உலகத்தரத்தில் தமிழர்கள் - NetBall வீராங்கனை தர்ஜினியுடன் நேர்காணல்

நன்றி : இந்த பதிவு வருவதற்கு முதற்காரணியாக இருந்து நான் கேட்டவுடன் தர்ஜினி அக்காவுடன் தொடர்புகொண்டு, எனது கேள்விகளுக்கு பதில்களை பெற்று தட்டச்சி தந்த மதுரா அக்காவிற்கு எனது கோடான கோடி நன்றிகள். மதுரா அக்காவின் உதவியால் நான் நேரடியாக தொடர்பு கொண்டு மிகுதி கேள்விகளை கேட்ட போது சலிக்காமல் விளக்கமாக பதிலளித்தமைக்கும் வேண்டிய தகவல்களை தந்தமைக்கும் பதிவின் நாயகி தர்ஜினி அக்காவிற்கும் நன்றிகள்.

டிஸ்கி1: கீழே தரப்பட்ட பேட்டி தர்ஜினி அவர்கள் சொன்ன தகவல்களை அடிப்படையாக கொண்டே பதிவேற்றப்படுகிறது. பிழையான மேலதிக சேர்க்கைகள் இல்லை. இந்த பதிவிற்கு உதவி செய்த மதுரா அக்காவும் ஒரு சிறந்த வலைப்பந்து வீராங்கனை. தேசிய சாம்பியனாக வந்த, இலங்கை பல்கலைக்கழக தெரிவு அணியில் இடம்பெற்றிருந்த திறமைசாலி.

டிஸ்கி2: இந்த பேட்டியின் தெளிவான சில பகுதிகள் ஒலிவடிவத்தில் இன்னுமோர் பதிவில் வெளிவரும்.
----------------------------------------------------------------------------

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற அபரிமிதமான திறமையுடைய சிறந்த வலைப்பந்தாட்ட (NetBall) வீராங்கனையான, அழுத்தமாக சொல்லப்போனால் தமிழ் வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் அவர்களை பற்றி நாங்கள் அறிய வேண்டிய பல முக்கிய தகவல்களை, விடயங்களை சிறு கேள்வி பதில் பதிவின் மூலம் பொட்டலம் வலைத்தளம் தரமுயல்கிறது. இந்த பேட்டிக்கு செல்ல முன் அவர் தொடர்பான சில விபரங்களை பார்த்துவிடலாம். 

திறமையுள்ள ஆனால் ஆர்ப்பாட்டமேயில்லாத இந்த வீராங்கனையை நீங்கள் வெள்ளவத்தையின் தெருக்கள் பலவற்றில் கண்டிருக்ககூடும். 2.06m உயரமான யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்போது கொழும்பில் வசிக்கும் இந்த வலைப்பந்து வீராங்கனை கடந்த மாதம் 3ம் திகதியிலிருந்து 10ம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்ற 13வது உலககிண்ண போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரிலும் உயரமானவராக விளங்கியதோடு மட்டுமல்லாது, பலம்பொருந்திய பெரிய அணிகளுக்கெல்லாம் பலத்த சவால் நிறைந்த Shooterஆக விளங்கினார். பல அணிகள் இவரின் shoot செய்யும் பலத்தை கட்டுப்படுத்த பல வித்தியாசமான முறைகளையெல்லாம் கையாள வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சிங்கப்பூர் அணி, றக்பி போட்டிகளில் கையாளப்படும் Lion Dance நுட்பத்தை (ஒரு வீரர் இன்னோர் வீரரை உயர்த்தி தூக்கி பிடிப்பத்தல்) ஒத்த ஒரு முறையை கையாண்டும் இறுதியில் தோல்வியை தழுவிருந்தது.

இவர் இந்த உலககிண்ண போட்டிகளில் இலங்கை விளையாடிய 6 போட்டிகளிலும் கலந்து கொண்டு, தான் முயற்சித்த(attempt) 297 pointsகளில் 7ஐ மட்டும் தவறவிட்டு 290pointsகளை (98%) பெற்றுக்கொடுத்திருந்தார். இந்த உலக கிண்ண போட்டிகளில் பங்குபெறுவதற்கான தகுதிகாண் போட்டியாக 2009ல் இடம்பெற்ற ஆசியகிண்ண போட்டி இருந்தது. இதில் இலங்கை கிண்ணத்தை கைப்பற்ற இவரது பங்குதான் முதன்மையாக இருந்திருந்தது. அந்த போட்டிதொடரில் மொத்தமாக 380pointsகளை பெற்று இப்போட்டிகளில் அனைத்து அணிகளிலும் கூடிய புள்ளிகளை பெற்றுக்கொடுத்தவரில் முதல் இடத்தை பெற்றார். 2வது இடத்தை பெற்ற மலேசிய வீராங்கனை பெற்றது வெறும் 152புள்ளிகளே.

தமிழரான எங்களுக்கெல்லாம் பெருமை சேர்த்து கொண்டிருக்கும் சர்வதேச வலைப்பந்தாட்ட வீராங்கனையான உங்களை இணையத்தின் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

Q: உங்களது குடும்பம் ஊர் பற்றி சிறு அறிமுகத்தை தாருங்கள்?
நான் தர்சினி சிவலிங்கம் புன்னாலைக்கட்டுவன் ஈவினை என்பது எனது ஊர். அப்பாவின் தொழில் விவசாயம். அம்மா வீட்டுத்தலைவி. குடும்பத்தில் 6சகோதரர்கள் நாங்கள். 3 அண்ணாக்கள் ஒரு அக்கா ஒரு தம்பி.

Q: பாடசாலைக்கல்வியை எங்கே கற்றீர்கள்?
வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில்.

Q: வலைப்பந்தாட்டம் மீதான உங்களின் ஆர்வம் எப்போது உருவானது?
பாடசாலை காலத்தில் போட்டிகளில் விளையாடும் போது.


Q: நீங்கள் விளையாடிய காலத்தில் உங்கள் பாடசாலை அணி எந்தளவு தூரம்வரை சிறந்த வெற்றிகளை பெற்றிருந்தது?
எங்கள் அணி கோட்ட மட்டம் வரை சென்றிருந்தது. ஆனால் வெல்ல முடியவில்லை.

Q: பாடசாலை அணிக்கு தலைவியாக இருந்தீர்களா?
இல்லை. சாதாரண வீரராகவே விளையாடினேன். அப்போது கூடியளவு போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. அந்தக் காலம் பிரச்சனையான போர்ச்சூழல் நிறைந்த பாதைகள் பூட்டப்பட்ட காலப்பகுதியாக இருந்தமையால் எனது திறமைகள் மழுங்கடிக்கப்பட்டிருந்தன.

Q: பாடசாலைக்காலத்தில் ஒழுங்காக பயிற்சிகள் வழங்கப்படிருந்தனவா?
பெரிதாக இருக்கவில்லை.

Q: உங்களது பாடசாலைக்காலத்தில் யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட அணி இருந்ததா? அதில் பங்கு பற்றியிருந்தீர்களா?
30 வருடங்களாக யாழ் மாவட்ட அணி இருக்கின்றது. ஆனால் அவர்களால் கூட என்னை கண்டுபிடிக்க முடியவில்லை.

Q: பாடசாலைக்காலத்தில் நீங்கள் விளையாடும் போது எதிர்காலத்தில் இப்படி ஒரு பெரிய வீராங்கனையாக வருவீர்கள் என்று உங்கள் பெறுபேறுகளை கொண்டு எதிர்பார்த்தீர்களா?
நிச்சயமாக இல்லாவிடினும், என்னால் மற்றவர்களை விட இலகுவாக சில இலக்குகளை எட்ட முடிவதுண்டு உதாரணமாக உயரம் பாய்தல், ஆனாலும் தகுந்த பயிற்சி, பாதுகாப்பு இல்லாமல் துணிந்து விளையாட்டுகளில் நான் ஈடுபடவில்லை. காரணம் நான் அப்போது தான் விரைவாக வளர்ந்து கொண்டிருந்தேன், என் எலும்புகளுக்கு பலமான பாதுகாப்பு தேவைப்பட்டது.

Q: உங்களை இவ்வாறு உருவாக்கியதில் முதன்மையானவர்கள் யார் யார்?
பெற்றார், சகோதரர்களை தவிர உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் என்னை முதன்மைப்படுத்தி ஊக்குவித்ததுண்டு. தேசியஅணியில் இடம்பெற்ற காலத்தில், எனது வேலை தளத்தில் இருந்த பயிற்றுனர் விசேடமாக. மற்றும் அவ்வப்போது தேசிய அணியின் பயிற்றுனர்களாக இருந்த அனைவரையும் என்னால் நினைவு படுத்த முடியும். முக்கியமாக என்னை பல்கலைக்கழக அணியிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அணிக்கு அழைத்து சென்ற பத்திமா பிரான்சிஸ் என்பவாவும் முக்கியமானவா.

Q: நீங்கள் உங்கள் பட்டபடிப்பை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்றதாக அறிகிறேன். பல்கலைக்கழக வாழ்க்கை இந்த விளையாட்டு தொடர்பாக உங்களை பட்டை தீட்ட உதவியதா? எவ்வாறான வகையில் உங்களை வளர்த்துக்கொண்டீர்கள்?
நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றதுமே அங்கிருந்தவர்கள் நான் நிச்சயம் தேசிய அணிக்கு போவேன் என்று எதிர்பார்த்தார்கள். அத்துடன் பல்கலைக்கழக அணியிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அணிக்கு விளையாட பாத்திமா பிரான்சிஸ் அவர்களால் சந்தர்ப்பமும் கிடைத்தது பல்கலைக்கழக வாழ்க்கையில்தான். இந்தக்காலப்பகுதியில்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4வருடங்களாக விளையாடியிருந்தேன். அத்துடன் பல்கலைக்கழக அணிக்கு தலமைதாங்கியுள்ளேன். பல்கலைக்கழகங்களிற்கிடையிலான போட்டியில் முதலாவது முறையாக தமிழ் அணி (எமது அணி) இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. அதன்பின் இலங்கை பல்கலைக்கழக அணிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தேன் அதில் 2005ல் Vice-Captainஆகவும் 2006ல் Captain ஆகவும் இருந்திருக்கின்றேன்.

பல்கலைக்கழகத்திலிருந்து இருந்து தேசிய அணிக்கு நான் தெரிவாகி 2005ல் ஆசிய கிண்ண போட்டியில் Best Shooter விருது பெற்றமைக்கு பல்கலைக்கழக உப வேந்தர் எனக்கு தங்க பதக்கம் அளித்து கௌரவப் படுத்தியமை, பரீட்சை காலங்களில் நண்பர்களில் உதவி முதலானவை முக்கியமாக நினைவு கூரப்படவேண்டியவை. தேசியஅணியில் விளையாடிக்கொண்டு எனது பட்டப்படிப்பை சீராக தொடர பல்கலைக்கழகம் போதிய உதவியும் வழங்கியிருந்தது. 
National Champions - All Universities Team -2007கீழே இருப்பவர்களில் இடமிருந்து வலம் 2வது மதுரா அக்கா பின்வரியில் உயரமாக பதிவின் நாயகி

Q: உங்களுக்கு இலங்கை தேசிய அணியில் வாய்ப்பு எப்போது கிடைத்தது? எவ்வாறு கிடைத்தது?
2004ல். நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம் மட்டக்களப்பு மாவட்ட அணிக்காக விளையாடியபோதுதான் தேசிய அணிக்காக தெரிவுசெய்யப்பட்டேன். எனது பெறுபேற்றையும் உயரத்தையும் அடிப்படையாக வைத்தே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

Q: முதன் முதலாக சர்வதேச போட்டியில் விளையாடிய போது அனுபவம் எப்பிடி இருந்தது?
2005ல் ஆசிய கோப்பைக்காக விளையாடினேன், இறுதி போட்டியில் எங்களால் வெல்ல முடியாமை அடுத்து வரும் போட்டிகளுக்கு என்னை நன்றாக தயார் படுத்த வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கியது.

Q: 6ஆண்டு காலமாக சர்வதேச போட்டிகளில் விளையாடிவரும் நீங்கள் விளையாடிய முக்கிய சர்வதேச போட்டிகள் பற்றி சொல்ல முடியுமா? உங்கள் அணி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் பற்றியும் கூறுங்கள்.
ஆசிய கோப்பை வெற்றியாளர்கள் 2009. அவ்வப்போது பிற நாடுகளால் ஒழுங்கு படுத்தப்படும் 5 தேசங்களுக்கிடையிலான, 4 தேசங்களுக்கிடையிலான, சுற்றுப்போட்டிகளும் பிற நாடுகளுடனான சுற்று பயணங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.

Q: இதுவரை எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள்?
ஏறத்தாழ 35 வரையிலானவை சர்வதேச போட்டிகளில் அடங்கும்.

Q: தற்போது Co-Captain ஆக அணியில் இருப்பதாக தெரிகிறது. Co-Captain என்றால் இன்னொரு வீரருடன் இணைந்து தலைவராக பணியாற்றுவதுதானே?
ஆம்.

Q: July மாதம் சிங்கப்புரில் இடம் பெற்ற உலககிண்ண போட்டி உங்களின் முதல் உலககிண்ண போட்டியென நினைக்கிறேன் அப்பிடிதானே? அதன் அனுபவம் பற்றி கூறுங்களேன்.
ஆம். இலங்கை அணி உலக கோப்பைக்கு தகுதி பெற ஆசிய கோப்பையை வெல்வதோடு, உலக தர பட்டியலில் முன்னிடம் வகிக்க வேண்டும். இந்த உலக கோப்பையின் பின்னர் எங்கள் அணி பதின் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகின் மிக சிறந்த அணிகளுடன் விளையாடி அதிக கோல் போடுவது எனக்கு மிக சவாலாக இருந்தாலும், நான் ஒவ்வொரு போட்டியிலும் மகிழ்ச்சியுடன் பங்கு பற்றினேன்.

Q: இந்த உலக கிண்ண போட்டிகளில் சிறப்பாக ஆடிய உங்களுக்கு சிறப்பு பரிசு எதாவது கிடைத்ததா?
Best Shooter விருது கிடைத்தது.

Q: போட்டி தொடரின் சிறப்பாட்டக்காரர் விருது யாருக்கு கிடைத்தது?
தென்னாபிரிக்க வீராங்கனை ஒரு வருக்கு கிடைத்தது.

Q: மற்றைய விளையாட்டுக்களின் தேசிய வீரர்களுக்கு கிடைக்கும் வரவேற்புபோல் அபரிமிதமான திறமை இருந்தும் உங்களுக்கு கிடைப்பதில்லை என்று உணர்ந்திருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு உள்ளுரில் ஆதரவு எப்பிடி இருக்கிறது? ஊடகங்கள் உங்கள் போன்ற திறமையுடைய தமிழ் வீரர்களை சரியாக ஊக்குவிக்கவில்லை என்று சிந்தித்ததுண்டா? எப்படியான பங்களிப்பை அவர்கள் வழங்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?
தோற்கும் அணியில் இருந்து என்னால், அதிக கோல் சிதறாமல் போடா முடிகிறது எனில், எங்கள் அணி கட்டயாம் வெற்றி பெறும் பகுதியில் இருந்திருக்க வேண்டும். எங்கள் தயார் படுத்தலுக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. ஊக்குவிப்பு எங்கள் மனதில் தான் உருவாகவேண்டும். நாம் நினைக்கிற இலக்கை ஒரு போதும் தாழ்த்தகூடாது. ஊடகங்கள் இன்னும் கூடுதலான ஊக்குவிப்பை தரலாம்.


Q: உங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்குவிப்பவர்கள் யார்?
பலர்.

Q:வேலைத்தளத்தில் சிறந்த விளையாட்டு வீரராக உங்களுக்கு மதிப்பு எவ்வாறு இருக்கிறது?
மிகவும் நன்று. அவர்களின் ஆதரவு எல்லை அற்றது.

Q: ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஆதரவுக்கு நன்றி.

பிற்குறிப்பு: இப்படியான பல திறமையான தமிழ்பேசும் வீரர்கள் அனைவரையும் நாம் ஊக்குவித்தோமா? என்றால் விடை பெரும்பாலும் இல்லை என்றே வரும். அற்பனுக்கு பவிசு வந்து அர்த்தராத்திரியிலும் குடை பிடிக்கும் இந்தக்காலத்தில் இப்படியான உலகதரம் வாய்ந்தவர்கள் எம்மிடையே இருக்கும்போது நாம் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கௌரவத்தை கொடுக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்ல உற்சாகத்தை வழங்கி மேலும் சிறப்பாக விளையாட இன்னும் வழி அமைக்கும்.

பல திறமையுள்ள இளையவர்களை ஊக்குவிக்கும் தமிழ் ஊடகங்களே இந்த வீராங்கனைக்கு கொடுக்கவேண்டிய கௌரவம் வழங்கப்படாது இருப்பின் உடனடியாக அதை நிவர்த்தி செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

28 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Unknown சொன்னது…

//30 வருடங்களாக யாழ் மாவட்ட அணி இருக்கிறது ஆனால் அவர்களால் கூட என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை//

இந்தவரிகளின் பின்னால் இருக்கும் உணர்வுகளை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறது... உங்களாலும்!
ஆனால் அதற்கு விளக்கம் கொடுப்பது போல் நீங்கள் - திறமையை வெளிக்கொணர முடியவில்லை - எனக்கூறுவது அந்த வார்த்தைகளின் கூர்மையை மழுங்கடிப்பது போல் உள்ளது கார்த்தி!

நான் அவரைக் கண்டிருக்கிறேன் - வலைப்பந்தாட்ட வீராங்கனை என்பது மட்டும் தெரியும்.அவரின் சாதனைகள் இன்றுதான் தெரிந்துகொண்டேன்!
அவர் மேன்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்!

கார்த்தி சொன்னது…

நன்றிகள் இராஜராஜேஸ்வரி!

ஜீ நான் முதலில் அடைப்புக்குள் ஒன்றும் போடாதுதான் விட்டேன். 2ம் முறை மீள் திருத்தும் போதுதான் அதை போட்டேன். இப்ப எடுத்து விட்டேன். உங்கள் சுட்டிக்காட்டுக்கு மிக்க நன்றிகள்!!

Ashwin-WIN சொன்னது…

அருமையான தகவல்.. நன்றி..

ம.தி.சுதா சொன்னது…

கார்த்தி என்ன இருந்தாலும் இது பதிவலகில் பாராட்டப்படவேண்டிய அருமையானதொரு முயற்சிப் பதிவு..

அவரது 297 முயற்சியில் அத்தனை வீதமான பேறை பெற்றது பெரும் வியப்பான விடயமே அதுவும் யாழில் கண்டுகொள்ளப்படாதா ஒருவர் இப்படி வென்றால் எப்படி இருக்கும்..

M.R சொன்னது…

அருமையான தகவல் நிறைந்த பதிவு நண்பரே ,

பகிர்வுக்கு நன்றி .

வீராங்கனைக்கு எனது சல்யூட்

பெயரில்லா சொன்னது…

ஏற்கனவே இவரை பற்றி அறிந்துள்ளேன். நல்ல முயற்சி உங்களது. நம்மவர்களை ஊக்குவிப்பது நாம் செய்யவேண்டிய கடமை...

Tamil Stories Blogspot சொன்னது…

ஒரு திறமையான வீராங்கனையை பற்றி தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி...
http://tamilpadaipugal.blogspot.com

Mathuran சொன்னது…

முதன்முதலில் இவரைப்பற்றி கேள்விப்படுகிறேன். ஒரு திறமையான தமிழ் வீராங்கனையை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.. நன்றி கார்த்தி

Mohamed Faaique சொன்னது…

ஒரு திறமையான தமிழ் வீராங்கனை பற்றி அறிந்து கொண்டேன். மிகச் சிறந்த பதிவு நன்பரே!!!

sinmajan சொன்னது…

மென்மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி கார்த்தி ..

வடலியூரான் சொன்னது…

தர்சினி அக்காவுக்கு வாழ்த்துக்களையும் எங்கள் ஆதரவையும் தெரிவிப்பதோடு, பதிவுலகில் இவ்வாறான ஒரு புது முயற்சியைத் தொடங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும் நின் பணி

maruthamooran சொன்னது…

நான் நினைக்கிறேன் வடக்கிலிருந்து நீண்ட காலத்தின் பின்னர் இலங்கை தேசிய அணி்யொன்றுக்காக விளையாடியவர் தர்ஷினி என்று. வாழ்த்துக்கள் தர்ஷினி.

புதிய முயற்சிக்கு கார்த்துக்கு பாராட்டுக்கள்.

கார்த்தி சொன்னது…

நன்றிகள் Ashwin-WIN!
மதி.சுதா அண்ணா இவர்கள் போன்றோர் வெளிநாட்டில் இருந்தாலோ அவர்களின் நிலைவேறு எங்கேயோ வைத்து தூக்கி கொண்டாடியிருப்பார்கள். ஆனால் இங்கு போதுமான ஆதரவு இவர்களை போன்ற திறமையுடையோருக்கு இல்லை போல கிடக்கு!!

நன்றிகள் M.R கந்தசாமி Tamil Stories Blogspot!

மதுரன் இவர்களை ஊக்குவிக்க வேண்டியது நமது கடைமை. தெரிந்தவர்களை ஊக்குவிப்போம்.!!

நன்றிகள் Mohamed Faaique மற்றும் sinmajan

கார்த்தி சொன்னது…

நன்றிகள் வடலியூரான் தொடர்ந்தும் இப்படியானவர்களை பற்றிய பதிவுக்கு முயற்சிக்கிறேன்.

மருதமூரான் வேறு சிலரும் இவ்வாறு தேசிய ரீதியில் சாதனை புதிந்திருக்கலாம். அண்மையில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் ஒருவனும் வலைப்பந்தாட்ட தேசியஅணிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தான்.

Rizi சொன்னது…

நல்ல பேட்டி வாழ்த்துக்கள்

Subankan சொன்னது…

தர்சினி அக்கா சாதனைகள் பல புரிய வாழ்த்துக்கள் :-)

niranjan சொன்னது…

nice job da..keep going on.

மாலதி சொன்னது…

அருமையான பகிர்வு

M.R சொன்னது…

கார்த்திக் நண்பருக்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நிருத்திகன் சொன்னது…

அக்காவின் திறமை உலகறிந்ததாக இருந்தாலும் எம்மில் பலருக்கு அவரின் சாதனைகள் தெரியாததாக இருந்தது. நன்றிகள்.
சரி இப்பிடி தமிழ் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தியதற்காக இப்ப நாங்க என்ன உன்னையும் ஒரு பேட்டி எடுத்து ஒரு பதிவு போடோணும். அப்பிடிதானே!

வந்தியத்தேவன் சொன்னது…

அருமையான பதிவு. தர்ஜினியை வெள்ளவத்தையில் அடிக்கடி கண்டிருக்கின்றேன் ஆனால் அவர் ஒரு வலைப்பந்தாட்ட வீராங்கனை என்பது பின்னாளில் பத்திரிகைகள் மூலம் தான் அறியக்கிடைத்து. உங்களின் பேட்டியின் மூலம் அவரைப் பற்றிய பல விடயங்கள் அறிந்தேன், நன்றிகள் கார்த்தி.

நிரூபன் சொன்னது…

மச்சி, கடைசி வாங்கிலிருந்து கடைசிப் பின்னூட்டத்தோடு வாரேன்,

பதிவுலகில் நம்மவரின் திறமையினை இணைய வலையேற்றி, உலகத் தமிழ் உறவுகளோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் நல் முயற்சியிற்கு முத்தாப்பாய் தர்ஷினியின் பேட்டினை வலையேற்றியிருக்கும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்!

நிரூபன் சொன்னது…

தேசிய அணியில் இடம் பிடித்துத் தமிழருக்கெல்லாம் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும், தர்ஷினியின் திறமைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள உதவிய உங்களுக்கும், சகோதரி மதுராவிற்கும் நன்றி மச்சி.

jee சொன்னது…

அருமை கார்த்தி, இன்னும் பல பல பதிவுகளை வலைஇட என் வாழ்த்துக்கள்.

நான் தர்ஜி அக்காவை வெள்ளவத்தை தெருக்களில் கண்டதுண்டு, அக்காவின் உஜரத்தை பார்த்து புன்னகைத்ததும் உண்டு. வெட்கப்படுகிறேன்.... பின்புதான் எனக்கு தெரியும் அக்கா ஒரு வலை பந்து வீராங்கனை என்று, ஆனால் இந்த அளவுக்கு சர்வதேச ரீதியில் விளையாடும் சாதனை வீரர் என்பது உங்கள் முலமே தெரிய வந்தது கார்த்தி. நன்றி. தமிழ் வீரர் ஒருவர் இலங்கை சர்வதேச அணியில் விளையாடுவது எமக்கெல்லாம் பெருமைதான்....

அக்கா மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்

இதனை நீங்கள் ஊடகங்களுக்கு அனுப்பி பார்க்கலாமே கார்த்தி?

கவி அழகன் சொன்னது…

வாழ்த்துக்கள் அருமையான முயற்சி

அனுபவம் சொன்னது…

பல்கலைக்கழகத்தில் என்னோடு பயின்ற தர்சினி உயரத்தில் மட்டுமன்றி புகழிலும் உயர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத்தருகின்றது. ஓங்கட்டும் புகழ்!

அம்பலத்தார் சொன்னது…

நம்மவர் சாதனையை போற்றுவோம். தர்ஷினி உலகளவில் பல சாதனைகளை செய்ய வாழ்த்துக்கள். பதிவு இட்டமைக்கு நன்றி கார்த்தி

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்