆரம்பித்து இருக்கிறது. கடைசியாக Delhi6 என்ற ஹிந்திபட பாடல் இவரது இசையில் சக்கை போடு போடுகிறது. மொத்தமாக இவரது இசையில் 57 தமிழ் படங்களும் 39 ஹிந்தி படங்களும் 3 தெலுங்கு படங்களும் 3 ஆங்கில படங்களும் ஒரு மலையாள படமும் வெளிவந்துள்ளது. (எண்ணிக‌்கை ஒன்ரிரண்டு தவறக்கூடும்).

மனைவி சைரா பானுவுடன் ரகுமான்

1966 ஜனவரி 6 சென்னையில் பிறந்த திலிப்குமார் என்ற இயற்பெயருடைய ரகுமானுக்கு இதுவரை கிடைத்த விருதுகளோ ஏராளம்.

4 தேசிய விருது - ரோஜா(1992) மின்சாரகனவு(1997) லகான்(2002) கன்னத்தில் முத்தமிட்டால்(2003) .

6 தமிழ்நாடு மாநில விருது - ரோஜா(1992) ஜென்டில்மன்(1993) காதலன்(1994) பம்பாய்(1996) மின்சாரகனவு(1997) சங்கமம்(1999) .

பத்மசிறி விருது.

11 FilmFare விருது.

இதைவிட உலகளாவிய ரீதியில் 2008ல் Slumdog Millionaire படத்திற்கு இசையமைத்தமைக்கு பெற்றவிருதுகளாக
BAFTA(British Academy of Film and Television Arts) விருது.
Golden Globe விருது.
Broadcast Film Critics Association விருது.

அனைத்துக்கும் மகுடம் சூடும்படியாக 2 Oscar விருதுகள்.
சிறந்த திரைப்பட இசைக்காகவும்(Best Original Score) சிறந்த பாடலுக்காகவும் (Best Original Song) இவ்விரண்டு விருதுகளும்.
எனினும் இவரது இரு பாடல்கள்(O... Saya, Jai Hoo) சிறந்த பாடலுக்கான பிரிவில் போட்டியிட்டாலும் Jai Hoo என்ற பாடலே விருதை தட்டி சென்றது.

எது எவ்வா‌றாயினும் பலரும் பலப்பல அபிப்பிராயங்களை இசைப்புயலை பற்றி கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சில அவரைபற்றி குறை கூறுவதாக உள்ளது.

வேறு மொழி படங்களுக்கு இசைஅமைக்க தொடங்கிய பின் இவர் தமிழில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்று பலரும் கவலைப்படுகின்றனர். இதை உறுதி படுத்துவது போல் கடைசியாக தமிழில் வந்த சக்கரைகட்டி படத்தின் பின் ரகுமான் இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் வேற்று மொழியே. யுவராஜ், கஜினி, ஸ்லம்டக் மில்லியனியர், டெல்கி6 படப்பாடல்களே அவை.

90களில் ரகுமான் போட்ட மெட்டுகளுக்கு நிகராக தற்போதைய பாடல்கள் இல்லை எனறு ஒரு கூட்டம் சொல்கிறது. இக்கருத்து பொதுவாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் தீவிர ரகுமான் விசிறிகள் தற்போது Trend மாறி விட்டது அதற்கேற்ற படி புதுசாக இசையை ரகுமான் வழங்குவதாக கூறுகின்றனர். எனினும் தொடக்க காலங்களில் ரகுமானால் போடப்பட்ட மெட்டுக்கள் எந்த காலத்திலும் காதிற்கு இனிமை தருவனவாக இருந்தது. ஆனால் தற்போது வருகின்ற பாடல்கள் பொதுவாக அவ்வாறானதாக இல்லை. தற்போது வரும் பாடல்கள் பொதுவாக இளவயது உடையோரையே பெரிதும் திருப்தி படுத்துவதாக பலரும் குறைபட்டு கொள்கின்றனர். 2003ல் வெளிவந்த BOYS திரைப்படத்திற்கு பின் ரகுமானின் பாணி சற்றே மாறி இருந்தது. கூடுதலாக Western இசை கலந்த Fast Beat பாடல்களே பெரும்பாலும் வெளிவர‌ தொடங்கின. இதனாலேயோ என்னவோ ஆங்கில மொழிபடங்களிற்காகவும் இவரை ஒப்பந்தம் செய்ய தொடங்கினர்.

என்னதான் குறைகள் வந்தாலும் ரகுமான் என்பவர் இசைக்காகவே பிறந்த ஒரு அழியாத பொக்கிசம் ஆகும்.

இவ்வாறு A.R.Rahmanஐ உச்ச புகழ் நிலைக்கு அடிப்படைகாரணமாக அமைந்தது Slumdog Millionaire என்ற படம்தான் என்றால் அது தவறாகாது. இந்த படத்தை இயக்கிய டானி போயல் 1956ம் ஆண்டு பிறந்த இங்கிலாந்தை சேர்ந்தவர் ஆவார். இந்திய எழுத்தாளர் விகாஸ் சுவறூப் எழுதிய Q&A என்ற நாவலை தழுவியே இப்படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இப்படம் மொத்தமாக 8 ஒஸ்கார் விருதை இம்முறை பெற்றுக்கொண்டது. மொத்தமாக 9 விருதுகளுக்காக 10 இடங்களில் பிரேரிக்கப்பட்டிருந்தது. Best Original Song விருதுக்காக இப்படத்தின் இரு பாடல்கள் போட்டியிட்டமையால் ஆகும்.
தவறவிடப்பட்ட ஒரு விருது Best Sound Editing விருதாகும்.இப்படம் முதலில் Telluride Film Festival மற்றும் Toronto International Film Festival களில் 2008 செப்ரெம்பர் மாதமளவில் திரையிடப்பட்டது. பின்னர் லண்டனில் 2009 ஜனவரி9 லும், மும்பாயில் ஜனவரி22 லும், அமெரிக்காவில் ஜனவரி 23 லும் வெளியிடப்பட்டது.

எவ்வளவுதான் குறிப்பிட்டு கூடிய தரமான படமாக Slumdog இருந்தாலும் லகான் போன்ற (2002ல் ஒஸ்கருக்காக Best Foriegn Language Filmல் பிரேரிக்கப்பட்டது)படங்களுடன் ஒப்பிடும்போது இதில் அவ்வளவு மாயாஜாலம் இல்லாத போதிலும் வெளிநாட்டு இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் கூடிய விளம்பரப்படுத்தல்கள் போன்றவற்றுடன் இந்தப்படம் பல விருதுகளை அள்ளுகிறது என்பது ஒரு பொதுவான உண்மை.

Golden Globe விருதுகளுடன் Slumdog கலைஞர்கள்


இப்படம் பெற்ற Oscar விருதுகள்
Best Picture – Slumdog Millionaire
Best Director – Danny Boyle
Best Original Score – A.R. Rahman
Best Original Song – A.R. Rahman
Best Sound Mixing – Resul Pookutty
Best Film Editing – Chris Dickens
Best Cinematography - Anthony Dod Mantle
Best Adapted Screenplay - Simon Beaufoy

மேலதிகமாக
7 BAFTA(British Academy of Film and Television Arts) விருதுகள்(பிரேரிக்கப்பட்டது 11)
4 Golden Globe விருதுகள்(பிரேரிக்கப்பட்டது 4)
5 Broadcast Film Critics Association விருதுகள்(பிரேரிக்கப்பட்டது 6)

இப்படத்தை பற்றி கடுமையான விமர்சனங்கள் பல தரப்புகளிடமிருந்து எழுந்தாலும் கூட அதையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து இப்படம் உலக அளவில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.Oscar வென்ற அடுத்த இந்தியர் ரசூல் பூக்குட்டி


இதைவிட நடைபெற்ற வைபவத்தில் Oscar விருது பெற்ற அடுத்த இந்தியர் ரசூல் பூக்கொடியை பலரும் கவனத்தில் கொள்ளவில்லை. ரகுமானின் பிரபலத்தால் இவரைபற்றிய பேச்சுக்கள் குறைவாகவே வெளிவந்தன. ரகுமானின் இசை மூலமாகவே இவர் பிரபலம் அடைந்தாலும் இவரது திறமை இல்லாது ரகுமானால் இவ்வளவு சிறப்பாக அப்படத்திற்கு இசையை வெளிப்படுத்தி இருக்க முடியாது. Richard Pryke, Ian Tapp போன்றோருடன் Slumdog படத்திற்காக சிறந்த இசை கலவை(Best Sound Mixing) Oscar விருதை பெற்றார். 1971ல் கேரளாவில் பிறந்த மலையாளியான இவர் 1997ல் Private Detective என்ற படத்தின் மூலமாக Sound Desingerஆக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். Sound Engineer ஆன இவர் ஸ்லம்டக் மில்லியனரை விட அண்மையில் வெளிவந்த ஹிந்தி க‌ஜினியிலும் Sound Mixerஆக பணிபுரிந்துள்ளார்.

Richard Pryke, Ian Tappஉடன் ரசூல் பூக்குட்டி


இவருக்கு கிடைத்த முக்கிய விருதுகள்
2005ல் Musafir என்ற ஹிந்தி/உருது மொழி படத்திற்காக Zee Cine விருது
2009ல் Slumdog Millionaire படத்திற்காக BAFTA, OSCARவிருதுஅடுத்த விடயம் இந்தியர் இருவருக்கு மூன்று ஒஸ்கார் விருது கிடைத்தாலும் இந்தியாவில் எடுக்கப்பட்ட 39 நிமிட Documentary என்று கூறப்படும் விபரணப்படத்திற்கு Best Documentary(Short Subject) உள்ள பிரிவில் அப்பட இயக்குனர் Megan Mylanனுக்கு Oscar விருது கிடைத்துள்ளது. இப்படம் இந்தியாவிலுள்ள மிர்ஸாபூர் மாவட்டத்திலுள்ள PINKI என்ற உதட்டுபிளவினால்(Cleft Lip) அவதிப்பட்ட சிறுமியை பற்றியதாகும். ஒரு சமூக‌சேவையாளர் ஒருவரால் Smile Train எனப்படும் இலவச உதட்டு பிளவு சத்திர சிகிச்சைக்கு அச்சிறுமி கூட்டிச்செல்லப்பட்டு அப்பிள்ளையின் வாழ்க்கை ஒளி மயமானதாக்கப்படுகிறதே அதன் கதையாகும். விருது பெற்ற மேகன் மைலன் சான் பிரான்ஸிஸ்கோவை சேர்ந்தவர் ஆவார்.Megan Mylan

அதன் Trailer பாக்க விரும்புவோர் கீழே உள்ள Link‌ஐ தொடர்க.

http://www.youtube.com/watch?v=CamEXQ8x72c

ExpoAirல் போக இருப்பவர்களுக்கு சுதந்திரியின் Tips

நான் எனது பதிவினை பற்றி Facebook இலே குறிப்பிட்டு 2மணி நேரமும் ஆகியிருக்காது எனது Facebook நண்பர் ஒருவரிடம் இருந்து அழைப்பு, (இவர் என்னுடன் யாழ்ப்பாணத்திலே ScienceHallல் ஒன்றாக படித்தவர் அவரை பற்றி எனக்கு தெரிந்ததைவிட என்னை பற்றி நன்றாக அவருக்கு தெரியும். எனது வளர்ச்சியில் அக்கறை உள்ள இனிய நண்பர்களில் அவரும் ஒருவர்) எனது பதிவுகளை தனது மின்னஞ்சலில் பெற என்ன செய்வேண்டும் என்று கேட்டார். அப்போதுதான் எனது இரவு நேர Training என்று சொல்லப்பபடும் ஒன்றை முடித்து விட்டு சற்று கண்ணயர்ந்திருந்தேன். அவருக்கு உரிய பதிலை கூறிவிட்டு மீண்டும் நித்திரைக்கு தாவினேன். (நித்திரை கொள்ளும்போது போனை Silent Modeல வைக்கசொல்லி அம்மா உட்பட பலரும் சொல்லியிருந்தம் கூட நான் அவ்வாறு விடுவதில்லை. யாராவது அவசரமாக தொடர்பு கொள்ள நினைத்தால் என்ன செய்வது? இதனால் ஒழுங்காக பகலில் நித்திரை கொள்ள முடிவதில்லை. ஒரு மணி நேர இடைவெளிகளில் எப்போதும் அழைப்புக்கள் வந்தபடியே இருக்கும். அனைத்தும் த‌ேவையற்ற அழைப்புக்கள்.) நான் கிறுக்குவதையும் ஒரு சிலர் பாக்கிறார்கள் என்று அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அதைவிடுத்து Facebook நண்பர் இருவர் எனது முந்தைய வலைப்பதிவை தங்களது சுவர்களில் Post செய்திருந்தனர். ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

எனது முந்தைய பதிவுக்கு போதிய வரவேற்பு கிடைத்ததிலிருந்து என்னை போலவே பலரும் இவர்களது (ExpoAir) விமானசேவையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெள்ள தெளிவாகிறது.

எனவே பாதிக்கப்படுவோருக்கு என்ன Advice கொடுக்கலாம் என யோசித்து கொண்டிருந்தபோது எனது நண்பர் ஒருவர் அந்தவேலையை எனக்கு வைக்காமல் தானே அதை பொறுப்பெடுத்து எனக்காக எழுதி தன்னுடைய வலைத்தளத்தில் கூட போடாது எனக்கு மின்னஞ்சல் செய்து வைத்தார். அவர் வேறு யாருமில்லை "சுதந்திரி" என்ற புனைபெயரில் உலாவரும் கெட்டவங்கள் கூட்டத்தின் தலைவர்தான். பெயரையும் ஆளையும் நீங்களே கண்டுபிடியுங்கள். எனவே இந்த பதிவின் எல்லாப்புகழும் சுதந்திரியையே சாரும்.ExpoAir இல் யாழ்ப்பாணம் போக நினைப்பவர்களுக்கான சுதந்திரியின் முத்துமுத்தான Tips

1.தேவையான தினத்துக்கு 2 கிழமைக்கு முன்னாடி book பண்ணுங்க.

2.விசேஷங்களுக்கு போபவர்கள் போதுமான கால அவகாசத்துடன் நாளை book பண்ணுங்க.( முன்று நால் பிந்தகூடிய சந்தர்பங்களும் உண்டு).

3.ரிக்கெட் book செய்ய போகும்போது 1-2 pm இடையில் போனீர்களானால் நேரவிரையத்தை குறைக்கலாம்.

4.book செய்ய போகுமுன் உங்கள் தன்மானத்தை,பதவி, படிப்பு, போன்றவற்றை நல்ல ஒரு அடகுகடையில் அடகு வைத்துவிட்டு செல்லுங்கள். திரும்பி வரேக்க தேவையென்றால் எடுத்துகொள்ளலாம்.

5.காலையில் போபவர்கள் பழைய ExpoAir ரிக்கெட் ஒன்றை எடுத்துசெல்லுங்கள், Neat ஆக உடுத்தி Jel, Cream, Body Spray வைத்து Shoe போட்டு செல்லுங்கள், எப்படியும் 30 பேர்வரை உங்களுக்கு முன்வந்து wait பண்ணுவார்கள், Security Guard கிட்ட போனதும் Phone ஐ எடுத்து காதில்வைத்து busy ஆக பந்தாவாக கதைத்தபடி ஒருவரையும் கவனியாமல் செல்லுங்கள், Security Guard மறிப்பார், "Ticket Confirm" பண்ணவேணும் என சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் உள்ளே செல்லுங்கள்.

6.உள்ளே 15 வரை இருப்பார்கள், அங்கேயும் யாரையும் கவனியாமல் phone கதைத்து கொண்டு இருங்கள், counter இக்கு முன்னால் இருப்பவர் எழும்ப உடனே சென்று அமர்ந்துவிடுங்கள்.

7.வேறு நபர்களுக்களுக்கு ticke book பண்ண செல்பவர்கள் இருவரதும் NIC photocopy ,ஒரு கடிதம் எடுத்துசெல்லுங்கள்.

8.வெளி நாட்டு Passport உடையவர்கள் MOD எடுத்துசெல்லுங்கள். உங்களிடம் Srilankan IC இருந்தால் நீங்கள் வெளி நாடு என்பதை வெளிப்படுத்த வேண்டாம்.

10.ஒரே தடவையாக ticket எடுப்பவர்கள் return ஐயும் எடுப்பது நல்லது.

11.அவசரமாக போகவேண்டியிருப்பின் ஒரு letter எழுதி Manager ஐ சந்தியுங்கள். அவரை சந்திக்கும் போது பொறுமை அவசியம், அவர் என்ன சொன்னாலும் ஆமாப்போடுங்கோ.

12.மிக அவசரம் என்றால் ஒவ்வொரு நாளும் மதியம் போனீர்கள் என்றால் 4 நாளில் போகலாம்.

13.Funeral போன்ற விடயம் என்றால் Death Certificate எடுத்து செல்லுங்கள்.

14.அவசரம் ஆனால் காரணம் இல்லாவிட்டால் என்ன ஒரு பொய் கடிதம் அனுதாபம் வரகூடியவாறு எழுதுங்கள்.

15.Risk எடுப்பவர்கள் அதிகாலை சென்றால் canceled ஆன ticket இலை போகலாம், ஆனால் sure இல்லை.

16.பயண திகதியில் அவர்கள் சொல்லும் நேரத்துக்கு 1/2 மணி நேரம் late ஆகா சென்றால் போதுமானது.

17.அங்கே போய் Q இல் நிற்க தேவையில்லை! கடைசியில் உங்களை கூப்பிடுவார்கள்.

18.கடைசியில் பதிந்து கடைசியில் bag ஏற்றினால் இரத்மலானையில் மூட்டை அடிக்கும் வேலையை தவிர்க்கலாம்.


19.உங்கள் பயணப்பொதி Weight Limit ஐ தாண்டினால், Expo office இல் போனவுடன் வயதுவந்த அம்மாமாரை தேடி வாளி வையுங்கள். அவர்களது மீதியாக உள்ள Weightக்கு உங்களுடைய பொதிகளை பதியலாம்.

20.இளம் பெண்கள், Expo office சென்றவுடன் என்னைமாதிரி கொஞ்சம் கலர்களை பார்க்க வரும் வெட்டிப்பயல்களை பார்த்து ஒரு சிரிப்பு ஒன்று சிரித்தால் போதும், Bag காவுகின்ற வேலை வராது. போகும்போது பேச்சு துணையுமாகிறது காவலுமாகிறது.

20.Apple, Chocolate போன்றவற்றை Ratmanalanaலேயோ அல்லது Palaliலேயோ வாங்கினால் Over Weight பிரச்சனையை குறைக்கலாம்.

21.IC photo copy ஐ கொண்டு செல்ல மறக்க வேண்டாம்.

22.விமானத்தில் பயணிக்கும் போது தரும் சிற்றுண்டிகளை கூச்சப்படாது நன்றாக சாப்பிடவும். வேறுயாரும் சாப்பிடாமல் விட்டால் அவர்களினதை ஒவ்வொருவரினது இருக்கையில் உள்ள வெற்றுபையில் இட்டு வீட்டில் கொண்டு வந்து சாப்பிடவும். வீணாக விட்டிட்டு வரவேண்டாம்.

உங்கள் பயணம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைய சுதந்திரியினதும் கெட்டவங்களினதும் வாழ்த்துக்கள்.

மீண்டும் சுதந்திரிக்கு நன்றிகள். அடுத்த பதிவில் சந்திப்போம்.


ExpoAirன் யாழ்-கொழும்பு விமான சேவையும் கடுப்பாகியுள்ள மக்களும்

இன்றைய பதிவில் நான் எழுதுவது என்மனதில் மட்டுமல்ல பலரது மனதிலும் தோன்றிய எண்ணங்கள்.


யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இருந்த ஒரே தரைவழிப்பாதையான A9 பாதை மூடப்பட்ட பின்னர் மக்களிடையே கடல்மார்க்க ஆகாய மார்க்க பயணங்கள் தவிர்க்க முடியாமல் போனது. கடல் வழிப்பயணத்தில் முழுமையாக 2 நாட்கள் வீணடிக்கப்படுவதாலும் (திருமலை சென்றே கப்பல் எடுக்கவேண்டும் என்பதால்) மிகவும் கடினமான பிரயாணம் என்பதாலும் பலரும் (இளைஞர்கள் உட்பட) விமான பயணத்தையே நாடுகின்றனர். எது எவ்வாறாயினும் ஒரு வழி கப்பல் பயணத்திற்கு சேவையை நடாத்தும் Green Ocean நிறுவனம் அறவிடும் தொகை 3250/=.

இதே போல் விமானசேவையை இரண்டு நிறுவனங்கள் வழங்குகின்றன.
1.ExpoAir
2.AeroLanka


AeroLanka விமானசேவையை பொறுத்தவரை 2 கிழமைகள் விமானசேவையை வழங்கினார்கள் எனின் 2 மாதத்திற்கு நன்றாக ஓய்வெடுத்துகொள்வார்கள். என்ன பிரச்சனையோ தெரியாது? அந்த அளவு ஒழுங்கான விமானசேவை. தற்போது அந்த விமானசேவை ஒழுங்காக நடைபெறுகிறதோ அல்லது முழுவதுமாக நடைபெறுவது இல்லையோ என்பது எனக்கு தெரியாது. அதனால் பெரும்பாலானோர் ExpoAir விமான சேவையையே தங்களது தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். எனவே யாழ் கொழும்பு விமான சேவையில் இவர்கள்தான் தனிக்காட்டு ராஜாக்கள். இதனாலேயே என்னவோ இவர்கள் காட்டும் கூத்துக்கள் ஏராளம்.

இதுதான் யாழ் கொழும்பு பயணிகள் விமானவேவையில் ஈடுபடும் ExpoAir விமானம்

ஒரு வழிப்பயணத்திற்கு இவர்கள் அறவிடும் தொகை 10500/=. தொகையை பார்த்து Planne என்னவோ International Rangeற்கு இருக்கும் என நினைச்சா பெரிய ஏமாற்றம். AC வசதிகூட இல்லாத ஒரு தட்டிவான் மாதிரிதான் இருக்கும். இவற்றை எல்லாம் விடுவோம். உண்மையாக இருக்கும் பிரச்சனைகளை பார்ப்போம்.

ஒருக்கா ரிக்கெட்டை எடுக்கோணும் எண்டா உடனே போய் நினைச்ச நாளுக்கு பெறமுடியாது. (எங்களுக்கு தேவையான நாள் அவர்களிடம் காலியாக இருந்தாலும் கூட). எப்படியும் குறைந்தது 2 கிழமைக்கு முதலேபோய் book செய்து அவர்கள் கூறும் நாள் சென்று பணம் கொடுத்து ரிக்கெட் எடுக்க வேண்டும். எப்படியும் ஒருவர் முதல் கேட்கும் நாள் அவர்களிடம் காலியாக இருந்தாலும் எல்லாம் book ஆகிவிட்டது என்றே சொல்வார்கள். ஏனென்றால் இந்த ரிக்கெட்களை பதுக்கி வைத்தால் அவசரமாக ரிக்கெட் தேவைப்படுவோருக்கு double மடங்கு விலையில் Blackல விற்கலாமல்லவா. என்ன தந்திரம். இதற்கு அங்கு பணிபுரிவோர் பு}ரண உடந்தை. எதாவது அவசரம் என்று அலுவலக தொலைபேசிக்கு அழைப்பு கொடுத்தாலும் எடுக்க மாட்டார்கள்.


இதாவது பறுவாயில்லை. அவர்களது அலுவலகத்தில் பணிபுரிவோர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. அனைவரும் சொக்க தங்கங்கள். வாடிக்கையாளர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் கூறமாட்டார்கள். (ஊமைகளைதான் வேலைக்கு எடுக்கிறார்களோ தெரியவில்லை). எப்பவாவது பதில் சொன்னால்கூட முகத்தை பார்த்து சொல்லமாட்டார்கள். கணணியில் ஏதையோ நோண்டியபடி வேண்டா வெறுப்பாக ஏதாவது உளறுவார்கள். பெரிய அமைச்சர்கள் என்ற நினைப்போ தெரியவில்லை!


ரிக்கெட் எடுக்க செல்லும்முன் செல்வோர் தங்களது சகிப்புதன்மையை சோதித்து விட்டே செல்லவேண்டும். இல்லாட்டி அவங்களோடு Gameஐ கேட்டுவிட்டு வரவேண்டியதுதான். எனக்கு தெரிந்தவரையிலே பலர் அவர்களுடன் முறுகி ரிக்கெட் எடுக்காது வந்த சந்தர்பங்கள் உண்டு. Booking செய்த ரிக்கெட்டயும் எடுக்க அவர்கள் சொல்லும் நேரத்துக்கு சரியாக போக வேண்டும். கொஞ்சம் பிந்தி போனலும் ரிக்கெட் காலிதான்.ஒருவாறு ரிக்கெட் எடுத்து பிரயாணம் செய்ய போனாலும் அங்கு பணிபுரிவோர் மக்களை நடத்துவது நாய்களை நடத்துவது போலதான். எங்களை போல் தடிமாடு இளைஞர்களை என்ன சொன்னாலும் பிரச்சனை இல்லை. வயதுக்கு வந்த முதியவர்களையும் மரியாதை இல்லாது வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள்.


இவ்வளவு காசுதான் வாங்குகிறார்களே பயணிப்போர் கொண்டுவரும் பிரயாண பொதிகளையும் பொருட்களையும் ஒழுங்காக அதே விமானத்தில் கொண்டுவந்து சேர்ப்பார்களோ என்றால் அது ஐயம்தான். ஒருவாறு கஷ்டப்பட்டு வந்துசெர்ந்து எங்களது பொதிகளை தேடினால் அவற்றை காணகிடைக்காது. கேட்டால் Load கூடிவிட்டது நாளைய Planeல் வரும் என்பார்கள். அந்த பொதிகளை பெற ஒவ்வொரு நாளும் அவர்களது அலுவலகத்திற்கு வரும்வரை (அடுத்த நாளும் வரும் என்று உறுதி இல்லை) அலைந்து திரியவேண்டும். உடனடியாக தேவையான பொருட்கள் எனின் அவர்கள் பாடு அதேகதிதான். கொண்டுவரும் பொதிகளைகூடி அவரவர்களிடம் ஒழுங்காக சேர்க்க மாட்டார்கள். குப்பைகளோடு குப்பைகள் போல் சேர்த்து கொட்டுவார்கள். ஒவ்வொருவரும் தங்களுடையதை தேடிப்பெற வேண்டியதுதான். யாராவது மாறி வேறையாருடையதை கொண்டு போனாலும் கேள்வி இல்லை.


இவ்வாறு பல பிரச்சனைகளை ExpoAir விமானசேவையை பயன்படுத்துவோர் அனுபவிக்கின்றனர். பலமுறை நானும் இவர்களது சேவையை பயன்படுத்தியவன் எனறவகையில் நான் எனது மனதில் கேட்கும் கேள்விகள் இவைதான்.

  1. காசில்லாமல் இலவசமாகவோ சேவையை நடத்துகின்றனர். எல்லோரிடமும் அன்பாகவும் பண்பாகவும் நடக்கலாம்தானே?
  2. காசுதான் இவ்வளவு வேண்டுகிறார்களே ஒழுங்காகவும் பொறுப்பாகவும் சேவையை நடத்தினால் என்ன?
  3. எங்கேயாவது கொஞ்சம் பிழை என்றால் பொங்கி எழும் மக்கள் கூட்டம் இவர்கள் விடயத்தில் மட்டும் அமைதியாக இருப்பது ஏன்?

யாராவது அவர்களுக்கு பாடம்புகட்ட ஆக்கள் சேர்த்தா சொல்லுங்கோ. நானும் முகமூடி போட்டுக்கொண்டு பின்னால வாறன்.

மனதில் சொல்லிகொள்வதெல்லாம் இதுதான்: இன்னும் கொஞ்ச நாளில் உலகநாயகன் பாதையை திறந்து விடுவாராம். அதன்பிறகு உங்கள்பாடு சிங்குசாதான்!!!!!!


பி.கு: நான் இங்கே சொன்ன பெரும்பாலான விடயங்கள் கொழும்பில் உள்ள ExpoAir அலுவலகத்தில் வேலை செய்வோருக்கு 100%மும் யாழில் வேலைசெய்வோருக்கு 90%மும் பொருந்தும்.

காதல் செய்வோம்!


தொடர்ச்சியான இரவு நேர Training ஆல் மனமும் உடலும் நன்றாக களைத்துப்போயிருந்தது. நேற்றுதான் எனது பொறுப்பாளரிடமும் நேரத்துக்கு Reportகள் அனுப்பவில்லை என்று வாங்கிக்கட்டியிருந்தேன். அதுக்கு சரியான காரணங்கள் என்னிடம் இருந்தாலும் அதை சொல்லோணும் என்று நான் விரும்பவில்லை. ஏனெனில் எனது ‌ வேலைகளை ஒழுங்காக இயலுமான அளவு வடிவாக செய்திருந்தேன். இவ்வளவு கஷ்டப்பட்டும் பயனில்லை என்று நினைத்த போது மனது ரொம்பவே சலித்துப்போயிருந்தது. நடைபிணமாக அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினேன். செய்யும் எந்த செயல்களிலும் பிடிப்பு இல்லாது இருந்தது. ஒரு பதிவு இடும் நேரம் இல்லை எனினும் மற்ற வேலைகளை மூட்டைகட்டி வைச்சுவிட்டு தற்போதைய நாளிற்கு ஏற்றபடி ஒரு பதிவை இட எண்ணியுள்ளேன்.

நாட்டில் நடைபெறும் கோரநிகழ்வுகளிற்கிடையில் இது தேவைதான என்று பலர் நினைக்க கூடும். நண்பர் ஒருவர் அதிகாலை வேளையில் அனுப்பிய Messageல் அக்கொடூரங்கள் படங்களாக காட்டப்பட்டிருந்தது. நித்திரையால் விழித்த எனக்கு நல்ல தொடக்கம். பார்க்கவே முடியவில்லை, அழிய பிறந்த இனம் தமிழ் இனம் என நினைத்துக்கொண்டேன். எது எப்படி இருந்தாலும் நான் எழுத வந்த விசயத்துக்கு வருகிறேன்.

ந‌ாளை காதலர் தினம் பெப்ரவரி 14. உலகம் முழுக்க காதலர்களால் கொண்டாடப்படும் தினம்.

காதல் புனிதமானது தூய்மையானது என்றெல்லாம் சொல்கிறார்களே காதலிப்பவர்களையும் நடைமுறையிலுள்ள காதலையும் பார்த்தால் அப்படியா தெரிகிறது? எல்லாக்காதலையும் காதலிப்பவர்களையும் அவ்வாறு கூறவரவில்லை. பெரும்பாலான காதல் இப்போது கெட்டு சீரழிஞ்சு கிடப்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய உண்மை. அன்றாடம் சாலை ஓரங்களிலும் கடற்க‌ரைகளிலும் பொதுஇடங்களிலும் காண்கின்ற காட்சிகள் பல முகத்தை சுழிக்க வைக்கின்றன. சோடிகள் சேர்ந்து இருந்து செய்யும் சேஷ்டைகள் கொஞ்ச நஞ்சமில்லை. மற்ற ஆக்கள் பொது இடங்களில் இருக்கிறார்களே என்பதையும் சிந்திப்பதில்லை. இதுவா காதல் ? இதற்கு பெயர் வேறு!

காதல் செய்யும் இருவரும் கைகளை பிடித்தவாறே ஊர் முழுக்க பவனி வந்தால்தான் காதல் எண்டு சொல்லலாம் என்கின்றனர். யார் வகுத்த சட்டங்கள் இவை? திரைப்படங்களில் காட்டப்படும் சில பிழையான காட்சிகளை நம்மவர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அதன் படியே நடக்க முயல்வதுதான் கேவலத்திலும் ‌ கேவலம். ”நளதமயந்தி” , ”அழகிய தீயே” போன்ற தரமான தூய்மையான காதல் உள்ள படங்களை பார்க்காததன் விளைவுதான் இது. காதல் என்ற பெயரில் எத்தினை படங்கள் வந்திருக்கும் அனைத்து படங்களும் காதலை ஒழுங்காக சொல்லியிருக்கா என்பது கேள்விக்குறியே. இனியாவது, காதலிப்போர் மேலே குறிப்பிட்டவற்றை கவனித்தால் சரி!

மதம் மொழி இனம் கடந்து மனங்களை காதல் செய்வோம்.
எத்த‌டைக‌ளையும் இரு மனம் கொண்டு தகர்த்து காதல் செய்வோம்.முதலாவது போலீஸ் நிலைய அனுபவம்-II

இனி பிரச்சனை இல்லை எண்டு நினைத்த படியே முன்னே நகர்கிறேன். முன்னே சென்ற 5 பேரை பாக்கிறேன். ஓ கடவுளே! அவர்கள் முன்னேற்றத்தில் தடை. இன்னுமோர் இராணுவ வீரரால் வழிமறிக்கப்பட்டு அவர்கள் விசாரிக்கப்பட்டு கொண்டிருந்தனர். எனக்கும் அவர்களுக்கும் இடையில் 100மீட்டர் இடைவெளிதான் இருந்திருக்கும். நேரம் வேறு சென்று கொண்டிருக்கிறது அவர்களை விடுவதாக காணோம். பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து எனது நடையை தளர்த்துகிறேன். தூரம் குறைகிறது, வேறு paathai இல்லை நேரே முன்னேதான் போகவேண்டும். அவர்களுக்கு அருகில் நானும் வந்துவிட்டேன். ICகேட்டான் கம்பஸ் IC எடுத்து நீட்டினேன். வடிவா பாத்துவிட்டு தமிழ் என்று புரிந்துகொண்டு NIC கேட்டான் கொடுத்தாலும் வேலை இல்லை யாழ்ப்பாண IC அல்லவா அது. அடுத்ததாக பொலிஸ் ரிப்போட்டு கேக்கிறான். என்ன செய்யிறது? இவ்வளவும் முதலேயே மறிபட்டு நிண்ட 5 பேரிட்டேயும் கேள்பட்டு இருந்தது.


அவர்களும் என்ன செய்யிறது என்று தெரியாம நல்லா முழிச்சு கொண்டு நிண்டார்கள். நாங்கள் கம்பஸ், பொலிஸ் ரிப்போட் தேவையில்லை கம்பஸ் IC மட்டும் காணும் எண்டு மொறட்டுவ பொலிஸ் சொன்னதாக ஒரு பிட்டையும் போட்டு பாத்தோம். பயனில்லை. "நீங்க எங்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இந்த பக்கத்தால தப்பி ஓடதானே இதால வந்தனிங்க?" எண்டு கேட்டான். "கிளாஸ் நேரம் போட்டுது அதுதான்" என்று உண்மையை கூட சொல்லி கெஞ்சி பார்த்தோம். அவன் விடுவதாக இல்லை.

தான் Promotion வாங்குவதுக்காக எங்களை தனது மேலதிகாரியிடம் கொண்டு சென்றான். "தப்பி போக பிளான் பண்ணினவை" தான் பிடிச்சிட்டதாக பெருமையாக தனது புகழ் பாடினான் அவன். தெரிஞ்ச சிங்களம் ஆங்கிலம் எண்டு எல்லாத்தயும் போட்டு கதைத்து பாத்தோம். என்னுடன் பிடிபட்ட கனிஸ்ட மாணவர்கள் கம்பஸ் விடுதிகளில்தான் இருப்பதாக கூறியும் பயனில்லை. அவர்களுக்கு அடுத்தநாள் இறுதி ஆண்டு பரீட்சை இருந்தது. செண்டிமண்ட் Touchகளுக்காக அதையும் கூறிப்பார்த்தும் எள்ளளவுக்கும் பிரயோசனம் இல்லை. 10 நிமிடத்திற்கு மேல் நடந்த பேச்சுவார்த்தையில் துளியும் முன்னேற்றம் இல்லை. போலிஸ் ரிப்போட் கட்டாயம் வேணும் இல்லாட்டி கல்கிஸை பொலிஸ் ஸ்டேசனுக்கு தான் போக வேண்டும் என்று கூறினார் அந்தஅதிகாரி. அதால போய் வருற ஆக்களெல்லாம் எங்களை ஒரு பயங்கரவாதிகளை பாப்பதுபோல் பார்த்தனர். நிலமை கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருப்பதை உணர்ந்தோம். ‌

அடுத்த கணம் உயரதிகாரியின் பணிப்பின் பேரில் ‌ஹையஸ் வானில் கல்கிஸை பொலிஸ் நிலையத்திற்கு பக் செய்யப்பட்டோம். கொழும்புக்கு வந்ததிற்கு முதன்முதலில் ஹையஸ் வான் பயணம் அது! பாதுகாப்பிற்கு மத்தியில். வழமையாக பஸ்ஸிலேயே பயணம் செய்து அலுத்துப்போன எனக்கு அந்த பயணம் ஒரு வித்தியாசமாக இருந்தது. பிடிபட்டிட்டம் எப்பிடியும் வெளியே வர ஒரு நாளாவது எடுக்கும் என அனுபவசாலிகளிடமிருந்து அறிந்து கொண்டிருந்தேன். அன்று அப்பாவும் அம்மாவும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு வர முதலிலேயே முடிவு செய்யப்பட்டிருந்தது. எப்பிடியும் அவை வந்து எடுத்து விடுவினம் எண்ட நம்பிக்கை இருந்தது. வானில் எங்களோட வந்த பொலிஸ் சற்று நல்லவர். அவரிடம் எமது பிரச்சினைகளை சொல்லி எங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம். கனிஷ்ட மாணவர்கள் தங்களது விடுதி வோடனிடமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எங்களை வந்து விடுவித்துவிடுமாறு கூறினார்கள்.

‌‌அதற்கிடையில் கிடைத்த நேரத்தில் போனை போட்டு பிடிபட்ட விசயத்தை நண்பர்களுக்கும் அண்ணனுக்கும் அறிவித்து விட்டேன். வகுப்புக்கு போய்க்கொண்டிருந்த அண்ணனும் பொலிஸ் நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்.
பொலிஸ் நிலையத்திற்கு உள்ளே எங்களை அழைத்து சென்று தனித்தனியே விசாரிக்க ஆரம்பித்தனர். தொலைபேசி ‌இலக்கங்களையும் தங்குமிட மற்றும் இதர விபரங்களையும் குறித்துக்கொண்டனர். அன்று பல இடங்களிலிருந்தம் எங்களைபோல பிடிபட்டவர்களால் கல்கிஸை பொலிஸ் நிலையம் நிரம்பியிருந்தது. தொடர்ச்சியாக நாளை இறுதியாண்டு பரீட்சை என மற்றவர்கள் வற்புறுத்தியமையினாலோ என்னவோ சற்றும் எதிர்பாராத வகையில் 30 நிமிடத்தின் பின் அனைவரையும் எந்த நிபந்தனையுமின்றி விடுவித்தனர். என்ன அதிசயம்! அப்பத்தான் பிடிபட்டதிலிருந்து இருந்த நடுக்கம் நின்றது.

தமிழனாக கொழும்பில இருக்கிறதுக்கு பெற வேண்டிய தகுதியை (ஒரு தரமாவது பிடிபட வேண்டும்) பெற்ற சந்தோசத்தில் பெருமிதத்துடன் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறினேன்.

முதலாவது போலீஸ் நிலைய அனுபவம்-I


எனது முதலாவது பொலிஸிடம் ஆப்பிட்ட அனுபவம் குறித்து இதில் பதிவிடஇருக்கிறேன். இச்சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேலாயிருக்கும். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. அந்நாளில் வழமையாக வகுப்பொன்று பம்பலப்பிட்டியில் 10.30-2.00 இருந்தது. அன்றும் வழமை போல தங்குமிடமான கட்டுப்பெத்தையிலிருந்து 255 பஸ்ஸிற்காக 10.15ற்கு காத்திருந்தேன். எப்பவும் வகுப்பு தொடங்கி 20நிமிசத்துக்கு பிறகே போவதால் நேரம் சுணங்கிவிட்டது எண்டு நான் அப்ப நினைக்கவில்லை. (வேளைக்குபோயும் என்ன செய்யிறது? என்ர Brotherம் வருவதால் அவன் நோட்சுகளை ஒழுங்கா எழுதுவான் எண்ட நம்பிக்கையில நான் பெருமளவான நேரத்தை ACக்குள் தூங்கியே கழித்து விடுவதுண்டு).

அப்படி காத்திருந்த வேளை அந்த வழியே சென்ற சக மாணவன் "இண்டைக்கு Galle Roadல செக்கிங்ஆம் பாத்து போ!!" என்று சொல்லிட்டு போனான். அப்ப எனக்கு அது
பெரிசா படவில்லை. எத்தினை செக்கிங் கண்டிருப்போம். ஒவ்வொரு முறையும் Police Report இல்லாட்டியும் பந்தாவா Campus IC காட்டி நழுவிவிடுவோமல்லவா. Police Report எடுக்கோணும் என்பது ஒருபொருட்டாக அதுவரை காலமும் தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் இருந்த வீட்டு உரிமையாளரிடம்(சிங்களவர்) பல தடவை Police Report கேட்டு தொல்லை கொடுத்திருந்தோம். Moratuwa Police Station ல் போலீஸ் ரிப்போர்ட் தமிழர்களுக்கு தரமாட்டினம் என்பதால் கடைசிவரை எங்களுக்கு அது கிடைக்கவில்லை.

5 நிமிட காத்திருப்பின் பின் வந்த 255ல் ஏறி புறப்பட்டேன். கட்டுப்பெத்த சந்தியை தாண்டியபோது நிலமை சற்று மோசம் என்பதை உணர்ந்து கொண்டேன். Checkpoint ல் இருந்து வாகனங்கள் பெரு வரிசையாக நின்றது. ஒருமாதிரி எறும்பு ஊருற மாதிரி ஊறி 10.30 போல சோதனை சாவடிக்கு கிட்ட வந்து நின்றது. இப்படியே ஒருவர் ஒருவராக செக் பண்ணி அனுப்பினா நான் வகுப்புக்கு போன மாதிரிதான் எண்டு யோசிச்ச போது எனது Super Senior(7G Group)ல் ஐவர் Galle Road ஐ குறுக்கே கடந்து மற்ற பக்கமாக Fashion Bug வழியே நடந்து வெற்றிகரமாக முன்னேறி சென்று கொண்டிருப்பதை பார்த்தேன். எனக்கும் முதலிலேயே அப்படி ஒரு ஐடியா இருந்தது எண்டாலும் அப்படி குறுக்கே கடக்கும் போது காவல்துறையினர் பாத்தா நிலமை மிகவும் மோசமாகும் என்பதால் பேசாது இருந்திருந்தேன்.

ஆனாலும் அவர்களின் வெற்றிகரமான முன்னேற்ற பாய்ச்சலை பார்த்த எனக்கும் ஒரு வேகம் வந்து சடுதியாக பஸ்ஸில் இருந்து இறங்கி ஒன்றையும் கவனியாது வீதிக்கு குறுக்கே நடந்தேன். தொடக்கம் நல்ல சிறப்பாகதான் இருந்தது ஒரு ஆமி மாமாவோ போலீஸ் மாமாவோ என்னை அப்ப காணவில்லை. "ஓ வெற்றி! கேனையங்களுக்கு சுத்தியாச்சு இனி ஸ்பீடா போன வேளைக்கு போயிடலாம்" எண்டு எனது
மனசு சொல்லிக்கொண்டது. ஒழுங்கா வரிசையில நிண்டு செக்கிங் முடிக்க எப்படியும் 20 நிமிசமாவது பிடிக்கும் இது Short ரூட்டு வெறும் 5 நிமிசத்தில் முடிச்சிடலாம். மற்ற பக்கம் இருக்கும் போலிஸிடமோ ஆமியிடமோ IC காட்டிவிட்டு பிரச்சினை இல்லாம போயிடலாம் எண்டு நினைத்தேன். ஏனெண்டா இங்க கியு இருக்காது.

நடந்து போய்கொண்டு இருக்கும்போதே எனக்கு முன்னால் வழிகாட்டி சென்று கொண்டிருக்கும் சீனியர் மாணவர்களை பிரச்சனை இல்லாது போகிறார்களா? என்று கவனித்து கொண்டேன். அவர்களும் முன்னே ஒரு ஆமியிடம் அடையாள அட்டையை காட்டிவிட்டு பிரச்சனை இல்லாது முன்னேறிக்கொண்டிருந்தனர். நானும் அதே ஆளிடம் Campus IC காட்ட அவனும் "ஆ மொறட்டுவ விஸ்வவித்யாலய" என்று கூறி புன்முறுவல் செய்தபடி மேற்கொண்டு போக அனுமதித்தான்.

மீதி அடுத்த பதிவில்............

இவர்களையும் கொஞ்சம் கவனியுங்க!


எங்கயாவது கொடுமைகள் நடந்தால் உற்று நோக்கி தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் நடுநிலை நாடுகள் கூட ஏன் எங்கள் விடயத்தில் மட்டும் மௌனம். இஸ்ரேல் காஸாவிலுள்ள அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது கொடுர தாக்குதல் நடத்தியபோது குய்யோ முறையோ என்று கூக்குரலிட்ட நாடுகள் எங்கள் விடயத்தில் மட்டும் பெட்டிப்பாம்பாக அடங்கியிருப்பது ஏன்?? நாங்கள், தமிழ்பேசுபவர்கள் அவர்களுக்கு மனிச ஜென்மங்களாக தெரியவில்லையா? அடிமைகளாக இருக்க பிறந்தவர்களா நாங்கள்? வன்னியில் அப்பாவி மக்கள் நாள்தோறும் கோர எறிகணைதாக்குதலாலும் விமானத்தாக்குதலாலும் உடலங்கள் சிதறி பலியாவது உனக்கு தெரியவில்லையா சர்வதேசம்?

முன்பேயிருந்தே வறுமையின் பிடிகளில் சிக்கியும் யுத்தத்தின் கோரதாண்டவத்திலும் அகப்பட்டு வாழ்வில் நிம்மதியற்று வாழ்ந்து வந்த மக்களுக்கு கிடைத்திருக்கும் பரிசை பாருங்கள். யுத்தம் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்துவதுதானே அவசியம் ஆனால் மக்களுக்கு வசந்தம் என்று கூறிக்கொண்டு அவர்களையே கருவறுக்கும் வேலை நடைபெறுவது மிகவும் நல்லம்!

பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட இடங்களிலும் போர் நிறுத்தம் என்று கூறப்பட்ட நேரங்களிலும் குண்டுகளை பொழிந்தால் மக்கள் உயிர் தப்புவது எவ்வாறு? எவ்வாறாயினும் ஒருவாறு தப்பி மறுகரைக்கு வந்தால் கூடி நடப்பது என்ன? அனைவருக்கும் தெரிந்தது. எத்தினை செம்மணிகளை கண்டிருப்போம்.

உயிர் போவது எல்லாம் பெரிசில்லை எதாவது ஒரு விபத்தென்றாலோ வருத்தம் எண்டு செத்தாலோ கொஞ்ச நேரம் தான் உத்தரிப்பு. சாகப்போறம் எண்டு தெரிந்த படியே எறிகணை சத்தத்திற்கும் விமான சத்தத்திற்கும் பயந்து பங்கரில் ஒழிந்தபடியே சாவை எதிர்நோக்கி இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தை பற்றி நான் கதைக்கவில்லை அதில் சரி பிழை பற்றி கதைப்பது அர்த்தமற்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் எல்லாம் போராட்டங்கள் ஆனால் இங்க நடப்பதெல்லாம் என்ன? உண்மைகளை இங்க கதைக்க தடைதான் ஆனால் நடைபெறும் அநீதியை பற்றி அறிந்திருக்கவேண்டாமா? பலருக்கு இதுகள் பற்றி ஒண்டுமெ தெரியாதிருக்கிறது. எனக்கு தெரிந்த வகையிலேயே என்னுடன் படிக்கும் சக மாணவர் இருவரின் குடும்பங்கள் அங்கே அகப்பட்டிருக்கின்றன. என்ன பாடுபடும் அவர்களின் மனசு. அற்ப சொற்ப சலுகைகளை அனுபவித்தபடியே சொகுசாக இருக்கவே பலர் விரும்பிறம். ஒரு தடைவையாவது அவர்களுக்காக கடவுளிடம் கும்பிட்டு இருப்போமா? அல்லல்படும் அப்பாவி மக்களையும் உங்கள் வாழ்க்கையில் ஒரு தடைவையாவது நினைத்து பாருங்கள்.

வருது பெப்ரவரி 14. உதையெல்லாம் நாங்க ஏன் கவனிக்கோணும்? நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. திருத்தமுடியாத பிறவிகள் நாங்கள்........


Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்