மாற்றப்படும் வரலாறுகள்!

அனைவருக்கும் பொட்டலத்தின் இனிய புதுவருட வாழ்த்துக்கள்!

நான் இங்க சொல்ல வருவது சிறியதொரு தகவல்தான். ஆனால் இவை ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள், இப்போது அற்பசுகங்களில் திளைத்திருக்கும் எமக்கு தெரிவதில் நியாயம் இல்லை. இதை மாதிரி இன்னும் எத்தனையோ எனக்கும் உங்களுக்கும் தெரியாமல் மாற்றப்பட்ட வரலாறுகள் பல இருக்கின்றன. எம்மண்ணை பற்றி மற்றவர்கள் சொல்லும் வரலாறுகளை கேட்டபடி இருக்க நாங்கள் ஒன்றும் கிளிப்பிள்ளைகள் இல்லைதானே. யார்யாரோ எப்பிடியெல்லாம் மாற்றினாலும் பிரச்சினையில்லை. நீங்கள் உங்கள் வாரிசுகளிற்கு வருங்கால சந்ததிக்கு சரியானதை சொல்லுங்கள் அதுவே பெரிய விசயம்.அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் கந்தரோடையில் உள்ள பிரசித்தமான புராதன சிதைவுகள் உள்ள இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எவ்வளவோ காலம் யாழ்ப்பாணத்தில் இருந்து குப்பை கொட்டியிருந்தாலும் மிகவும் அண்மையில்தான் கந்தோரடையில் உள்ள அந்த பிரசித்தம் பெற்ற இடத்திற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ‘கதுறுகொட்ட புராதன விகாரை‘ எனப்பெயரிடப்பட்ட அந்த இடத்தில் விகாரைகள் போன்ற உருவமைப்பில் ஏறாத்தாழ 20 தொடக்கம் 30 வரையிலான புராதன கட்டிட அமைப்புக்கள் காணப்பட்டன.ஆனால் வழமையான, ஏன் சிறிய அளவிலான விகாரைகளைவிடவே அளவில் சிறியனவாக காட்சியளித்தன அவ்உருவ அமைப்புக்கள். அதைப்பார்த்த கணமே என்மனத்தில் பல கேள்விகள்.  தமிழர் பகுதியிலே விகாரைகள் எவ்வாறு முளைத்தன? மிகப்பழைய காலத்திலே பொதுவாக 50mஐயும் விட உயரமான விகாரைகளே அமைக்கப்பட்டன. இதெப்படி 5mலும் குறைவான உயரத்தில் விகாரைகள்? இந்த அளவு விகாரைகளை இதைவிட வேறஇடத்தில் பார்த்ததுண்டா?


எனது கேள்விகளுக்கான பதில்கள் உரியவரிடமிருந்தே கிடைத்தது. அந்த இடத்திற்கு பொறுப்பாக அரசாங்கத்தால் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். கவனிக்கவும் அவர் ஒரு தமிழர். அவரிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்துப்பார்த்தேன். அவர் 40வருடங்களுக்கு மேலாக தொல்பொருட் திணைக்களத்தில் வேலை பார்க்கிறாராம். வேலைக்கு சேர்ந்த காலத்தில் 300/= சம்பளமாம் இப்போ 20 000/=  வரை கிடைக்கிறதாம். அவர் கூறியது இதுதான் "1965 ம் ஆண்டுவரை இது வெறும் அத்திவார அடித்தளங்களாகதான் இருந்தது. பின்புதான் இவ்வாறு விகாரை வடிவமைப்பில் கட்டப்பட்டது. எறாத்தாழ 60அளவான அடித்தளங்களில் 30 வரையிலானவை இப்படி விகாரை அமைப்பில் கட்டப்பட்டது. ஏனையவை அவ்வாறே இருக்கின்றது"இப்படங்களை முகப்புத்தகத்தில் தரவேற்றியபோது பதிவர் பால்குடி போட்ட கருத்து "கந்தரோடையில் புத்த விகாரை இருந்ததுக்கான சான்றல்ல இது. உண்மையில் வட்ட வடிவில் காணப்படும் அடித்தளங்களே இங்கு அகழ்வாராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கப்பட்டன. 1960 ஆம் ஆண்டளவிலேயே விகாரை போன்று வடிவமைக்கப்பட்டது. பழங்காலத்தில் மனிதர்களை புதைக்கப் பயன்பட்ட இடமே இது என்ற முடிவே உண்மையானது."

எனது நண்பர் ஆதி கூறிய கருத்து "பழங்கால நாகர்களின் "முதுமக்கள் தாழி" என்ற இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படும் மிக பெரிய கோள வடிவ மண்பாண்டங்களின் அரை மேற்புறமே இவ்வாறு விகாரைகளாக சொற்திரிபுபடுத்தப்பட்டன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்பதே உண்மை!"

இவர்களின் கருத்திலிருந்து நீங்கள் எது உண்மை என்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறாக வரலாறுகள் மாற்றப்படுவதும் திரிவுபடுத்தப்படுவதும் ஏன் என்று என் போன்ற பாமரர்களுக்கு புரிவதில்லை. உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

பிற்குறிப்பு:அண்மையில் தேரர் ஒருவர் கூறியிருந்தார் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்தது சிங்களவர்தான் என்று. வழமைபோல் இச்செய்தி எல்லா தமிழ் பத்திரிகைகள் வழியேயும் பிரதான செய்தியாக ஆரவாரமாக வந்து கடைசியில் பிசுபிசுத்துப்போனது. அதற்கும் இப்பதிவிற்கும் எதுவிதமான சம்பந்தமம் இல்லை.

தற்கால இசையமைப்பாளர்கள் – சிறுபார்வை

இப்போதைய காலப்பகுதியில் வெளிவரும் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கும் தென்னிந்திய தமிழ் சினிமாவில் உள்ள சில முக்கிய இசையமைப்பாளர்களை பற்றிய ஒரு சிறு அலசலை/ எனது பார்வையை தர இக்கட்டுரை முயல்கிறது . சின்ன வயசிலிருந்து ஒவ்வோர் பாடலை கேட்கின்றபோதும் அதை பாடியவர்கள், இசையமைத்தவர் யார் என்று அவர்களது பின்னணி பற்றி அறிந்து கொள்வதில் நான் காட்டிய ஆர்வம் இதை எழுத என்னை துாண்டியது. முதல் இரு இடங்களை பிடித்து முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்களான A.R.Rahman மற்றும் ஹாரிஷ் ஜெயராஜ் பற்றி ஏலவே அனைவருக்கும் பரீட்சயம் என்பதால் அவர்களை தவிர்த்து ஏனைய சிலரை பார்ப்போம்.

யுவன் சங்கர்ராஜா

மிக இளவயதில்(16) திரைத்துறைக்கு நுழைந்து, பல இளவட்டங்களின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக இருக்கும் இவர், எனது கணிப்பின்படி திறமை அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இளையராஜாவின் வாரிசாகவே திரைத்துறைக்கு அறிமுகமானாலும் தனது திறமையால், முயற்சியால் படிப்படியாக உயர்ந்து தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளார். கைவசம் கூடுதலான படவாய்ப்புக்களை கொண்டவர்கள் வரிசையில் முதலிடத்திலிருக்கும் யுவன் தற்கால இளைஞர், யுவதிகளுக்கு பிடித்தவகையில் இசையமைப்பதில் கைதேர்ந்தவர்.

அதனால்தான் கூடுதலான இளவட்டங்கள் இவரின் ரசிகர்கள். ‘அரவிந்தன்‘ திரைப்படத்துடன் சறுக்கலாக 1996ல் ஆரம்பமான இசைப்பயணம். 1999ல் வெளிவந்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்‘ திரைப்படம் மூலமாக முற்றிலும் மாறியது. அதில் இடம்பெற்ற அனைத்துப்பாடல்களும் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து வாய்ப்புகள் குவியலானது. ‘7G Rainbow Colony‘, ‘காதல் கொண்டேன்‘ இவரது இசையில் வெளியான சில Box Office Hit திரை அல்பங்களாகும். அண்மையில் வெளியான ‘பையா‘ பாடல்களும் சந்து பொந்தெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இசையமைப்பதில் மட்டுமல்லாது தனது சொந்தக்குரலில் Stylishஆக பாடவல்ல திறமைபடைத்த, இவரது சொந்தக்குரல் பாடல்கள் எல்லாம் பாரிய வெற்றியை பெற்றுள்ளது.

G.V.பிரகாஷ்குமார்

இப்போதுள்ள இசையமைப்பாளர்களில் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் GVற்குதான் எனது கணிப்பில் முதல் இடம். திரைத்துறைக்கு செல்வாக்கால் சுலபமாக இளவயதில்(19) நுழைந்தவராக பார்க்கப்படுகின்ற போதிலும் குறுகிய காலத்தில் பலர் மத்தியில் பிரபலமடைந்தவராக இருக்கிறார் GV.பிரகாஷ். Mozart of Madras என செல்லமாக அழைக்கப்படும் A.R.Rahmanனின் மருமகனான இவர் மிகவும் சிறுவயதிலேயே பல பாடல்களை மாமனின் இசையில் பாடியுள்ளார்.

‘வெயில்‘ படம் மூலமாக பலரும் வியக்கும் வகையில் தனது திரை அறிமுகத்தை ஆணித்தரமாக பதித்தார். வேற்றுமொழிகளில் உள்ள முன்னணி பாடகர்கள் பலரை தனது இசையில் பயன்படுத்தும் இயல்பை கொண்டவர். இவர் பயன்படத்திய பிறமொழிபாடகர்களாக கைலாஷ்கர், அல்க்னா யாக்கீட், சோனு நிகம், டலர் மெஹந்தி, றுாப்குமார் ரதோட் போன்றோரை குறிப்பிடலாம். ரஜினியின் ‘குசேலன்‘ படத்தில் இசையமைக்க கிடைத்த வாய்ப்பானது இவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். Remake பாடல்களுக்கு இசையமைக்ககூடாது என்ற கொள்கையை கொண்ட இவர், இயக்குனரின் வேண்டுகோளிற்கு பணிந்தே ‘ஆயிரத்தில ஒருவன்‘ படத்தில் ‘அதோ அந்த பறவை‘ பாடலை Remake செய்யாது Original பாடலின் Sound trackற்கு மேலதிகமாக இசைச்சேர்க்கை செய்து பழைய பாடலின் சிறப்பு மங்காது தனது இசையால் அந்த பாடலை மெருகேற்றினார். பின்னணி இசையில் இவரது தேர்ச்சியை ‘ஆயிரத்தில ஒருவன்‘ படம் மூலம் நீங்கள் உணரலாம். A.R.Rahmanனின் சாயலில் அல்லது அவரது மெட்டுக்கள் சிலவற்றை இவர் சுட்டு பயன்படுத்துவதாகவும், சில ஆங்கில பாடல்களை ஆட்டையை போடுவதாகவும் இவரை சிலர் குறைகூறுவது மறுக்கமுடியாத உண்மையாகும். பாடகராகவும் விளங்கும் இவர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் கிட்டத்தட்ட 5பாடல்கள் வரை பாடியுள்ளார். யுவன்சங்கர்ராஜாவின் நேரடி போட்டியாளராக இவரை கருதலாம்.

விஜய் அன்ரனி

யாருடைய செல்வாக்குமின்றி திரைத்துறைக்கு நுழைந்தவர்களில் இவரும் ஒருவர். குத்துப்பாட்டுக்களின் தனிக்காட்டு ராஜாவாக திகழும் இவரது இசையில் முதலாவதாக ‘சுக்ரன்‘ படப்பாடல்கள் வெளியாகியது. அந்தகாலத்தில் ‘Suppose’ பாடலை வாயில் முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதல் அல்பம் மூலமாக தனெக்கென தனிமுத்திரையை பதி்த்த விஜய் அன்ரனி பல புதிய இளைய பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவரது இசையில் வெளிவரும் படங்களில் ஒரு குத்துப்பாடலாவது இருப்பதும் அது ஹிட் ஆவதும் தவிர்க்க முடியாதவொன்று. ‘நாக்க முக்க‘ பாடல் இவரது fast beat பாடல்களில் ஒரு மைல்கல்லாகும். இப்படியான பாடல்களுக்கு பாடலை எழுதுவதும் இவரே. ‘சுக்ரன்‘, ‘டிஷ்யும்‘, ‘நான் அவனில்லை‘, ‘நினைத்தாலே இனிக்கும்‘ இவரது இசையில வெளியாகி பலராலும் பேசப்பட்ட பாடல்கள். குத்துப்பாடல் மட்டுமல்லாது இவரது மெலடி பாடல்களும் மிகவும் இனிமையானவை, தனித்தன்மையானவை. ‘அங்காடித்தெரு‘ படத்தில் ‘அவள் அப்படி ஒன்றும்‘ பாடல் அதற்கு மிகச்சிறந்த எடுத்தக்காட்டு.

இமான்

தற்போது இருப்பவர்களில் சிறந்த Remake இசையமைப்பளராக என்னால் பார்க்கப்படும் இசையமைப்பாளராக இமான் காணப்படுகிறார். இவரது பாடல்களை கேட்கும் இசையறிவுள்ள எவரும் இது இமானுடையதென்று இலகுவாக கண்டுபிடிக்கலாம். ஏனெனில் ஒரே ஸ்டைலில் வழமையான instrumentsகளை பயன்படுத்தியே இவர் இசையமைக்கிறார். பெரும்பாலும் வர்த்தகரீதியான மசாலா படங்களுக்கே இவருக்கு வாய்ப்புக்கள் கூடுதலாக கிடைக்கிறது. அண்மையில் வெளியான "மைனா" இதிலிருந்து மாறுபட்டது. விஜயின் ‘தமிழன்‘ படத்தில் இசையமைப்பாளராக இவர் அறிமுகமானார். சொந்த குரலில் நெளிவு, சுளிவுகளுடன் பாடல்களை பாடுவதில் இமான் வல்லவர். இவரும் பல புதுமுகங்களை தனது இசை மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். இமானின் பாடல்கள் ஒரு போதும் சகிக்கமுடியாமல் இருக்காது (சிறிகாந் தேவாவின் தற்போதைய பாடல்கள் போல்) என்று அறியப்படும் Minimum guaranty இசையமைப்பாளர் இவர்.

ஜேம்ஸ் வசந்தன்

Vijay TV, Sun TVகளிலும் இவர் ஆரம்பத்தில் பணிபுரிந்திருந்தாலும், இவரை நான் முதலில் கண்டது பொதிகை TVயிலாகும். ஆரம்பகால பொதிகை TVஐ பார்த்தவராயின் நீங்களும் நிச்சயம் இவரை கண்டிருப்பீர்கள். தொலைக்காட்சி அறிவிப்பாளராக அறியப்பட்ட ஜேம்ஸ் 2008ல் இவரது மாணவரான சசிக்குமாரால் ‘சுப்பிரமணியபுரம்‘ற்கு இசையமைக்க அழைக்கப்பட்டார். அந்தப்பட்த்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால்‘ பாடல் மூலமாகவும், படத்தின் பெருவெற்றியின் மூலமாகவும் உலகம் பூராகவும் இவரது பெயர் பேசப்பட்டது. இவரது எழுச்சி அதன்பின் திரையிசைப்பக்கமாக மாறியது. இவரின் இசையில் வெளியான 4பட பாடல்களும் இனிமையானவையாகும். எனது தெரிவில் இவரது அல்பங்களில் ‘யாதுமாகி‘ முதல் இடம் பெறுகிறது. எனினும் படத்தின் சொதப்பலாலயோ என்னவோ இப்படப்பாடல்கள் வானொலியில் ஒலித்து நான் கேட்டது மிகக்குறைவு. 4படங்களிலும் ஒவ்வோர் Maximum Duet Melody பாடல் இருக்கின்றமை சிறப்பாகும்.

வித்யாசாகர்

தற்காலத்தில் இசையமைத்துக்கொண்டிருக்கும் மூத்த இசையமைப்பாளர்களில் வித்யாசாகர் முதன்மையானவர். இப்போதும் திறமையாக இசையமைத்துவரும் இவருக்கு வாய்ப்புக்கள் தற்போது குறைவாகியுள்ளமைக்கான சரியான காரணத்தை என்னால் அறிய முடியாதுள்ளது. தற்போதைய முதல்தர நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசைவழங்கிய பெருமையுடைய இவர் ஆரம்பகாலங்களில் தனது இசையில் பாடல்களை பாடியும் வந்துள்ளார். அண்மையில் குருவியில் இடம்பெற்ற ‘பலானது‘ பாடலை பாடியவரும் இவரே. S.P.பாலசுப்ரமணியம், இளையராஜாவிற்கு அடுத்த சிறந்த இசையமைப்பாளராக இவரை தான் கருதுவதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். 1989இலேயே தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் கர்ணா படத்தில் ‘மலரே மௌனமா‘ பாடல் மூலமாவே தனது இருப்பை வெளி உலகிற்கு உணர்த்தினார். எனினும் 2001ற்கு பிறகே ஸ்திரமாக தமிழ்மொழிப்படங்களில் இவரால் கால்பதிக்க முடிந்தது. ‘அன்பே சிவம்’, ‘கில்லி’, ‘சந்திரமுகி’, ‘மொழி’, ‘பிரிவோம் சந்திப்போம்’ போன்ற படங்கள் இவரது புலமையை எடுத்தியம்பும் ஒருசில படங்கள். பாடகர் மதுபாலகிருஷ்ணரை தனது ஆஸ்தான பாடகராக உபயோகிக்கிறார்.

தேவிசிறி பிரசாத் (DSP)

மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இசைஇயக்குனராக விளங்கும் DSP தனது அறிமுகத்தை தெலுங்கு படத்திலேயே மேற்கொண்டார். ‘ICE’ மூலம் தமிழில் அறிமுகமானாலும் ‘மாயாவி’ படத்தின் மூலமாகவே தமிழில் பேசப்பட்டார். அரைச்ச மாவையே திருப்பி திருப்பி அரைக்கும் ஒரு கம்போஸராகவும், மேடை நிகழ்ச்சிகளுக்கே (Stage Performer) லாயக்கானவராகவுமே இவரை நான் பார்க்கிறேன். (நல்லா டான்ஸ் பண்ணுவார்). அதாவது இசைச்சரக்கு தீர்ந்துவிட்டது இவருக்கு. இவரது இசையில் இப்போது வரும் பாடல்கள் அனேகமானவை இவரின் பழைய பாடல்களை ஞாபகப்படுத்தும். ஆனாலும் DSPக்கு படவாய்ப்புக்களுக்கு குறைவில்லை. ஏனொ தெரியவில்லை. எனினும் ‘கந்தசாமி‘ பாடல்கள் இதிலிருந்து மாறுபட்டவை. ‘மாயாவி’, ’ஆறு’, ‘உனக்கும் எனக்கும்’ போன்றன இவரின் இசையில் பிரபலமானவை.

ஜோஷ்வாசிறீதர் தீனா தரன் தமன் போன்ற ஏனைய இசையமைப்பாளர்கள் பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம். 

அண்ணே நீங்கதான் கு.ரங்காவோ?

-இந்தப்பதிவில் வரும் நபர்கள் சம்பவங்கள் அனைத்தும் முற்றிலும் கற்பனையே நடைமுறை வாழ்க்கையுடனோ பழைய சம்பவங்களுடனோ ஒத்துப்போனால் அது தற்செயலானதே!!! Strong-Shakthi,  யன்னல்-மின்னல்,  உயரமானஇடம்-மலையகம், குதிரை-யானை, சண்டிஇலை-வெற்றிலை, வாத்து-Duck போன்றமுதல் சொற்களுக்கு பதில் இரண்டாவதைப்போட்டு யோசிப்பீர்களேயானால் அதற்கு நான் பொறுப்பாளி இல்லை-

காலம் காலமாக அரசியல்வாதிகளை நம்பி நாங்கள் ஏமாந்து கொண்டிருக்கும் படலம் தொடர்கிறது. இது எங்களமாதிரி சூடு சுறணை அற்ற எருமைமாடுகளுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்றாலும், இப்படியான நம்பிக்கை துரோகங்களை தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ள எங்களால் முடிவதில்லை. கொஞ்ச நாட்கள் இப்படி கத்திப்போட்டு அடுத்த தேர்தலில் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் நாம்.  அப்படியான ஒரு சொக்கதங்கத்தைப் பற்றித்தான் இப்ப கதை.


இதுவரை காலமும் ”யன்னல்” நிகழ்ச்சியை ”Strong TV”யில் தொகுத்தளித்து முழு தமிழ் மக்களையும் முட்டாளாக்கியவர் மன்னிக்கவும் முழு மக்களுக்கும் அரசியல் அறிவை வளர்த்தவர் இவர். அந்தக்காலத்தில் பல கோமாளி அரசியல்வாதிகளையும், சந்தர்ப்பவாத நரிகளையும் TVயில் மக்கள்முன் கூட்டிவந்து நாறடிச்சவர் இவர். மக்கள் பிரச்சனைகள் பலவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த மக்களின் தலைவன் இவர். முன்மாதிரியான , எடுத்துக்காட்டான சிறந்த செய்தியாளர் இவர்.
 இப்படி வருசக்கணக்கா பிளான் பண்ணி எங்களை மாதிரி ஏமாளிகளை எல்லாம் ஏமாற்றி; நல்லவர், வல்லவர், எல்லாம் தெரிஞ்சவர் என்று அனைவரையும் நம்பவைத்து அரசியலுக்கு நுழைஞ்சார். நாங்களும் எங்களைப்போல சாதாரண, பொதுமக்களின் மனங்கள், துன்பங்கள், துயரங்களை அறிந்த ஒருவர் அரசியலிற்கு வருகின்றார் எல்லோருக்கும் நன்மைதான் என்று எண்ணினோம்.

இவர் அரசியலுக்கு நுழைந்து தேர்தலில் போட்டியிட்ட முறையும் மற்றவர்களைப்போல "பழைய குருடி கதவைத் திறடி” என்ற பாணியில்தான் இருந்தது". அப்போதே யோசித்திருக்க வேண்டும் நாங்கள். கையிலிருந்த ஊடகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி செய்தி அறிக்கைகளின்போது தன்னைப்பற்றிய புகழுரைகளை, தொண்டுகளை மக்கள் மூலமாக சொல்லச்செய்து தன்னுடைய வாக்கு வங்கிகளைப் பலப்படுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் ஆகி மக்களுக்கு சேவை செய்யத்தான் இவ்வாறு கஸ்டப்படுகிறார் என்று நம்பிய பல முட்டாள்களில் நானும் ஒருவன்.

எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவன் (அந்தக்கால பழைய வரலாறுகள் தொடங்கி இந்தக்கால புதிய அரசியல் கோணங்கி கூத்துக்கள் வரை நன்கு அறிந்த, பாண்டித்தியம் பெற்ற ஒருவன் ) தேர்தல் காலத்திலேயே "டேய் இவன் அவன்ர ஆளாடா! இவனை நம்பாயுங்கோ, கொஞ்ச நாளிலேயே அங்கால மாறாட்டி பாருங்கோ" என்று கட்டியம் கூறினான். இவரைப்பற்றி அப்போதே அரசல் புரசலாக செய்திகள் பரப்பப்பட்டாலும் "யன்னல்" நிகழ்ச்சி மூலம் நன்றாக  ஏமாற்றப்பட்ட நான் அதை அப்போது நம்ப தயாராக இருக்கவில்லை.

தலைப்பை பார்த்தே ஊகித்திருப்பீர்கள் யார் அந்த கனவான் என்று? So அவரது பெயர் இங்கே தேவையில்லை. உயரமான இடத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு  "குதிரை"யில் மக்களின் ஆமோக ஆதரவில் அனுப்பப்பட்ட இவர் பதவியேற்று கொஞ்சகாலத்திலேயே தனது வேலையை காட்டினார். குதிரை சவாரி அலுத்ததோ, இல்லை குதிரைப்பாகன் கொடுத்தது காணாதோ தெரியவில்லை முறையான நேரத்தில் 2/3 பெரும்பான்மையை உறுதிப்படுத்த , மக்கள் சமைக்க போட "சண்டிஇலை"தான் கேட்கிறாங்கள் என்று அப்பாவி மக்கள் தலையில் பழியப்போட்டு அங்காலப்பக்கம் நைசாக நழுவினார் நம்ம கதாநாயகன்! மக்கள் சேவையே மகேசன் சேவையாச்சே.

இவர் அங்க இருந்தார், இங்க தாவீனார் என்பதெல்ல பிரச்சனை. தான் அரசியலுக்கு வர முன்னர் எத்தனை அரசியல்வாதிகளை இவ்வாறு ஒரு கட்சியிலிருந்து மற்ற கட்சிக்கு போவதிற்கும், அரசாங்க பக்கம் திடீரென சாய்வதற்கும் தாறுமாறாக கேள்விகளை கேட்டு அவர்களை சந்தி சிரிக்க செய்திருப்பார்! இப்ப தான் செய்யும்போது மட்டும் மக்களின் வேண்டுகோளா? யாரை பேப்பட்டம் கட்டுகிறார்கள் இவர்கள். அரசனுக்கு ஒரு நியாயம் ஆண்டிக்கு ஒரு நியாயமோ.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! முட்டையில மயிர் பிடுங்ககூடாது, என்று விட்டுவிடக்கூடிய விடயம் இல்லை இது. உண்மையில் அரசியல்வாதியின் categoryக்குள் இவரை நாங்கள் அடக்கிவிட முடியாது. எங்களோடு இவ்வளவு காலம் இருந்து நல்ல பிள்ளைக்கு நாடகமாடிவிட்டு இப்போது மட்டும் இப்படியான களவாணி வேலைகளை செய்பவர்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க என்னால் முடியாது. என்னைப்போல புலம்பிய பலரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். இவர்களைப்போன்றோரைவிட தேர்தலுக்கு முன்பே தங்களது கொள்கைகளை அறிவித்துவிட்டு ஒரே பக்கமாக இருக்கும் ‘வாத்து மாமா‘  எவ்வளவோ மேல்.

யோசியுங்கள் மோட்டு மக்களே! ஒருதரையும் நம்பாயுங்கோ.சுயநலமா இருங்கோ. உங்களைப்பற்றி கவனிக்க நீங்கள் ஒருவர் மட்டுமே!
 
எனக்கு தெரிஞ்சவரை குரங்குதான் இப்பிடி ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு அப்பிடி இப்பிடி எல்லாம் பாயும் அப்ப நீங்க கு.ரங்கேதான்!!!

கானல்நீர் கனவுகள்....

ஏறத்தாழ 5மாதங்களுக்கு பிறகு மீண்டும் வலைத்தளத்தில் அலுப்படிப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. படிக்கிறன், படிக்கிறன் எண்டு பந்தா காட்டி 4வருடங்கள் வெட்டியாக என்னையே நான் ஏமாற்றிக்கொண்ட படிப்புக்கு இனி முழுக்கு. 
மீண்டும் வெட்டியாக எனது வாழ்க்கை.! கவிதைக்கும் எனக்கும் எட்டா பொருத்தம் எண்டாலும் சில உணர்வுகளை கொட்ட...

கானல்நீர் கனவுகள்...


இருளின் சுவடுகளில் விட்டில் பூச்சி தேடும் தருணங்கள்
வன்னியில் வரிசையான மாற்றங்களில் சேர்க்கப்பட்ட 
                                           மானங்கள்
நதியின் ஒய்யார வளைவுகளில் முளைவிடும் பாசிக்கள்
நடுநெற்றிப்பொட்டில் பண்பாட்டுடன், மொறட்டுவ 
                                 கம்பஸில் தமிழச்சிகள்


கிராம மண்வாசனையுடன் தமிழில் கௌதம் மேனன் 
                                             மூவீஸ்
உச்சஸ்தாயி குத்துப்பாட்டற்ற விஜய் அன்ரனியின் இசை 
                                             அல்பம்
மூஞ்சிப் புத்தகத்தில் மூக்கை நுழைக்காத இளவட்டுக்கள்
சோமபான மணமறியா இறுதியாண்டு மாணவ பாலகர்கள்


அமாவாசை நடுநிசியில் முழுநிலவை தொட்டுமுத்தமிடும் 
                                             கரங்கள்
மாந்தர் தம் துயரில் மனம் பதைக்கும் அரசியல் தலைகள்
தமிழருக்காக தன்னை அர்ப்பணித்து உயிர்விடும்
                                   ‘கருணை செல்வம்‘
சேமநல பணிகளில் வெறுமையாயிருக்கும் கையூட்டப் 
                                           பெட்டிகள்


மணவறை ஏறும் காலிமுகத்திடல் ஒரு குடைசோடிகள்
பன்னீரில் குளித்து இரணிய கட்டிலில் சேரிப்புற சிறுவர்கள்
கலர்கல்வீடுகளில் யுத்த அங்கிதமற்று எம் அகதிகள் 
தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ நான் தேடிய நாடு!!!

பிற்குறிப்பு: மொறட்டுவை பல்கலைகழக தமிழ்மாணவர்களால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சங்கமம் சஞ்சிகையில் 2010ல் வெளியான ஆக்கம் இது.

கவுட்டுப்போட்டா... நிமித்திப்போடு!!!

புதுமையாக, புத்திசாலித்தனமாக, அறிவுபூர்வமாக,  ஆக்கபூர்வமாக   நடைமுறைசாத்தியமாக சிந்திக்க சிலரால்தான் முடிகிறது. அதனால்தான் அவர்களின் பெயர்கள் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுகிறது.

அப்படியான ஒரு வராலாற்றுச்சாதனை, உலகத்திலே யாரும் செய்திராத புதுமை அண்மையில் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டது. இதில் புதுமை யாதெனில் இச்சாதனைக்கு சொந்தக்காரர்கள் மாணவர்களோ , லெக்சரர்களோ இல்லை! உங்களைப்போல என்னைப்போல சாதரணமானவர்களே.
கிழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கே புரியும் இது எவ்வளவு பெரிய சாதனை என்று!

 கவுண்டதும் நிமிர்ந்ததும்


முன்னரும்


       பின்னரும்

வெட்டிஅகற்றிய மரக்கிளைகள்

அண்மையில் இலங்கையை உலுக்கிய பலத்த மழைக்கு இலக்காகி பல்கலைக்கழக வளாகத்திலிருந்த மிகவும் பழைய பெரிய மரம் 14ம் திகதியளவில் பாறி வீழ்ந்த்து. இது ஏறத்தாழ 10பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்ககூடிய குறுக்கு வெட்டுமுக அடியை கொண்ட பெரிய மரம். விழுந்த இந்த மரத்தால் எந்தவித சேதமும் எவருக்கும் ஏற்படவில்லை. எனினும் பல்கலைக்கழக வளாக்தில் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை பலரும் விந்தையுடன் பார்த்து தங்களது கமராக்களால் படம்பிடித்து கொண்டனர். 
 அவ்வாறு படமாக்கப்பட்ட மொறட்டுவயின் கொரில்லா


சில வானரக்கூட்டங்கள் வீழந்துகிடந்த மரத்தில் ஏறி நின்று போஸ் கொடுத்து பேஸ்புக்கில் படங்களை போட்டுக்கொண்டனர். அந்த தருணத்தில் நண்பர் ஒருவர் வீழ்ந்த மரத்தை என்ன செய்யலாம் என்று கேட்க இன்னோர் புத்திசாலி சிவில் என்ஜினியரிங் படிக்கும் நண்பர் சொன்னார் ”அப்படியே நிமிர்த்தி திருப்பி வளர்க்கலாம்”. பலரும் கிண்டலடிச்ச அந்த கதை இப்ப உண்மையாகிவிட்டது இப்போது.

மரத்தை வெட்டிஅகற்றும் பணியும் ஆரம்பமாகியது. மேல்பாகங்களை மட்டும் வெட்டி அகற்றிவிட்டு கீழே உள்ள பெரிய தண்டுப்பாகத்தை அப்படியே மீண்டும் நிமிர்த்தி வைத்துவிட்டார்கள். திரும்பி வளர்வதற்காக(????????).

நிர்மாணத்துறையில் எவரும் செய்யாத, நினைத்து பார்க்க முடியாத புதிய சாதனை இது. இந்த ஐடியாவை கொடுத்த அந்த புத்திசாலி யார் (மேற்பார்வையாளரோ அல்லது வெட்டிய பணியாளரோ) என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறோம். விபரம் கிடைத்தவுடன் உடனே அறிய தருகிறோம். நண்பர்களே அந்த மரத்துக்கு கீழே செல்பவர்கள் உங்களை இன்சுரன்ஸ் செய்துவிட்டு செல்லுங்கள்!

இந்த பதிவுக்கு ஐடியா தந்த முகுந்தனுக்கும் படங்கள் தந்துதவிய நந்தனுக்கும் நன்றிகள்.!!

திரை தகவல் பெட்டகம்-I

இந்திய திரைப்படங்களிலுள்ள எனக்கு தெரிந்த சில விசயங்களை பகிர இந்த தொடர்பதிவு  ஆரம்பிக்கப்படுகிறது. பெரும்பாலும் திரைஇசை பற்றிய தகவல்கள் இதில் தொடர்ச்சியாக வரும்!


ஞானப்பழம் திரைப்படத்திலுள்ள ”யாருமில்லாத தீவொன்று வேண்டும்” என்ற இந்த பாடலுக்கு யார் இசையமைப்பு என்று கேட்டால் இது நிச்சயம் A.R.RAHMAN னுடையதாகத்தான் இருக்கவேண்டுமென கூறுவோர்தான் ஏராளம். காரணம் இந்தபாடலிலுள்ள  Melodyன் இனிமைதன்மை அந்தகால இசைப்புயலின் பாடலின் சாயலில் இனிமையாக இருக்கும். ஆனால் உண்மையிலேயே இந்த பாடலின் இசையமைப்பாளர் ஒரு சகலகலாவல்லவர். நடிப்பு கதை திரைக்கதை இயக்கம் தயாரிப்பு என்று TR ஐ போலவே பல துறைகளில் கொடிகட்டிபறந்தவர். இவரது படங்கள் பலராலும் ரசிக்கப்படுபவை. ஒரு நக்கல் நையாண்டி நகைச்சுவையுடன் நல்ல கருத்தையும் கொண்டு அமைபவை. ஒரு திருட்டுமுழியுடன் கண்ணாடியையும் போட்டுக்கொண்டு 80களில் கலக்கியவர். இவரது மகனும் நாயகனாக சக்கரைக்கட்டி படத்தில் அறிமுகமாகியுள்ளார். பாரிஜாதம் படத்தில் மகளும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. இப்போது நீங்கள் இலகுவாக பிடித்திருப்பீர்கள் அவர் வேறுயாருமல்ல K.பாக்கியராஜ்.
இப்பாடலின் இசைக்கு சொந்தக்காரர் K.பாக்கியராஜ் என்று எனக்கு வானொலி மூலமே அறிய கிடைத்தது. பலருக்கு அது தெரிந்திராமலிருக்கலாம். அதுதான் பகிர்ந்து கொண்டேன். இந்த வீடியோ பாடலை தேடும்போது கானபிரபா அண்ணா இவர் பற்றி ஏலவே பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. ஏற்கனவே எழுதி Draftல் வைத்திருந்தமையால் இதை பதிவுடுகிறேன். COPY பண்ணிவிட்டேன் என்று யாரும் கூறக்கூடாது அல்லவா! அவரின் பதிவை படிக்க இங்கே அமத்துங்கள் ==>

விட்டுச்சென்ற நாய்க்குட்டி-சுட்டது

எனது அண்ணன் நிருத்தியுடம் இருந்து சுட்ட 2வது கவிதை இது. அவரிடம் சுட்ட 1வது கவிதைக்கு இங்கே கிளிக்கவும்! அவரின் அனுமதியுடன் இங்கே மீள் பிரசுரிக்கிறேன். நாய்க்குட்டியை மனதில் வைத்தே இது எழுதப்பட்டுள்ளது. யாவும் முற்றிலும் கற்பனையே. யாருடைய நடைமுறை வாழ்க்கையுடன் (விண்ணைத்தாண்டி வருவாயா ???, அதே நேரம் அதே இடம்?) ஒத்துப்போனால் அது தற்செயலானதே! 

அழகிய கொஞ்சல்கள், செல்ல விளையாட்டுக்கள்
அடுக்கிக்கொண்டே போகலாம்-அது கொஞ்சமல்ல
பசுமையாக இன்னும் கண் முன்னே....
பட்டத்து முடிசூடா பேரரசனுக்கு
பஞ்சுப்படுக்கையும், ஊட்டிவிட்ட சாப்பாடும்
அன்பு, பாசம் அள்ளி ருசித்தது கூட இன்னும் மறக்கவில்லை
இப்போ மட்டும் எல்லாம் கசந்து விட்டதாக்கும்????


தூரத்தே மீன் வாடை இழுத்துவிட்டதா?
கட்சித்தாவல் மசோதா சட்டசபையில் நிறைவேறியது
சட்ட சாட்சியாகிவிட்டது இப்போது
கனவில் கூட வலிக்குதடா ரணமாய்....
கவ்வி காவு கொண்டது சீவனயெல்லோ!!
ஊள்ளிருந்த நான் தெரிய நியாயமில்லைதான்-அதற்காக
உடனிருந்து செய்தது நியாயமென்றாகி விடாதுதானே....


உணர்ச்சிகளெதுவும் இல்லையென்றாகிய பின்
நாதியற்ற இந்த உடைகள் கனக்கிறது எனக்கு
அதனால்தான் என்னமோ இப்போதெல்லாம் நிர்வாணம்தான்
தனிமை இனிக்கிறது; அமைதி அழைக்கிறது
மனச்சமாதானங்களெல்லாம் சருகுகளாய் காற்றில் பறந்துவிட
கழித்து விடப்பட்ட பண்டமாய் ஓர் மூலையில்
மரங்கள் கூட என்னைப்பார்த்து இரத்தக்கண்ணீருடன்


பாலும் மீனும் ஊட்டியது உண்மை ஆனால்
பாற்கடல், சமுத்திரம் எதிர்பார்த்தது யார் தவறு?
ஏற்ற எஜமான் நான் அல்ல என்று புரிந்துவிட்டது போலும்
அதற்கு ஏதும் புரிந்ததோ இல்லையோ,
எனக்கு ஒன்று நன்றாக புரிந்துவிட்டது
இப்போதெல்லாம் நாய்கள் கூட ஒருநாள் நன்றி மறந்துவிடுகிறதென.......

பிற்குறிப்பு: மொறட்டுவை பல்கலைகழக தமிழ்மாணவர்களால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சங்கமம் சஞ்சிகையில் 2008ல் வெளியான ஆக்கம் இது. 

என்ன ஆக்களப்பா? + திரையிசை தகவல்கள்

மிக நீண்ட இடைவேளையின் பின்னர் மீண்டும் ஒரு சிறிய Refresh எனது வலைப்பக்கத்திற்கு. நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டு இருந்ததை சொல்ல இன்றுதான் நேரம் கிடைக்கிறது.


கடந்த வாரங்களில் சந்து பொந்து எங்கும் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்ட, பேசப்பட்ட விடயம் எல்லோருக்கும் தெரிந்ததே. அது ஒரு கேவலங்கெட்ட விசயமாக இருந்தாலும் கூட அதையொட்டி நடந்த சம்பவங்கள் பல மோசமான எடுத்துக்காட்டுக்களை எம்மத்தியில் விதைத்து சென்றுவிட்டது.

ஒரு ஊடக நிறுவனம் எப்படியெல்லாம் நடக்க வேண்டுமோ அந்த விதிமுறைகளையெல்லாம் கடந்து , அதுவும் செய்தி அறிக்கையில் ஒரு விவரணப்பட(Documentary Film) பாணியில், ஒரு பலான படத்தை தந்து இருந்தார்கள் சண்குழுமம். இதற்குள் ஒவ்வோர் காட்சியையும் விளங்கப்படுத்துகிறார் , பின்னணியில் குரல் கொடுப்பவர். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்கூட காட்டமுடியாத கேவலமான காட்சியை பகிரங்கப்படுத்தியிருந்தனர். SUN TV NETWORKSற்கு ஏற்களவே பல சனல்கள் இருந்தாலும் புதுசா ”SUN ஜல்ஸா” எண்டு ஒரு சனலை தொடங்கி இதை மாதிரி அட்டு படங்களை தொடர்ச்சியாக ஓட்டலாம். நல்ல கிராக்கி இருக்கும் எதிர்காலத்தில். உண்டையை வெளிக்கொணர்கிறோம் என்று சொல்லி  இவர்கள் காட்டிய கூத்துக்கு தண்டனை இல்லையா? திரைப்படங்களுக்கு மட்டும்தான் தணிக்கைகளும் கத்தரிப்புகளுமா??
என்ன நடக்குதெண்டு கூட தெரியாமால் பார்த்த வட்டுக்கள் எத்தனை?


இவ்வாறான போலிச்சாமிகளுக்கு எதிர்ப்பானவர்களுக்கு இந்த செய்தி மிட்டாய் சாப்பிட்டமாதிரி. ஒவ்வொருவராக வாற போற (நல்லவர்களையும் ?) ஆக்களையெல்லாம் போட்டு தாக்கினார்கள். Facebook ல வேற Statusகள் Groupகள் என ஏராளம் ஏராளம். இவ்வாறான (ஆ)சாமிகளுக்கு நான் ஆதரவோ எதிர்ப்போ இல்லை. இவர்கள் எல்லோரும்  தாங்கள்தான் கடவுள் என்று சொன்னதும் இல்லை. எங்கள் வழியைதான் பின்பற்று என்று எனக்கு தெரிந்தவரை வற்புறுத்தியதும் இல்லை. அவ்வாறு இருக்க பிறகு எவ்வாறு அவர்களை மட்டும் குறை கூறுவது.

அவர் கூறிய வசனம் ஒன்று உங்களுக்காக.
”I am not here to prove I am God. I am here to prove YOU are God!”

ஏன் விஜயின் பல படங்களுக்கு நம்பி போய் ஏமாந்தது இல்லையா? இவ்வளவு காலமும் வாழ்க்கைக்கு அவசியமான விடயங்களை அவர்கள் சொல்லும் போது மெச்சிய, அவர்களின் வசனங்களை  பயன்படுத்திய உங்களுக்கு அவருடைய ஒரு கிளிப்பை பார்த்ததும் எல்லாம் பிழையாப் போச்சோ? உங்களுக்கு தேவையான விசயத்தை யாராவது கெட்டவர் சொன்னால் எடுத்துக்கொள்ளாமலா விடுவீர்கள்?  அது உங்களுக்கு உதவும் பட்சத்தில். எனக்கு தெரிந்தவரை அந்த குறிப்பிட்ட (ஆ)சாமி சொன்ன பல கருத்துக்கள் வாழ்க்கைக்கு அவசியமானவை. சொன்னவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அலச முற்படாதீர்கள். இத்தனைக்கும் நீங்கள் என்ன இராமர்களா?


அப்படியெனின் என்ஜினியர், டொக்கராவதற்கு எங்களுக்கு A/L படிப்பிக்கும் ஆசிரியர்கள் எல்லாம் அந்த துறைகளிலல்வா இருந்திருக்க வேண்டும்! வாழ்க்கையை சிறப்பாக, நிம்மதியாக வாழ யாரும் வழிகாட்டலாம். யாரெண்டு தேர்ந்தெடுப்பது, யாருடைய கொள்கையை கடைப்பிடிப்பது ஒவ்வொருவரை பொறுத்தது. இவைகளை விரும்பாதவர்கள்  மற்றவர்களை பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை, குறைகூற தேவையில்லை. புகைப்பிடித்தல் தீங்கு எண்டு மாணவர்களுக்கு படிப்பிக்கும் எத்தனை ஆசிரியர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் புகைப்பிடிப்பதில்லை? சும்மா எல்லாரும் கதைக்கிறாங்கள் என்பதற்காக ஒண்டும் தெரியாம ஒத்து ஊத கூடாது.

<----------------------------------------------------------------------------------------------------->

A.R.Rahman ன் இசையில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா அல்பத்தில் பாடகராக சிம்புவை A.R.Rahman பயன்படுத்துவார் என்று எண்ணியிருந்தேன் அது நடக்கவில்லை. சிம்புவிற்கு ஒருவிதத்திலும் சம்பந்தமில்லாத "காதல் வைரஸ்" திரைப்படத்தில் ”பைலாமோர் கண்ணாரே” பாடலை பாட வாய்ப்பளித்திருந்தார். ஆனால் ஏனொ இப்படத்தில் கொடுக்கவில்லை. 
இவ் அல்பத்தில் அடுத்த புதினம்  காதலர் தினத்தில் தான் அறிமுகப்படுத்திய தேவனிற்கு, நீண்ட கால(10ஆண்டு) இடைவெளியின் பின்னர் சுப்பாஹிட் பாடல் ”அன்பில் அவன்” பாடும் சந்தர்ப்பத்தை கொடுத்திருந்தார்.  


தமிழில் NEW படத்தின்பின் தனது இசையில் இரண்டாவது வாய்ப்பை பாடகர் விஜய் பிரகாசுக்கு ரகுமான் Hossanna பாடல் மூலமாக வழங்கினார். தமிழிற்கு பாடகராக விஜய் பிரகாசை அறிமுகப்படுத்தயவர் யார் தெரியுமா? இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. 2003ஆண்டு ரகசியமாய் படம் மூலம்.

 யுவன்சங்கர்ராஜாவின் இசையில் வெளிவந்த "பையா" படப்பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தாலும் இதே காலத்தில் வெளிவந்த "விண்ணைத்தாண்டி வருவாயா" பாடல்களால் இதன் மவுசு சற்று மங்கியே இருக்கிறது. எனினும் படம் வந்தபின் மக்களால் நிச்சயம் பேசப்படும்.

நாணயம் பட பாடல்களுக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருப்பினும் படத்தின் பின்னணி இசைக்கு சொந்தக்காரர் தமன். இப்படத்தில் வரும் ”காகாகாகக .....” பாடலை இசையமைப்பாளர் தேவிசிறிபிரசாத் இரண்டாவது தடவையாக வேறொரு இசையமைப்பாளரின் இசையில் பாடியுள்ளார்.இதற்கு முன் பத்ரி படத்தில் ரமண கோகுலாவின் இசையில் 3பாடல்களை பாடியமை குறிப்பிடத்தக்கது.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்