மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்கள்

எப்பூடி வலைத்தளத்திருந்து நண்பர் ஜீவதர்ஷன் இந்த தொடர்பதிவுக்கு 2கிழமைக்கு முன் அழைந்திருந்தார். என்றாலும் அதன்பின்னரான நாட்கள் மிகவும் அலுப்பாக கழிந்தமையால் என்னால் உடனடியாக அவரது வேண்டுகோளை நிறைவு செய்யமுடியவில்லை. என்றாலும் ஒரு மாதிரியாக இப்போ நேரம் எடுத்து பதிவிடுகிறேன். தாமதத்திற்கு மன்னியுங்க சார்!

கடும் தமிழ் சினிமா ரசிகனான நானும் இற்றைவரை பார்த்த தமிழ்சினிமாக்கள் கணக்கிலடங்காதவை. ஆனாலும் பார்த்த ஏராளமான படங்களின் கதைக்கரு மட்டும் நினைவிலிருந்தாலும் காட்சிகளை சொற்ப காலத்திலேயே மறந்து விடுவேன். பார்த்த ஒரு சில படங்களை தவிர மற்றைய படங்களின் காட்சிகள் எல்லாம் மறந்து போய்விட்டேன். (நல்ல படங்களை கூட). எனக்கு நினைவிலிருக்கும்  படங்களை கொண்டு இந்த பதிவை எழுத முயற்சிக்கிறேன். இந்த மூன்று படங்களை பற்றி எழுதவே அதிக இடத்தை பிடித்துக்கொண்டமையால் இவற்றுடனேயே நிறுத்தி கொள்கிறேன்.

இத்தொடர்பதிவை எழுத விரும்பினால்  நிகழ்வுகள் கந்தசாமியையும், வானம் தாண்டிய சிறகுகள் ஜீ யையும் அழைக்கிறேன்.

அன்பே சிவம்

இதுவரை பார்த்த படங்களில் போற்றக்கூடிய என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் முதல் இடம் இந்தப்படத்திற்குதான் உண்டு. ஒருத்தன் வாழ்க்கை பற்றி நுண்ணறிவை பெறுவதற்கு கட்டாயம் பாக்க வேண்டிய படம். இந்தப்படத்தை படம் என்று சொல்வதிலும் ஒரு பாடம் (lesson) என்று சொன்னால் மிகப்பொருத்தமாகும் என நினைக்கிறேன்.  நான் A/L படிக்கும் காலத்தில் பார்த்து புல்லரித்த படம் இது. நான் வாழும் வாழ்க்கை சரிதானா என்று என்னையே கேள்வி கேட்க வைத்த படம். இந்த படம் பார்த்த பின்புதான் கொஞ்சமாவது மாறினேன் என்று பெருமை படுவதுண்டு. இந்த படத்தில் சுனாமி பற்றியும் கமலஹாசன் சொல்லியிருப்பார். இந்தப்படத்தின் கதை கமலஹாசனாலும் இயக்கம் சுந்தர்.Cயாலும் மேற்கொள்ளப்பட்டது. கமேர்ஷியல் இயக்குனரான சுந்தர்.C படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல உதவியிருந்தார். வித்தியாசகர் இசையாக படத்தில் வாழ்ந்திருப்பார்.

துடிப்பான இளைஞரான மாதவனும் வாழ்க்கையில் பல அடிபட்ட  அனுபவசாலியான கமலஹாசனும் ஒரு விமான நிலையத்தில் சந்திப்பதோடு கதை ஆரம்பித்து உயிரோட்டமாக பயணிக்கிறது. ஆரம்பத்தில் கமலஹாசனின் பல தத்துவங்களையும் படிப்பினைகளையும் உதாசினம் செய்யும் மாதவன் பின்னர், கமலஹாசனின் பிளாஸ்பக் மற்றும் அவரின் உயரிய குணத்தை அறிந்து கொண்டு அவரின் அன்பிற்கு அடிமையாகிறார். தனது திருமணத்தில் கலந்து கொள்ளவும் அழைக்கிறார்.
அழைப்பையேற்று அங்கு சென்றபோதுதான் கமலஹாசனுக்கு மாதவன் திருமணம் முடிக்க இருக்கும் பெண் தான் தன்னை காதலித்த பெண் என்றும் அவளின் அப்பாவான வில்லன் நாசரால் ஏமாற்றப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. எனினும் கமலஹாசன் அந்த திருமணத்தை குழப்பாது நாசரிடம் வெருட்டி தொழிலாளிகளுக்கு கிடைக்கவேண்டிய ஊதியத்தை பெற்றுக்காடுக்க வழிசெய்து விட்டு மாதவனுக்கு ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு புறப்படுகிறார். என்றாலும் கோபம்கொண்ட  நாசார் கமலை கொல்ல சந்தான பாரதியை அனுப்புகிறார்.அப்போ கமலை வெட்ட வந்து மனசு மாறுகிறார் சந்தான பாரதி. அப்போது ”உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கோ தெரியாது எனக்கு நிறைய இருக்கு.” என்கிறார். அப்போ கமல் ”எனக்கும் இருக்கு” என்று சொல்லும் தருணத்தில் ”எந்த சாமி?” என்று சந்தான பாரதி கேட்கிறார். அப்ப அவரையே காட்டி சொல்லும் வசனங்கள் மறக்க முடியாதவை. இந்த படம் என்னை வாழ்நாள் முழுவதும் பாதித்ததில் முதல் இடத்தில் உள்ள படம்.

காதல்

2004ல் வெளிவந்த மிகச்சிறந்த யாதார்த்த சினிமாவில் இதுவும் ஒன்று. பல புதுமுகங்களை கொண்டு இயக்குனர் சங்கர் தான் இயக்காமல் தயாரித்த முதல் படம் இது. படம் நல்ல பெயரை பெற்றதோடு மட்டுமில்லாமல் வர்த்தக ரீதியாகவும் மிகவும் சம்பாதித்த படம். நடிகை சந்தியா, வில்லன் நடிகர் தண்டபாணி, இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் என புதுமுகங்கள் அறிமுகமான படமாக இது இருக்கின்றது. படத்தில் ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் எனினும் ”உனக்கென இருப்பேன்” என ஹரிசரன் பாடிய பாடல் மெகா ஹிட் ஆனது. இந்தபடமும் நான் A/L படிக்கின்ற காலத்தில் வந்திருந்தது. அதோடு பல சந்தர்ப்பங்களில் பாக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் நழுவி இறுதியாக பல்கலைக்கழகத்திற்கு வந்த பின்பே பார்க்க சந்தர்ப்பம் கைகூடி வந்திருந்தது.

படம் முழுக்கவே சோகமே இழையோடும் வகையில் செதுக்கப்பட்டிருந்தாலும் படத்தின் இறுதிக்காட்சிகள் அனைவரின் கண்களிலும் ஈரத்தை வரவழைக்கின்றன. ஏழை பரத்தும் பணக்கார வீட்டு பிள்ளை சந்தியாவும் வீட்டுக்கு தெரியாம சென்னை ஓடி வந்து சரியா கஸ்டப்பட்டு கல்யாணம் முடித்து இருக்கும்போது ஒருவாறு பெண்வீட்டார் கண்டுபிடித்து இருவரையும் கோரமாக பிரித்து விடுகின்றனர். அதன்பின் சந்தியா வேறொரு கல்யாணம் செய்து கொள்கிறார். பரத்தும் எப்பிடியாவது பிழைத்து ஒழுங்கா இருப்பார் என்று நினைத்து கணவனுடன் வாழ்ந்து வருகையில், வீதயில் பரத்தை ஒரு விசரனாக காண்கிறார்.

காதல் படத்தின் தெலுங்கு பதிப்பின் Climax. தமிழ் youtubeல் கிடைக்கவில்லை.


அப்படியே மோட்டார் சைக்கிளிலிருந்து மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். அங்கே ஒருவருக்கும் தெரியாமல் விசர் பரத்தை பார்க்க வீதிக்கு தேடி வருகிறார். பரத்தை கண்டதும் தனக்குதானே தலையிலடித்துக்கொள்கிறார். அப்போது சந்தியாவை தேடிவந்த கணவன் சந்தியாவை தலையில் தடவிக்கொடுத்து அனைத்தையும் உணர்ந்தவராக பரத்தையும் தங்களோடு சேர்த்து கூட்டி செல்கின்றர். இந்தப்படத்தை பொறுத்தவரை இறுதிகாட்சிகளாக முக்கியமாக மேலே குறிப்பிட்ட இரு காட்சிகளை சொல்லலாம். (பரத்தையும் சந்தியாவையும் பிரித்தது, சந்தியா பரத்தை விசரனாக கண்டு கொள்வது). இந்தக்காட்சிகளில் காணப்பட்ட யாதார்த்த தன்மைகளும் கவலை நிறைந்த காட்சிகளும் பலரது மனதில் சுமையை ஏற்படுத்தி விட்டு காதலினால் ஏற்படும் பிரச்சனைகளை உணர்த்தி நிற்கின்றது.

7G Rainbow Colony

நான் இங்கே தெரிவு செய்த இந்த படமும் மேலே குறிப்பிட்ட காலப்பகுதிகளுக்கு அண்மையில் வெளிவந்த படம்தான். 2004 ல் இந்தப்படம் வெளிவந்தது. காதல் கொண்டேன் பட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் செல்வராகவனால் திரைக்கதை எழுதி இயக்கி வெளிவந்த படம். தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலையே இந்தப்படத்திலும் ஹீரோயினாக பயன்படுத்தியிருந்தார். பின்னர் இவரே செல்வராகனின் காதலியாகவும் மாறி திருமணம் வரை சென்று இப்போது விவாகரத்தும் பெற்றிருக்கார். இந்தப்படத்தில் தயாரிப்பாளர் A.M.ரத்னத்தின் மகன் ரவிக்கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து Filmfare விருதையும் பெற்றிருந்தார். இவரது கீச்சிடும் குரல்தான் இவரது முக்கிய சிறப்பம்சமாக எனக்கு படுகிறது.

இந்தப்படமும் காதல் படம்போலவே நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹீரோவுக்கும் பணக்கார ஹீரோயினிக்குமான காதல்கதைதான். ஆரம்பத்தில் கலகலப்பாக இளமை துடிப்புடன் செல்லும் இந்தப்படத்தில் இப்படியொரு serious ஆன சோக காதல் கதை வரும் என்று படம் தொடங்கிய சந்தர்ப்பத்தில் சொல்வது கடினமாக இருந்திருக்ககூடும். ரவிக்கிருஷ்ணாவுக்கும் சோனியா அகர்வாலுக்கும் இடையில் ஆரம்பத்தில் மோதலில் ஆரம்பித்த சந்திப்புக்கள் பின் காதலாக மாறிவிடுகிறது. ஆனால் சோனியா ஏற்கனவே இன்னொருக்கு நிச்சயிக்கபட்டு இருந்திருந்தாள். இவர்களின் காதலை அறிந்து சம்மதிக்காத ஒரே colonyல் இருந்த பெண்வீட்டார் பின் வேறு இடத்திற்கு  மாறிவிடுகின்றனர்.

எனினும் அந்த வீட்டிலிருந்து வெளியேறி ரவிக்கிருஷ்ணாவை ஹோட்டல் அறையில் சந்திக்கிறார் சோனியா. இந்த ஒருநாள் ரவிக்கிருஷ்ணாவுடன் கழித்ததே போதும் வீட்டை எதிர்த்து சொல்லாமல் ஒடிசென்று திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறார்  சோனியா. இவ்வாறு கதைவழிப்பட்டுக்கொண்டு சோனியா வீதியை கடக்கும்போது லாறியுடன் கோர விபத்துக்குள்ளாகிறார். அதை பார்த்த ரவியும் சம்ப இடத்திற்கு போக எத்தனிக்கையில் விபத்துக்குளாளகிறார்.நினைவு திரும்பி எழும்பி நண்பர்களிடம் சோனியாவை பற்றி கேட்கிறார் ரவிக்கிருஷ்ணா. அவர்கள் நன்றாக இருக்கிறார் என்று பொய் சொன்னபோதும் அவள் இறந்ததை அறிந்து கொள்கிறார். சோனியாவின் தந்தைக்கும் உங்கள் மகளை தானே நண்பியின் கல்யாணம் என்று பொய் சொல்லி வரவழைத்ததாகவும் கூறுகிறார். பின் சோனியாவின் இழப்பை தாங்க முடியாமல் பலமுறை தற்கொலை முயற்சிசெய்தபோதும் அவை வெற்றி தரமால் சோனியாவே ஆவியாக வந்து இப்படியான முயற்சிகளை கைவிடகோருவதாக உணர்ந்து, அவளுடன் தொடர்ந்து சந்தித்து பேசுவதாக நினைத்தே வாழ்ந்து வருகிறார் ரவிகிருஷ்ணா.

இந்த படத்தை செல்வராகவன் எடுத்திருந்த விதமும் யுவன் சங்கர்ராஜவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை சோகத்தின் மறு உருவமாக இறுதி கட்டங்களில் மாற்றியிருந்தது.

தெய்வத்திருமகள் - திரைப்பார்வை

வழமை போல இந்த திரைப்பார்வையிலும் படத்தின் கதை ஒரு துளியளவேனும் சொல்லப்படவில்லை. விமர்சனம் என்ற பெயரில் படக்தையை திருப்பி சொல்ல எனக்கு தெரியாது. அது விமர்சனமும் ஆகாது. படத்தின் கதை இதில் இல்லையே எனக்குறைபட்டு கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளி இல்லை. படத்தின் நிறைகுறைகள் எனது பார்வை மட்டுமே எனது விமர்சனத்தில் வருகின்றது.

விக்ரம் Baby Sara
 தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் சில படங்களை பார்க்கும்போதும் அதற்கு விமர்சனம் எழுதும்போதும் அவை எங்களை பெருமைப்பட வைக்கும். அப்படியான ஒரு படம்தான் தெய்வத்திருமகள். இதற்கு விமர்சனம் எழுத கிடைத்ததே ஒரு பாக்கியம் ஒரு பெருமை.

ஆரம்பத்தில் வெளிவந்த ரெயிலர்கள், ஜீவி.பிரகாஸ்குமாரின் இசையில் பாடல்கள், இயக்குனர் விஜய்  (மதராசப்பட்டினம் பாதிப்பின் பின்)+ விக்ரம் படம் என்ற காரணங்களால் இந்த படம் பற்றிய பலத்த எதிர்பார்ப்புக்கள் நாளுக்கு நாள் படத்தின் வெளியீடு தள்ளிதள்ளி போயும்கூட ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. இயக்குனர் விஜயின் இதற்கு முந்தைய  3படங்களும் போதிய வரவேற்பை பெற்ற போதும் ஆகா ஓகோ என போற்றப்பட்டது மூன்றாவதாக வந்த மதராசப்பட்டினம்தான். எனவே நாலாவது படமான இதற்கு எதிர்பார்ப்பு பெரிதாக கிளம்பியதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

சினிமாவில் முக்கியமாக உள்ள ஒவ்வொரு துறையிலும் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற ஆட்களை கொண்டே இந்தபடம் நேர்த்தியாக இயக்குனர் விஜயால் தொடங்கப்பட்டது. நடிப்புக்கு விக்ரம், காமடிக்கு சந்தானம், ஒளிப்பதிவுக்கு நீரவ்ஷா, படத்தொகுப்புக்கு அன்ரனி, இசைக்கு ஜீவி.பிரகாஸ்குமார், பாடல்களுக்கு நா.முத்துக்குமார் என்று முன்னிலையில் இருப்பவர்களையும் மேலும் பல நடிகர்களையும் சிறப்பாக ஒருங்கிணைத்து தமிழ்சினிமாவில் வந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக  தெய்வதிருமகளை தந்துள்ளார் இயக்குனர் விஜய். இந்த படத்திற்கு நிச்சயமாக, குறைந்த பட்சம் ஒரு தேசியவிருதாவது கிடைக்கப்போவது உறுதி.

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் என்று நினைக்கிறேன் ஒரு பேட்டியி்ல் ”தமிழ்சினிமாவில் தற்போது இயக்குபவர்களில் உங்களுக்கு பிடித்த இயக்குனர்கள் யார்?” என்று கேட்டபோது இயக்குனர் விஜயின் பெயரையும் வேறு சிலரோடு சேர்த்து சொல்லியிருந்தார். மேலும் ”மதராசப்பட்டிணம்” போன்ற படத்தை என்னால் என்ன செய்தும் எடுக்க முடியாது என்றும் கூறியிருந்தார். தெய்வதிருமகளை பார்த்தபின் பாலச்சந்தர் நிச்சயம் அப்படி சொன்னதுக்கு பெருமைப்பட்டு தனது கொலரை தூக்கிவிட்டுக்கொள்வார்.

இயக்குனர் விஜய் விக்ரம்
எழுத்தோட்டம் ஆரம்பிக்கும்முன் ”இந்தப்படத்தில் மிருகங்கள் துன்பப்படுத்தப்படவில்லை” என்றும் அறியதந்து படத்தை ஆரம்பிக்கின்றனர். சிலர் இந்தப்படத்திற்கு ஏன் இப்படி போட்டனர்? அப்படியான காட்சிகள் இல்லைதானே என்று யோசித்திருக்ககூடும்.  படத்தில் சின்னஞ்சிறு குருவிக்குஞ்சு நிலத்தில் விழுந்து அதை பூனை கடிக்க முயல்வது போலவும் பின் அது காப்பாற்றப்பட்டு கூட்டில் விடப்படுவது போலவும் ஒரு காட்சி வருகின்றதல்லவா அது Graphics துணை கொண்டு உருவாக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம். யாரவது வழக்கு கிழக்கு போட்டு தங்களை பிரச்சனையில் மாட்டிவிடக்கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கையாகவே இப்யடியான வாசகத்தை போட்டிருக்கலாம்.

”டாக்டர்” சியான் விக்ரம் என வரும் எழுத்தோட்டத்தை இந்த படத்தில்தான் முதன்முதலில் பாக்கிறேன். (இரவணன் படத்தில் இவ்வாறு போடப்பட்டதா? எனக்கு தெரிந்தவரை இல்லை)

இந்தப்படத்தின் முதல்பாதி மிகவும் அருமையாக நெஞ்சை தொடும் வகையில் sentimental காட்சிகளாக நிறைந்து ஆனால் அலுப்படிக்காது மெதுவாக நகருகின்றது. அடுத்தபாதி சற்று வேகமாக சுவாரஸ்யமாக சென்று மீண்டும் sentimental காட்சிகளுடன் சங்கமிக்கிறது. படத்தில் சில இடங்களில் பெரிய Logic மீறல்கள் இருக்கின்றபோதிலும் யாரும் அதை பெரிது படுத்த முயல்வார்களாயின் சினிமாதான் இது என்று புரியாதவர்கள் முட்டையில் மயிர் புடுங்குபவர்கள் என்றுதான் அர்த்தம்!

ஆங்கில உபதலைப்புக்களுடன் (English Subtitles) படம் வெளிவந்தமையால் இயக்குனர் விஜய் இப்படத்தை வேறு நாட்டு திரைப்பட விழாக்களுக்கும் Oscar Awards Nomination போன்றவற்றிக்கும்  அனுப்புவார் என்ற ஊகத்தை கிளப்புகிறது. (Oscar போட்டிக்கு தகுதிபெற அந்தப்படம் English Subtitlesடன் வெளியிடப்பட்டிருக்கவேண்டும். இல்லாவிடில் போட்டியில் கலந்து கொள்ள முடியாது). எனினும் இந்தப்படம் வேறு ஒரு வெளிநாட்டு படத்தின் தழுவல் என்பதால் எவ்வாறாக பாக்கப்படும் என்பது தெரியவில்லை.

நடிப்பில் இருவர் அனைவரின் நெஞ்சத்தையும் தொட்டு நிற்கின்றனர். விக்ரமும் சிறுபிள்ளையாக வரும் Baby சாராவும்தான் அவர்கள். பின்னி பிடலெடுத்து பட்டையை கிளப்பிவிட்டனர். இருவருக்கும் தேசியவிருது கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. விக்ரம் மீண்டும் தான் சிறந்த நடிகர் என்பதை உறுதிப்படுத்த, சிறுமி சாரா முகபாவத்தில் காட்டும் சுக துக்கங்கள் வியக்கவைக்கிறது. இந்தளவு சிறு வயதில் இவ்வளவு திறமையா? அழகிய செந்தழிப்பான பால்வடியும் இந்தக்குழந்தையின் முகத்தைபார்த்தாலே துன்பங்கள் பறந்தோடிவிடும் போல தெரிகிறது.

அனுஷ்கா விக்ரம்

படத்தில் இரு நாயகிகள் எனினும் அனுஸ்காவின் வேடம் மட்டுமே கனதியானது. வந்தவேலையை செவ்வனே முடித்து செல்கிறார். அமலாபாலுக்கு முக்கியமற்ற பாத்திரம் என்பதால் சும்மா இடைக்கிடை காட்சிகளில் வந்து போகிறார். இவரின் பாத்திரப்படைப்பு பெரிதாக எடுபடவில்லை.  வழமைபோலவே மாப்பிள்ளை வேடத்தில் கார்த்திக்குமார். (ஆனா இந்தமுறை வெளிநாட்டு மாப்பிள்ளை இல்லை). நல்ல நடிகாரான இவருக்கு இப்படி மிகச்சிறிய வேடங்கள் கொடுப்பது எனக்கு சரியாக படவில்லை . (விஜயின் 2வது படமான பொய்சொல்லப்போகிறோமில் இவருக்கு முக்கிய ஹீரோ வேடம் கொடுத்தமையாலோ என்னவோ இதில் இவரை கௌரவ வேடம் போல் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் விஜய்).

அமலா பால்

முதல்பாதியில் சந்தானம் வந்த காட்சி மிகச்சிறிய அளவே என்பதால் தனது வழமையான மொக்கைகளை முதலில் ஒழுங்காக போடமுடியாது போயிருந்தாலும் பிற்பாதியில் சரியான Seriousஆன நேரங்களிலும் பலரையும் கலாய்த்து படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல பெரிதும் உதவியிருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சக்காட்சியில் வந்தாலும் சிரிப்புக்களை வரவைக்கிறார் பிளாக் பாண்டி. MS.பாஸ்கர் மற்ற படங்களில் வருவதைப்போலல்லாது கொஞ்சம் serious ஆக வருகிறார். YG.மகேந்திரனின் பாத்திரத்தில் ஆரம்பத்தில் வசனங்கள் இல்லையே என்று சொல்லுமளவிற்கு இருந்தாலும் முகபாவத்தால் பாத்திரத்தின் குணவியல்பை வெளிப்படுத்துகிறார். இறுதிக்கட்டங்களில் மட்டும் கொஞ்சம் பேசுகிறார். நாசர் வழமைபோல நடிப்பில். அனுஸ்காவின் நண்பியாக வருபவர் பச்சையாக சொன்னால் ”ஒரு நல்ல பிகர்”.

MS.பாஸ்கர் விக்ரம் பாண்டி

பாடல்கள் ஏலவே வெளிவந்து அனைத்தும் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்து. விக்ரத்தை 2பாடல்கள் பாடச்செய்தது மட்டுமல்லாது அந்த பாடல்களை சூப்பர்ஹிட் ஆக்கிய பெருமை இசையமைப்பாளர் தேவிசிறி பிரசாத்தை (கந்தசாமி படத்தில் DSPன் இசையில் விக்ரம் பாடியது நினைவிருக்கலாம்) போல் GV.பிரகாஸ்குமாரை சாருகின்றது. இந்தப்பாடல்களில் GV.பிரகாஸ் பாடிய ”வெண்ணிலவே” பாடலே எனக்கு மிகவும் பிடித்திருந்து. ”யாத்தே யாத்தே” பாடலுக்கு பின் GV உருகி உருகி பாடிய பாடல்இது. SP. பாலசுப்பிரமணியத்தின் குரலில் ”ஜகிடதோம்” பாடல் பலருக்கு உத்வேகத்தை புதுசக்தியை அளிக்ககூடிய பாடலாக இருக்கிறது. முத்துக்குமாரின் வரிகள் பாடலுக்கு இன்னும் வலுச்சேர்க்கின்றது. பெரும்பாலான இடங்களில் படத்தின் Theme Music, Background scoreஆக வந்து செவிகளை இனிமையாக்குகின்றது.

இந்தப்படதத்தின் காட்சிகள் முழுவதும் உள்நாட்டிலேயே எடுக்கப்பட்டதாலும் பெரிய தொழில்நுட்பரீதியாக காட்சிகள் தேவைப்படாததன் காரணமாகவும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா தனது தனிமுத்திரையை இந்தப்படத்தில் பதிக்கமுடியாமல் போய்விட்டது. Editor அன்ரனி படத்தை சலிப்படையாமல் தொகுத்ததிற்கும் ”ஒரே ஒரு ஊரில” பாடலில் வரும் கிரபிக்ஸ் காட்சிகளிற்கும் ”விழிகளில் ஒரு” பாடலில் வரும் எடிட்டிங்கிலும் பயன்பட்டிருக்கிறார்.

சுருங்ககூறின் தெய்வத்திருமகள் = ONE OF THE ASSETS IN TAMIL CINEMA

வேங்கை - திரைப்பார்வை

அண்மையில் எதிர்பார்த்து தியேட்டருக்கு போன படங்களில், சொதப்பிய இன்னுமொரு படம்தான் வேங்கை. இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் வெளிவந்தமையால் பலத்த ஆர்வம் இருந்தது. ஹரியின் கடைசி படமான சிங்கத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு நல்ல படம் கொடுப்பார் என்ற எதிர்பாப்பை குலைத்து விட்டது வேங்கை. பாவம் ”மாப்பிள்ளை” என்ற அலுப்பு படத்தின் பின் எதிர்பாத்திருந்த தனுஷையும் இது ஏமாற்றிவிடும் போல தெரிகிறது.


அருவாள்  செயின் கத்தி கம்பு வெட்டு குத்து போன்றவற்றி்க்கு பெயர் போன இயக்குனர்தான் ஹரி. ஆனாலும் இவ்வாறான அம்சங்கள் இவரின் படங்களில் நிச்சயமாக வந்தாலும் படத்தில் இவர் கையாளும் வேகம் சுவாரஸ்யம் அதிரடி காரணமாக இவரின் பெரும்பாலான படங்கள் சொதப்பாது நல்லாகவே இருக்கும். ஏன் அண்மையில் வெளிவந்த சிங்கம் படமும் மேல் சொன்ன பாணியில் வந்து மிகமிக வேகமான திரைகதை ஓட்டத்தின் காரணமாக பெரும்பாலானவர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. (பெண்கள் வயது முதிந்தவர்களை மிகவும் கவரவில்லை என்பது உண்மையானது)எனவே வேங்கையும் அதே பாணியில்தான் வரும் என்பது படம் பாக்க போன எந்த பயபுள்ளைக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் 2 1/2 மணி நேரமும் சலிப்பாக இருக்காதென்ற உத்தரவாதம் ஹரி என்ற பெயருக்கு இருந்திருந்தது. முதல் அரைவாசியில் பெரும்பகுதி வெறும் இழுவை + கஞ்சா கறுப்பின் விசர் காமடி + தமன்னா தனுஷ் இடையே வழமையான தமிழ்சினிமா பாணியிலான காட்சிகளுடன் சென்று இடைவேளைக்கு சற்று முன்னர் நல்ல வேகத்துடன் ஆரம்பிக்க தொடங்குகிறது.  பின்னர் அந்த வேகம் எதிர்பார்ப்பை திருப்தி செய்யாம அங்க இங்கயெண்டு நேர்த்தியற்ற திரைக்கதையால் திசை திருப்பப்பட்டு எங்க போனதெண்டு தெரியாம மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. வீணாக தமன்னாவின் கதையில் டுவிஸ்டு வைக்கிறம் எண்டு புகுத்தப்பட்ட கதை படத்துடன் ஒட்டவில்லை. மாறாக படத்தின் யதார்த்த தன்மையை முற்றிலும் குலைக்கின்றது.


பஸ்ஸில போகேக்க காணுற பொண்ணுக்கு பின்னால போய் தனுஷ் காதலிக்க முயல்வது வழமையான தமிழ் சினிமா. அதுல அதுக்கு ஒரு பிளாஸ்பக். சலிக்க வைக்கிறது. தனுசிற்கு இந்த மாதிரியான முழுமையான ஆக்சன் ஹீரோ சப்ஜெக்ட் பெரிசா ஒத்து வரும்போல தோன்றவில்லை. சில ஆக்ரோசமாக வரவேண்டிய காட்சிகளிலும் மென்மையாக பேசுகிறார். மற்றும்படி வழமைபோல சேவ் செய்யாத அரும்பல் தாடி அதே நடை உடை பாவனையுடன். தமன்னா இடையிடையே சும்மா வந்து போவதால் படத்தில் இருக்கிறார் என்று தெரிகிறார். வடிவேல் இல்லாத ஹரியின் படங்கள் நகைச்சுவையில் தொய்வுதான் என்பதை இந்த படமும் உணர்த்துகிறது. கஞ்சா கறுப்பு கடுமையா கஸ்டப்பட்டு முயன்றாலும் ஒரு சில நகைச்சுவைகளை தவிர மற்றதெல்லாம் பழைய குருடி கதவை திறடி என்கிற கதைதான். 

ராஜ்கிரண் வீரமான வழமைபோல பொறுப்பான அப்பாவாக வந்து போகிறார். பிரகாஸ்ராஜ் கர்ஜிக்கிறார். ஊர்வசி, பறவைமுனியம்மா போன்றோருக்கு கதையில் முக்கியமில்லை என்பதால் போதிய காட்சிகள் இல்லை. ஆனாலும் தனுஷின் தங்கையாக வரும் நடிகை ஸ்றித்திகா ஜொலிக்கிறார் அழகாக தெரிகிறார். இவர் ”மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி” எனும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளாராம்! (ஆனால், இவரை நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை அம்மு என்றே பிழையாக அடையாளங்கண்டு முதலில் பதிவிட்டிருந்தேன். அந்த பிழையை சுட்டிகாட்டி உறுதிப்படுத்தி திருத்திய நண்பர் நிராதன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்).

ஸ்றீத்திகா
படத்தின் இன்னுமொரு பிளஸ் பொயிண்ட் என்றால் அது பாடல்கள்தான். தேவிசிறிபிரசாத்தின் இசையில் பாடல்கள் முதலேயே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆறு, சிங்கம் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது தடவையாக ஹரியின் படத்துக்கு இசையமைக்கும் வாய்பை பெற்றிருக்கிறார் தேவிசிறிபிரசாத். (ஒரே பாணியிலேயே DSP இசையமைப்பதால் இவரை எனக்கு பிடிக்காத போதிலும் இவரின் மன்மதன் அம்பு, வேங்கை பாடல்கள் என்னையும் நன்றாகவே கவர்ந்திருக்கின்றது). படத்தின் திரைக்கதை படத்தை தூக்கிவிடாவிட்டாலும் பாடல்கள் அந்த வேலையை செய்ய முனைத்திருக்கிறது. கார்த்திக்கின் குரலில் ”காலங்காத்தால” பாடல் பலரின் விருப்ப பாடலாக தற்போது மாறியுள்ளது. 

சுருங்ககூறின் இந்தபடம் Typical ஹரியின் அம்சங்கள் இருந்து கொண்டு சொதப்பிவிட்ட ஒரு படம். இளைஞர்களுக்கு சும்மா கடமைக்கு பாக்கலாம் ரகம் சற்று பெரியவர்களுக்கு ”ஆளைவிடுடாசாமி” என்னும் ரகத்திலான படம்.
பாவம் சீறிப்போட்டு அடங்கிவிட்டது இந்த வேங்கை.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்